குட்டிக்கதை

ஒரு கலைமான் மிகுந்த தாகத்துடன் ஓடைக்குத் தண்ணீர் குடிக்க வந்தது. தண்ணீரில் தெரியும் தன் நிழலைப் பார்த்தது. நிழலில் தெரியும் தன் உருவத்தையும், வித்தியாசமான கொம்பு களையும் பார்த்து மிகவும் பெருமிதம் கொண்டது தனது பலமான கொம்புகளையும் பார்த்து மிகவும் பெருமிதம் கொண்ட அது, தனது பலஹீனமான ஒல்லியான கால்கள் பற்றி வருந்தியது. இவ்வாறாக அது தன் கால்களைக் குறித்து அவமானப்பட்டுக் கொண்டிருந்த போது அந்த ஓடைக்கு வந்த சிங்கம், கலைமானைக் கண்டு அதன் மேல் பாய்ந்தது.
சிங்கம் தன் மேல் பாய்வதை அறிந்த கலைமான் உடனே ஓட்டம் எடுத்தது. எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடிச் சிங்கத்திடமிருந்து தப்பிப் பாதுகாப்பான இடத்திற்குச் சென்றது. சிங்கத்திடமிருந்து தப்பி விட்டோம் என்று அது மீண்டும் காட்டிற்குள் புகுந்த போது அதன் கொம்புகள் ஒரு கொடியில் சிக்கிக் கொண்டன. அவற்றை எடுக்க முடியாமல் அது திணறிக் கொண்டிருந்த போது சிங்கம் வேகமாக அங்கே வந்து அதனைப் பிடித்துக் கொண்டது.
சிங்கத்திற்கு இரையாகிக் கொண்டிருந்த கலைமான், எனது புத்தி போன போக்குக்கு நல்ல பரிசு கிடைத்தது. எந்தக் கால்கள் என்னைக் காத்தனவோ, அவற்றை நான் இழிவாக எண்ணினேன். எந்தக் கொம்புகள் எனக்கு அழகு என்று பெருமைப்பட்டேனோ, அவற்றால் எனக்கு அழிவு நேர்ந்தது, என்றது. |