தமிழறிஞர்
தனிப்பெரும் பொறியாளர், தனித் தமிழ் அறிஞர் பா.வே.மாணிக்கனார்
- கு.வெ.கி. ஆசான்
 |
சேலத்திற்கு மேற்கில் சிறிது தொலை வில் இருப்பது பாகல்பட்டி எனும் ஊர். விஜய நகர அரசுக் காலத்தில், படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கிய ஒருவருடைய குடும்பம் ஒன்று அவ்வூரில் இருந்தது; அதற்கு நாயக்கர் குடும்பம் என்று பெயர். நாயக்கர் அல்லது நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். அக்குடும்பத்தைச் சேர்ந்தவர் வேங்கடசாமி. அவருடைய துணைவியார் முத்தம்மாள். துணைவர் தமிழ் அறிவு மிக்க செல்வர்; அந்த அம்மையார் படிக்காதவர், ஏழைக் குடும் பத்தவர். இருப்பினும், மணமான பின்பு, வேங்கடசாமி, தம் வாழ்வு இணையருக்குக் கற்பித்தார். திருக்குறள், நாலடியார் முதலிய அற நூல்களிலும், இலக்கிய, இலக்கணங் களிலும் முத்தம்மாள் நல்ல பயிற்சி பெற்றார். கவிதை புனையும் ஆற்றல் பெறும் அளவிற்கு முயன்று முன்னேறி விட்டார்.
பள்ளி, கல்லூரி
வேங்கடசாமி, முத்தம்மாள் இணை யருக்கு, ஆறு பேர் மக்கள்; இருவர் ஆண்கள், நால்வர் பெண்கள். அவர்களில் இரண்டாவது ஆண் மகன் மாணிக்கம்; 1871 பிப்ரவரி 24இல் அவர் பிறந்தார். அவர் பன்னிரண்டு வயதிற் குள் இறப்பார் என்று சோதிடம் கணித் தவர் கூறிவிட்டார். ஆகையால் பெற்றோர் அவரைப் பள்ளியில் சேர்க்க வில்லை. ஏழாவது அகவையில் இருந்து வீட்டிலேயே படித்தார். 12ஆம் வயதில், சேலம் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்பு சேலம் கல்லூரியில் கற்றார். கணக்கில் ஆர்வமும் திறமையும் காட்டினார். இக் காலத்தில் அவர் குடும்பம் செல்வ நிலையை இழந்தது; அதனால் உரிய பாட நூல்களைப் பெற முடியாதவர் ஆனார்; மேலும் கணக்கிலேயே அதிகக் கவனம் செலுத்தினார்; பிற பாடங்களைப் போதிய அளவு படிக்கவில்லை. ஆகையால் இடைநிலை வகுப்புத் தேர்வில் முதல் முறை தோற்றார்; அடுத்து முயன்று படித்து வெற்றி பெற்றார்.
சென்னை பொறியியல் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்தது. பட்டம் பெற நான்கு ஆண்டுகள் பயிலவேண்டும். அந்த அளவுக்கு வீட்டில் வசதி இல்லை. என்ன செய்வது? தம் மகனுக்குத் தமிழ் உணர்வையும், அறிவையும் முத்தம்மாள் ஊட்டியிருந்தார். மாணிக்கத்திற்கு அது கை கொடுத்தது. பாகல்பட்டி மிட்டாதார் ஒரு பெருஞ் செல்வர்; அவரைப் புகழ்ந்தும், தமது தேவையை வெளிப்படுத்தியும் கவிதை ஒன்று இயற்றி, அவரிடம் தந்தார். அதைப் படித்த மிட்டாதார், மாணிக்கம் உயர்ப்படிப்புப் படிக்கும் வரை, தமது நிலத்தின் ஒரு பகுதியை, குத்தகையின்றி அளித்தார். அதனால் பொறியியல் படிப்புத் தொடர்ந்தது. இறுதியில் பி.இ. தேர்வில் முதன்மையாகத் தேறி, பதின்மூன்று பரிசுகளும் தங்கப் பதக்கமும் வென்றார்.
மாணிக்கத்தின் படிப்பிற்கு உதவியவர் ஒருவரைப் பற்றி ஓர் அரிய செய்தி உண்டு. இரா.முனுசாமி (நாயுடு) என்பவர் ஒரு துறவி. அவர் எளிய வேலையை மேற்கொண்டு, மாணிக்கத்தின் 10ஆம் வயது முதல், பத்தாண்டுக் காலம் அவருடைய கல்விக்காகப் பொருள் உதவி செய்தார். இந்தச் செய்தியைத் தமது இறப்பிற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பு, அப்பெரியவரின் படத்திற்கு அடியில் தமது கைப்பட, பா.வே. மாணிக்கனார் எழுதி நன்றியை வெளிப்படுத்தினார்.
பொறியாளர் பணி:
மாணிக்கனார், தம் 25ஆம் அகவையில், 1896ஆம் ஆண்டு, அரசாங்கத்தில் உதவிப் பொறியாளராகப் பணி ஏற்றார். பொதுப் பணித் துறையில், விரைவில் பணி உயர்வுகள் பெற்று அலுவலக முறையில் பெரு மதிப்புப் பெற்றார்.
தமது பணியை வழக்கான ஒரு வேலையாகக் கருதாமல், எதிலும் கருத்து ஊன்றி, உற்று நோக்கி, ஆய்வு செய்து முடிவு எடுத்துக் கடமையாற்றினார்.
வடநாட்டில்:
1910இல் பதவி ஏற்ற அய்ந்தாம் ஜார்ஜ் எனும் பிரிட்டிஷ் பேரரசர், மறு ஆண்டு டிசம்பரில் டில்லியில் அரசவையை (தர்பார்) கூட்டினார். அதற்கு மாணிக்கனார் அழைக்கப்பட்டார். தமது உறவினர் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் (பிள்ளை) அவர்களை உடன் அழைத்துக் கொண்டு, மாணிக்கனார் டெல்லி சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்பு இருவரும் வடநாடு சுற்றுலா சென்றனர். இப்பொழுது பாகிஸ்தானில் உள்ள வட மேற்கு எல்லைப் புற மாகாணத்திற்கு அப்பால், ஒரு மலையைக் குடைந்து வாய்க்கால் வருவதை அறிந்தார். அதை ஆய்வதற்காகக் கவிஞருடன் சென்றார். திரும்பும்பொழுது, ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்க்கும் மலைமக்களிடம் இருவரும் மாட்டிக் கொண்டனர். ஆனால், மாணிக்கனார் தந்திரமாக நடந்து கொண்டார். தாமும் ஆங்கிலேயரை எதிர்க்கப் படை திரட்டுவதாகவும், வடமேற்கு எல்லைப்புற மலை மக்களின் துணையை நாடுவதாகவும் கூறினார். இதைக் கேட்ட மலை மக்களின் தலைவன் இருவருக்கு விருந்து வைத்து, விடுதலையும் செய்தான்.
மேல்நாடு சென்றார்:
பொறியியலில் உயர் பயிற்சி பெறுவதற்கு 1912-13ஆம் ஆண்டில், மாணிக்கனார் இங்கிலாந்து சென்றார். அங்கு காரைக் கட்டட (ஆர்.சி.) தொழில்நுட்பம் பயின்றார். அப்பொழுது கணித வரைக் கட்டம் (கால்குலோ கிராஃப்) என்பதைக் கண்டுபிடித்தார். இணை கோடுகள், குவி கோடுகள் ஆகியவற்றின் உதவியால், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் மற்றும் அடுக்கு மூலம், பெருக்கு மூலம், முக்கோண இயல் ஆகியவற்றை விரைவாகச் செய்ய வழி கண்டார். மான் செஸ்டர் தொழில் நுட்பக் கல்லூரியின் தலைவர் ஜே.சி.மாக்ஸ்வெல், மற்றும் முதல்வர் டபிள்யூ. லீஸ்டர் ஆகியோர் இக்கண்டுபிடிப்பு, வேலையை வெகுவாகச் சுருக்குவதாகக் கூறிப் பாராட்டினர். தமிழ்நாடு திரும்புவதற்கு முன்பு சட்டத்தில் பார்-அட்-லா பட்டமும் பெற்றார்.
மேட்டூர் அணை இப்பொழுது இருக்கும் இடத்தில் சிறப்பாக அமைய பா.வே. மாணிக் கனார் காரணம் ஆவார். மேனாட்டுப் பொறி யாளர்கள், இப்பொழுது அணை இருக்கும் இடத்திற்குத் தெற்கில், தூக்கணாம் பட்டிக்கு அருகில் அணையைக் கட்ட முயன்றனர். அங்கு கட்டும் அணை வலுவாக அமையாது என மாணிக்கனார் எடுத்துரைத்தார். மாதிரி அணை ஒன்றைச் செய்து, அதில் நீரைத் தேக்கி, அது விரைவில் இடிவதைக் காட்டினார். அதன் பின்பு, மேட்டூர் அருகில் அணை கட்டப்பட்டது. 1925இல் அது தொடங்கப் பெற்றபொழுது இருந்த மாணிக்கனார், 1934 இல் அது கட்டி முடிக்கப்பட்டதைக் காண வில்லை. இடையில், 1931 டிசம்பர் 25இல், தமது 61ஆம் அகவையில் மறைந்தார். இருப்பினும், மேட்டூர் அணை அவரை என்றும் நினைவுபடுத்துகிறது.
தமிழ்த் தொண்டு
தமது தாயின் வழியே தமிழ் அறிவையும் உணர்வையும் மாணிக்கனார் பெற்றார்; பிற்காலத்தில் திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, சிலப்பதிகாரம், மணி மேகலை, கம்பராமாயணம் முதலிய இலக்கி யங்களையும், தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும் ஆழ்ந்து கற்றார்; புதிய ஆய்வுக் கருத்துகளைக் கண்டார்; அவற்றைத் தமது உரையாடல், சொற்பொழிவு, கட்டுரை ஆகியவற்றில் சுவைபட வெளிப்படுத்தினார். ஆகையால், இவருடைய கருத்தைக் கேட் பதிலும் படிப்பதிலும் மக்கள் ஆர்வம் காட்டினர்.
மாணிக்கனார் ஒரு பன்மொழிப் புலவர். வால்மீகியின் இராமாயணத்தை சமஸ்கிருத மூலத்தில் படித்தவர். இராமனையும், பிற கதை மாந்தரையும் வால்மீகி இயல்பாகப் படைத்தார். ஆனால், கம்பன் அவர்களைத் தெய்வ நிலைக்கு உயர்த்தினான். இந்தக் கருத்தைச் சான்று களோடு ஒரு சொற்பொழிவில் நிலை நாட்டி னார். 1931இல் நிகழ்த்தப்பெற்ற இச் சொற் பொழிவுக்கு, மறைமலையடிகள் தலைமை வகித்தார். கம்பன் புளுகும், வால்மீகி வாய் மையும் எனும் தலைப்பில் அது பிற்காலத்தில் நூலாக வந்தது. அவருடைய சொற்பொழிவுகள் பல, சிறந்த கட்டுரைகளாக வந்தன.
மாணிக்கனாரின், தமிழ் ஒலி இலக்கணம் 48 பத்திகளைக் கொண்டது. 1922இல் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்தது. செந்தமிழ் மொழி இயற்கை இலக்கணங்களை முற்றிலும் தழுவி வளர்க்கப்பட்டது என்கிறார். தமிழ் அலகைத் தொடர் எனும் ஆய்வு நூல் அவருடைய இலக்கண ஆராய்ச்சியைத் தெரிவிக்கிறது.
பழமைப் போக்குகள், மற்றும் புரியாத பயனற்ற சமயக் கொள்கைகள் சில மாணிக் கனாரிடம் இருந்தன. இருப்பினும் துணி துவைப்பதில் இருந்து செருப்புத் தைப்பது வரை, பாப் புனைவதில் இருந்து இசைக் கருவிகள் மீட்டுவது வரை, ஓவியம் வரைவதில் இருந்து எந்திரங்களின் பழுது நீக்குவது வரை - எல்லாத் தொழில்களையும் ஏற்றத் தாழ்வு இன்றி மதித்தார்; அவற்றைத் தாமே செய்தார். என்னே அவர் பெருமை!
|