குழந்தைகள் சினிமா
இயல்பான நடிப்பு
- சமன்
 |
நடிப்பு மனித குலத்தின் அடிப்படைக் கலைகளில் ஒன்று. ஆதி மனித இனம் வேறு வகையான விலங்கு வருவதை அதன் பாவனைகளைப் போல நடித்துக் காட்டத் தொடங்கியதிலிருந்தே இதன் வரலாறு தோன்றுகிறது. போலச் செய்தல் மட்டும் நடிப்பல்ல. நடிகர், தன்னை நடிக்கும் கதா பாத்திரத்தோடு இணைந்து இயைந்து நடிப்பது தான் மிகச் சிறந்த நடிப்பாகக் கருதப்படுகிறது.
உலகளவில் இப்படி நடிப்பில் வல்லவர்கள் எத்தனையோ பேர் இருந்தாலும் குழந் தைகள் நடிக்கிறார்கள் என்றால் அதை ரசிப்பதே தனி சுகம். குழந்தை நட்சத்திரம் என்று கொண்டாடப்படும் வாய்ப்பு மிகச்சிறிய வயதிலேயே அமையப் பெறுவது மிகப் பெரிய ஒன்று.
அப்படியே குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தாலும் அதற்கு சிறந்த இயக்குநர்கள் அமைந்தால் தான் இயல்பான நடிப்பை வெளிப்படுத்த முடியும்.
இந்திய சினிமாவிலும், குறிப்பாகத் தமிழ் சினிமாவிலும் ஏராளமான குழந்தை நட்சத்திரங்கள் உருவாகியிருக்கிறார்கள். இவர்களில் குழந்தை நட்சத்திரமாக இருந்து பின்னாளில் மிகப் பெரிய திரை நடிகர்களாக வந்தவர்கள் ஏராளம்.
தமிழில் அறிமுகமாகி இன்று இந்தியத் திரையுலகில் சிறந்து விளங்கும் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ஷாலினி, ஷாமிலி, தருண், மீனா, சிலம்பரசன், குட்டி பத்மினி என்று பிரபலமா னவர்களாக இருந்தாலும், பின்னாளில் பிரகாசிக்கவிட்டாலும் குழந்தை நட்சத்தி ரங்களாக அனைவரின் கவனத்தை ஈர்த்தி ருந்த சுஜிதா, கல்யாணி, வினோதினி, அஞ்சு, சித்ரா, டிங்கு, ராபர்ட் போன்றவர்களானாலும் குழந்தை நட்சத்திரங்களுக்கென்று தனி மதிப்பு உண்டு. இன்று வரை தங்கள் பிள்ளைகள் டிங்குவைப் போலிருப்பதா கவும், ஷாலினி போல் முடி வைத்திருப்பதாக வும் பெருமைப்படும் பெற்றோர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். இந்தித் திரையுல கிலும் இன்று கொடி நாட்டும் அமீர்கான், ஹ்ரித்திக் ரோஷன் போன்றோர் குழந்தை நட்சத்திரங்களாக இருந்து வந்தவர்கள் தான். அந்த வரிசையில் இப்போது இன்னொருவர் வந்திருப்பதாக இந்திப் பத்திரிகைகள் கணிக்கின்றன. அவனது ஆற்றலைக் கண்டு பிரமித்துப் போய் எழுதுகின்றன.
அதீத சக்தியுடனும், அதிகப் பிரசங்கித் தனமாகவும், தெய்வத் தன்மை பொருந்திய குழந்தையாகவும் தான் அதிகமான குழந்தை நட்சத்திரங்கள் பயன் படுத்தப் பட்டிருக்கி றார்கள். குழந்தைகளின் இயல்பை வெளிக்காட் டுகிற மாதிரியான குழந் தைகளுக்கேயான தனி உலகிற்குள் நுழைகிற படங்களை நாம் என்றாவது பார்த்திருக்கி றோமா? ஆனால் ஒரு குழந்தையின் உலகை அப்படியே படமாக்கி, அதில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பை தர்ஷுல் சஃபாரிக்கு வழங்கியி ருக்கிறது தாரே சமீன்பர் என்ற இந்திப் படம். முன்னாள் குழந்தை நட்சத்திரமும், இன்னாள் பிரபல நட்சத்திர நடிகருமான அமீர்கான் தான் அந்தப் படத்தின் இயக்குநர்.
 |
வெகு இயல்பான ஒரு பள்ளி மாணவன் கதாபாத்திரம் தர்ஷூலுக்கு! படிப்பில் கவனம் செலுத்த முடியாத, டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட மாணவர் இஷாந்த். இயற் கையை, மீன்களை, ஓவியத்தை ரசிப்பான் அவன். எவ்வளவு முயன்றாலும் படிப்பில் கவனம் செலுத்துவது அவனுக்குக் கடினம். அவனது கற்பனையில் கோள்கள் சண்டை யிடும். ஆனால் நிஜத் தில் கணக்கில் கோட்டை விட்டு விடுவான்.
இப்படி இஷாந்துக்கு இருக்கும் பாதிப்பு தெரியாமல் அவனைப் பற்றி ஆசிரியர்கள் பெற்றோரிடம் சொல்ல, ஹாஸ்டலில் படிக்க சேர்த்து விடுகிறார்கள். அங்கே அறிமுகமாகும் ஆசிரியர் நிரும்ப் (அமீர் கான்), இஷாந்தின் ஓவியத் திறமையை பிரபலப்படுத்தி, படிப்படியாக டிஸ்லெக்சியா பிரச்சினையிலிருந்து அவனை விடுவிக்கி றார். படம் முழுக்க இஷாந்த் ஆக நடித்தி ருக்கும் தர்ஷீலைச் சுற்றியே நகர்கிறது.
படத்தில் 8 வயதுச் சிறுவனாக நடித்திருக் கும் தர்ஷீலுக்கு வயது 11 ஆகிறது. இப்போதே சிறந்த குழந்தை நட்சத் திரத்துக்கான திரை விருதைப் பெற்றிருக் கும் தர்ஷீல் சிறந்த நடிகர் விருதுக்கு முன் னணி இந்தி நடிவர் களுடன் களத்தில் நிற்கி றான். விது வினோத் சோப்ரா போன்ற முன்னணி திரையுலகினர் தர்ஷீலை தங்கள் படங்களிலும் நடிக்க வைக்க விரும்புகின் றனர். குழந்தைகளுக்கான ஆடைகள் தயாரிக்கும் நிறுவனம் தர்ஷீலை தங்கள் நிறுவன விளம்பர மாடலாகப் பயன்படுத்தத் தயாராகியிருக்கிறதாம்.
நாளும் நாளும் கூட்டம், ரசிகர்கள் என்று இப்போதே தர்ஷீலைச் சுற்றிப் பெருங் கூட்டம். அனைவரையும் விலக்கிவிட்டு பள்ளி சென்று வருவதற்குள் பெரும்பாடா கிறதாம் அவனுக்கு. போதாக்குறைக்கு பத்திரிகையாளர்கள் வேறு பேட்டி பேட்டி யென்று நச்சரிக்கிறார்கள். அப்படி ஒரு நச்சரிப்பின்போது தர்ஷீல் தந்த பேட்டியில் எப்படி பேசுகிறான் தெரியுமா? தான் நடித்த இஷாந்த் கதாபாத்திரம் போல யாரிடமும் நிறைய பேசாத சிறுவனாக அல்ல; தன் ஆசைகளையெல்லாம் தாராளமாகப் பேசும் சிறுவனாக! கொஞ்சம் பேசுவோமா அவனிடம்:
கேள்வி: என்ன தர்ஷீல்... இப்படி எல் லோரும் கொண்டாடுகிறார்களே உங்களை? உங்களுக்கு சலிப்பாக இருக்கிறதா?
பதில்: இல்லையில்லை.. நீங்கள்தான் முதலில் அப்படிக் கேட்கிறீர்கள் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
கேள்வி: அமீர்கானுடன் நடிக்க உங் களுக்கு பயமாக இருந்ததா?
பதில்: இல்லையே அமீர் மாமாவுடன் நடிப்பதில் எனக்குப் பயமில்லை. அவர் மிக எளிமையாகப் பழகுகிறார்.
கேள்வி: இந்த வாய்ப்பு எப்படிக் கிடைத் தது உங்களுக்கு?
பதில்: நான் நடனம் பயிலும் ஷாய் மக் தாவர் பள்ளியில் என்னைப் பார்த்த ஒருவர் அமீர் பட வாய்ப்புப் பற்றி என் ஆசிரியரிடம் கூறினார். அவர் என் பெற்றோரிடம் சொல்ல, திரைப்படம் பற்றி எதுவும் தெரியா விட்டாலும் என் பெற்றோர் மறுப்புச் சொல்ல வில்லை. அமீர்மாமாவுக்கு என்னைப் பிடித்துப் போய் விட்டது. என்னைத் தேர்வு செய்தார்கள்.
கேள்வி: இஷாந்தின் கதாபாத்திரம் வித்தியாச மானதாயிற்றே!
பதில்: ஆம். அதுபற்றி நான் திரைக்கதைப் பிரதியைப் படிக்கும் போதும், நடிப்புப் பயிற்சி எடுக்கும் போதும் தெரிந்து கொண்டேன்.
கேள்வி: உங்களுக்கு இஷாந்த் கதாபாத்திரம் போன்ற பிரச்சினைகள் இருந்ததா?
பதில்: இல்லையில்லை... நான் அந்தப் பிரச் சினைகளை எதிர் கொண்டதில்லை. முற்றிலும் அவை என்னுடைய நடிப்பே என்பதில் எனக்குப் பெருமைதான்.
கேள்வி: தொடர்ந்து நடிக்க இருக்கிறீர்களா?
பதில்: இப்போதைக்கு படிப்புக்குத்தான் முக்கியத்துவம். எனக்கு அதற்கே நேரம் சரியாக இருக்கிறது. ஆனால் ஹிரித்திக் ரோஷனோடு நடிக்கும் வாய்ப்பு வந்தால் நடிப்பேன்.
கேள்வி: ஓ! உங்களுக்கு ஹிரித்திக்ரோசன ரொம்ப பிடிக்கும்?
பதில்: ஆமாம். அமீர் மாமாகூட சொன்னார் ஹிரித்திக் என் படத்தைப் பார்த்தார் என்று! ரொம்ப சந்தோசம்.
கேள்வி: நீங்கள் எப்படி நடத்திருப்பதாக நினைக்கிறீர்கள்?
பதில்: நன்றாகவே. என்னைப் படத்தில் ஆசிரியர்கள் அடிப்பதாக வரும் காட்சியைப் பார்த்து என் 6 வயது தங்கை அழுதுவிடுகிறாள்..
என்று தன் தங்கையை கையோடு அணைத் துக் கொள்கிறான் தர்ஷீல். இஷாந்த்துக்கு மட்டுமல்ல... தர்ஷீலுக்கும் ஒளிந்திருந்த அவனது திறமையைக் கண்டுபிடித்து பிரபலப் படுத்தியிருக்கிறார் அமீர். அதே போல நம் பிஞ்சுகள் மத்தியிலும் எத்தனையோ திறமைகள் ஒளிந்திருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்து நெறிப்படுத்தினால் நாளை தர்ஷீலைப் போல் அவர்களும் பேட்டி தரலாம் அல்லவா?
|