பிரதி எடுக்க

அறிவு விளையாட்டு

கேரம் விளையாட்டில் உலகச் சாம்பி யன் ஆகியிருக்கிறார் ஒரு தமிழ்ப் பெண். சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த இருதயராஜ் என்கிற ஏழைத் தொழிலாளி யின் மகள்தான் இச்சாதனையைப் படைத்தி ருக்கிறார். அந்த 23 வயது இளம்பெண்ணின் பெயர் இளவழகி.
10ஆம் வகுப்பு வரை படித்துள்ள இளவழகிக்கு 6 வயதிலிருந்தே கேரம் விளை யாட்டில் ஆர்வம் மிகுந்து காணப்பட்டது. அப்போதே குறிபார்த்து காய்களைக் குழியில் தள்ளுவதில் கெட்டிக்காரியாம். வறுமையின் பிடியில் இருக்கும் இருதயராஜால் சொந்தமாக ஒரு கேரம் போர்டு கூட வாங்கித் தர இயலவில்லை. அவர்கள் குடியிருக்கும் பகுதியில் பொதுவில் உள்ள ஒரு கேரம் போர்ட்டில் தான் இளவழகி விளையாடிப் பழகியுள்ளார்.
இளவழகியின் விளையாட்டுக்கு ஒரு வகையில் அவரது தந்தை இருதயராஜ் தான் வழிகாட்டியாக இருந்துள்ளார். அவரும் கேரம் விளையாட்டில் கெட்டிக்காரர்.
13 வயதில் தேசிய சாம்பியன்; மாலத் தீவில் நடந்த போட்டியில் பங்கேற்று ஆசிய சேம்பியன் என பல வெற்றிகளைப் பெற்ற இளவழகி, அண்மையில் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடந்த உலக அளவிலான கேரம் போட்டியில் பங்கேற்றார். இளவழகி பிரான்ஸ் செல்ல முழு அளவில் உதவிகளைச் செய்தவர் அய்.ஏ.எஸ். அலுவலரான கிறிஸ்து தாஸ் காந்தி. தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறையினர் செயலாளரான இவர்தான் பல வகையிலும் இளவழகிக்கு ஊக்கம் கொடுத்து வருகிறார்.
சென்னை, வியாசர்பாடி கன்னிகாபுரம் அரசினர் ஆதி திராவிடர் பெண்கள் மேல் நிலை பள்ளிகளில் 10 வகுப்பு வரை படித்த இளவழகி, தேர்ச்சி பெறவில்லை. ஆனால் தொடர்ந்து கேரம் விளையாட்டில் இடை விடாது பயிற்சி எடுத்து வந்துள்ளார்.
இந்த ஆண்டு பிரான்சில் நடந்த கேரம் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான், ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, இத்தாலி, கனடா, மாலத் தீவுகள், கொரியா, அமெரிக்கா ஆகிய 12 நாடுகள் பங்குபெற்றன. இந்தியாவிலிருந்து சென்ற 8 வீரர்களில் 6 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவராகத்தான் இளவழகி விளையாடி உலகச் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இவரது சாதனையில் இன்னொரு சாதனையும் உள்ளது. இந்தப் போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்ட பெண்களில் மிக குறைந்த வயதுடையவர் இளவழகி (வயது 23) என்பது தான் அந்தச் சாதனை.
உடல் வலு விளையாட்டில் மட்டுமல்லா மல் அறிவுபூர்வமான விளையாட்டிலும் தமிழர்கள் பங்கேற்று வெற்றியீட்ட வேண்டும் என்ற கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக இளவழகியின் வெற்றி அமைந்துள்ளது.
அறிவு என்பது உயர்தட்டு மக்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல; அறிவு அடித்தட்டில் வாழும், வறுமையில் வாழும் மக்களுக்கும் வசப்படும். உரிய பயிற்சியும், வழிகாட்டுதலும் ஊக்கமும் முயற்சியும் இருந்தால் உலகை வெல்லலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இளவழகி திகழ்கிறார்.
நாட்டின் ஏழ்மை, வறுமை, வேலை யின்மை போன்ற பல சிக்கல்களைப் பற்றி மக்களைச் சிந்திக்க விடாமல் செய்யும் கிரிக்கெட் போட்டியை அரசே தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது. பிற விளையாட்டுகள் உரிய கவனம் செலுத்தப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றன. இன்று கேரம் விளையாட்டில் ஒரு தமிழ்ப் பெண் இந்தியாவிற்குப் பெருமை தேடித் தந்துள்ளார். வறுமையில் வாடும் இளவழகி குடும்பத்திற்கு அரசுகள் உதவி செய்வதற்கு உடனடியாக முன்வரவேண்டும். அரசுகள் மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களும் இளவழகி போன்ற தியமையானவர்களைத் தத்தெடுத்துக் கொள்ளலாம். இந்த வகையில் தமிழ் மையம் சார்பில் ரூ. 1 லட்சம் பரிசு வழங்கிய நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் கனிமொழி பாராட்டுக்குரியவர்.
திறமையாளர்களைத் தேடிக் கண்டெ டுத்து உதவி செய்து ஊக்கமளித்தால் இன்னும் பல இளவழகிகளை உருவாக்க முடியும்.


கடுமையா உழைச்சேன்

இத்தனை சாதித்தும் குடும்பம் இன்னும் கஷ்டப் படுதேனு வருத்தமா இருக்கு. நான், தமிழ் மீடி யத்துலதான் பத்தாவது வரைக்கும் படிச்சேன். அப்பா மீன்பாடி வண்டி ஓட்டறார். அதுல எங்க வண்டி ஓடுது. கை தானே எனக்கு மூலதனம். அதனால, வீட்டுல என்னை எந்த வேலை யும் செய்ய விடமாட்டாங்க. காய்கறி கூட நறுக்க விடமாட்டாங்க; ஒரு நாளும் சமை யல் வேலை செஞ்சது கிடையாது. அப்பா இப்படிக் கஷ்டப் படறப்போ, பொறுப் பில்லாம கேரம் விளையாடுறியேனு நிறைய பேர் என்னை மட்டமாப் பேசு னாங்க. வீட்டுல ஊக்கம் கொடுத்தாலும், பொருளாதார நிலைமையும் இது மாதிரி யான பேச்சுகளும், என்னை ரொம்பவே தொந்தரவு பண்ணுச்சு. இதுக்கெல்லாம் சரியான பதில் தரணும்னு கடுமையா உழைச்சேன். இன்னைக்கு சாம்பியன் ஆகியிருக்கேன். ஒரேயொரு சந்தோஷம், நான் பிரான்ஸிலிருந்து வந்தபோது, எனக் காக ஏர்போர்ட்டுல மீடியா காத்திருந்தது. இதுமாதிரியான அனுபவம் இது வரைக் கும் எந்த கேரம் சாம்பியனுக்கும் ஏற்பட்டதில்லை

- இளவழகி.