பிரதி எடுக்க

ரயில் அறிவியல்

ரயில் என்ற தொடர் வண்டியே அறிவியல் கண்டு பிடிப்புதானே - அப்புறமென்ன தனியே அறிவியல் ரயில் என்று கேட்கத் தோன்றுகிறதா?
காரணம் இருக்கிறது. எந்த அறிவியல் கண்டுபிடிப்பாக இருந்தாலும், அதை முதலில் பயன்படுத்தத் தயாராக இருப்பது அறிவியலுக்கு சற்றும் தொடர்பில்லதா மூடம்நம்பிக்கை வியாபாரிகள்தான். சபரிமலைக்கு சிறப்பு ரயில், திருப்பதிக்கு சிறப்பு ரயில் என்று மூடநம்பிக்கை ரயில்கள் ஆங்காங்கு திரிவதால் அறிவியல் ரயில் என்று இதனை அழுத்திச் சொல்ல வேண்டும்.
சரி, என்ன புதிதாய் இந்த அறிவியல் ரயில்?
இந்திய - ஜெர்மனிய கூட்டு முயற்சியாக இந்தியாவெங்கும் வலம் வந்துகொண்டிருக்கிறது இந்த ரயில். சுமார் 15000 கிலோ மீட்டர்கள் பயணித்து 57 நகரங்க ளுக்கு செல்லவிருக்கிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 30 அன்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும், ஜெர் மன் சார்பில் அங்கெலா மார்க்கெலும் டில்லி யில் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
மொத்தம் உள்ள 16 பெட்டிகளில் 12 பெட்டிகள் முழுதும் வண்ண மயமான வடிவமைப்பில் கண்ணை கவரும் விளக்கப்படங்களும், காட்சி தொகுப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. கல்லூரி மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குப் பயன்படக்கூடிய விதத்தில் மொத்தம் 300 படங்கள், 150 வீடியோ காட்சிகள் இருக்கின்றன.
அறிவியலின் அடுத்தக் கட்டம் பற்றிய ஆவலைத் தூண்டும், பொறிக்கிளப்பும் புதிய சிந்தனைகள் (Igniting Ideas) ஒவ்வொரு பகுதியிலும் உண்டு. ஆழமா கவும் நல்ல விளக்கங்களுடனும் ஒவ்வொரு பகுதியும் விளக்கப்பட்டிருக்கிறது.
எடுத்துக்காட்டாக உலகம், பிரபஞ்சம் தோன்றிய விதம், அது வளர்ந்தது எப்படி? கருந்துளை என்றால் என்ன? பெரு வெடிப்புக் கொள்கை என்றால் என்ன? மனித மூளை இயங்கும் முறை, ஜீன்கள் என்ன பங்கு வகிக்கின்றன? உயிர் தொழில் நுட்பம்...இப்படி அறிவியலின் முக்கிய பிரிவுகள் அனைத்தும் விளக்கப் படுகின்றன.
இதன் 13-ஆவது பெட்டியில் க்ஷஹளுகு நிறுவனத்தின் சார்பில் குழந்தைகள் ஆய்வகம் (Kids Lab) அமைக்கப்பட்டுள்ளது. அங்கு புதிய வேதியியல் விளைவுகள், புது முயற்சிகள் போன்றவற்றை குழந்தை களுக்கு நேரடியாக செய்து காட்டுகிறார்கள். ஆர்வத்தோடு பிள்ளைகள் பார்க்கிறார்கள். சென்னைக்கு மார்ச் மாதத் தொடக் கத்தில் வந்திருந்த ரயிலை சுமார் 1 லட்சம் பேர் பார்த்து சென்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கோவை, கன்னியாகுமரி ஆகிய நகரங்களுக்கு இந்த ரயில் வரவிருக்கிறது. ஆங்காங்குள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்கள் அல்லவா!
ஆனால் இது மட்டும் போதாது. இன்னும் கடைக்கோடி கிராமம் வரை போகும் அளவுக்கு எளிய அறிவியலையும், மூட நம்பிக்கை ஒழிப்பையும் இன்னும் வேக மெடுக்கும் அறிவியல் ரயிலாக அரசு கொண்டு செல்ல வேண்டும்.

-பிஞ்சண்ணா