முதலில் மனம்; பிறகே பள்ளி!

- கி.வீரமணி

எல்லா பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தைகள் - பிள்ளைகள் - மிகச் சிறந்த கல்வி அறிவு பெற்று நல்ல பண்புகள் உள்ளவர்களாக அமையவேண்டும் என்ற விருப்பம் பெரிதும் உண்டு. தவறில்லை, அது நியாயமும்கூட.
ஆனால், அதற்குரிய கடமைகளைப் பெற்றோர்கள் ஆற்றியிருக்கின்றோமா என்று எண்ணிப் பார்க்கவேண்டாமா?
பிள்ளைகளை ஒழுங்குபடுத்துவதாகக் கருதிக்கொண்டு, அநேக பெற்றோர்கள் கடுமையான தண்டனையை அவர்களுக்கு வழங்குவதோடு தம் கடமை முடிந்துவிட்டது; எஞ்சியதை பள்ளி, கல்லூரி, ஆசிரியர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்தால், அதைவிட கேலிக் கூத்தான பொறுப்பற்றதனம் வேறு கிடையாது.
வயலில் நல்ல விளைச்சலை எதிர்பார்க்கும் விவசாயி, அதற்குமுன் அந்த மண்ணைப் பக்குவப்படுத்தி, உழுது, உரம் போட்டு, நீர்ப் பாய்ச்சி, களையெடுத்து பல்வேறு கழனிப் பணிகளைப் பார்த்தால்தானே, அவரது விழைவும், விருப்பமும் வினையாக - விளைச்சலாகக் கிட்டும்.
தவறாக நடந்து ஒழுங்கைமீறும் ஆளாகும் அந்தப் பிள்ளையை ஒழுங்குபடுத்துவதற்குத் தண்டனை மட்டும் சரியான முறையாகாது; பல நேரங்களில் அது எதிர் விளைவையேகூட உருவாக்கி விடுகிறது!
(1) அக்குழந்தையின் மோசமான நடத்தைக்கு என்ன மூலகாரணம் என ஆராய்தல்
(2) அந்தக் காரணத்தை அறிவதோடு அதுபற்றி சரியான புரிந்துணர்வு கொள்ளுதல்
(3) அப்படி புரிந்துணர்வின்மூலம் அறியும், ஏற்படும் இயல்பான (பெற்றோரின்) மனநிலை
(4) மீண்டும் அதே தவறை அந்தப் பெண்ணோ, பிள்ளையோ திரும்பவும் செய்யாமல் இருக்க இவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய அணுகுமுறை-
இந்த நான்கும் மிக முக்கியமானவை.
பல பெற்றோர்கள் தண்டனை தருவதன்மூலம் குழந்தையின் ஒழுங்கீனத்தைச் சரிப்படுத்தி விடலாம் என்று நினைக்கின்றனர். அது தவறு. தண்டனைக்கும் (Punishment) ஒழுங்கு முறையைக் கற்பித்தலுக்கும் (discipline) இடையே உள்ள வேறுபாட்டை உணராதவர்கள் அவர்கள்!
இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டினை விளக்கும் வகையில், அமெரிக்காவின் வர்ஜினியா பல்கலைக் கழகத்தில் வெளியான ஒரு கட்டுரையில் மிகத் தெளிவாக விளக்கியுள்ளனர்.
Punishment ‘focuses’ on the child. Whereas discipline ‘targets the act’
"தண்டனை என்பது குழந்தைகளைக் குறி வைத்து தரப்படுவது. ஒழுங்குபடுத்துவது என்பது செயலைக் குறி வைத்துத் தாக்குவது."
நாம் குழந்தைகளை நேசிக்கவேண்டும்; அதே நேரத்தில் அவர்களது ஒழுங்கு மீறிய செயல்களை விலக்கிட கூடிய மனப்பாங்கினை நாம் பெறவேண்டும்.
குழந்தைகளிடம் நாம் ஒழுங்கு முறையை எதிர்பார்க்கும்போது, நம்மிடம் அத்தகைய பழக்கங்கள் - முறைகள் இருக்கிறதா? என்று நம்மை நாமே கேட்டு - மாற்றிக் கொள்ளவேண்டிய அவசியம் - திருத்திக் கொள்ளவேண்டிய தேவை இருப்பின் திருத்திக் கொண்டுவிட்டு பிறகு அவர்களைத் திருத்த முற்படவேண்டும்.

நபிகள் பெருமானாரிடம் தம் பையனை அழைத்துச் சென்று, இவன் எப்போதும் சதா இனிப்புகளையே சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறான். அவனுக்கு தாங்கள் புத்திமதி கூறிட வேண்டுகிறேன் என்றாராம் ஒரு தாய்!
அதைக் கேட்ட நபிகள் நாயகம் அவர்கள், தாயே, ஒரு வாரம் கழித்து அவனை அழைத்து வா, பிறகு புத்திமதி கூறுகிறேன் என்றாராம்!
அத்தாய்க்குப் புரியவில்லை - என்ன எவ்வளவு பெரியவர் இவனுக்கு அறிவுரை கூற ஏன் ஒரு வாரம் கழித்து வரச் சொல்லுகிறார் என்று.
அதேபோல் வந்தார்; அறிவுரை கூறினார். கூறிவிட்டு, அத்தாயின் சந்தேகத்தைப் போக்கும் வண்ணம் சொன்னாராம் நபிகள் நாயகம், நானே நிறைய இனிப்பு சாப்பிடும் பழக்கம் உடையவனாக இருந்தேன். அதைவிட்டு ஒரு வாரமாகிறது. அதன் பிறகு அந்தப் பையனுக்குப் புத்திமதி கூறிடும் தகுதி எனக்கு ஏற்படுகிறது. எனவேதான் தாமதித்து வரச் சொன்னேன் என்றாராம்.
அதுபோல, ஆசிரியர்களாயினும், பெற்றோர்களாயினும் அறிவுரை கூறுமுன்பு, உங்களை அதற்குத் தகுதியாக்கிக் கொண்டு கூறும் பழக்கத்தைக் கைக்கொள்ளுவோம்!
பள்ளியில் தள்ளிவிட்டால், பொறுப்பு முடிந்தது என்று கருதிடும் பெற்றோர்கள்தான், அவர்கள் பிள்ளைகளின் முதல் எதிரிகள்!
அவர்களோடு கலந்து பழகி, முதலில் குழந்தைகளின் மனதில் இடம் பிடியுங்கள்! பெரிய பள்ளியில் இடம் பிடிப்பதைவிட இது மிகமிக முக்கியம் இல்லையா?