இயைபு பாக்கள்
தமிழனாய் உலகில் பதி
தமிழிசை செவியில் போடு
தப்பிசை என்றால் மூடு
தமிழா! தமிழில் பாடு
தமிழா! தமிழை நாடு
குறளில் உள்ளது முப்பால்
சிறையும் உள்ளது தப்பால்
ஈழம் இருப்பது அப்பால்
மழையும் பொழிந்திடும் மப்பால்
காலையில் வேண்டாம் வேகம்
பாவைக்கு என்றும் தாகம்
இனமாய் வாழும் காகம்
அயல்மொழிக் கல்வியே மோகம்
அளவாய் கரித்தால் உப்பு
அளவுக்கு மிஞ்சினால் துப்பு
சரியாய் இருந்தால் ஏப்பு
மடமை என்றும் தப்பு
உயிர்கள் வாழ காடு
உந்தன் நிலமே நாடு
இனிய தமிழில் பாடு
தொழிலகம் சூழல் கேடு
மலரை நாடும் வண்டு
நன்செய் நிலத்தில் நண்டு
பூக்கள் இணைந்தால் செண்டு
தாய்மொழி காப்பதே தொண்டு
தாய்மொழிக் கல்வி விரும்பு
தமிழ் வழி சிந்தனை அரும்பு
பொங்கலில் இருக்கும் கரும்பு
வாழ்வில் வேண்டாம் துரும்பு
தமிழ்நிலம் தன்னை மதி
சான்றோர் போற்றித் துதி
நம்ப வேண்டாம் விதி
தமிழனாய் உலகில் பதி
பொய் சொன்னால் கேடு
மெய்யாய் என்றும் பாடு
எங்கும் ஒன்றாய் கூடு
தமிழே பழந்தமிழ் ஏடு
பரந்து விரிந்தது வானம்
வானில் பறவைகள் கானம்
உயிரின் உரிமை மானம்
என்றும் செய்வாய் தானம்
காட்டின் அரசன் அரி
கடிதாய் ஓடும் பரி
கயமை செய்யும் நரி
களிறின் பெயரோ கரி.
யாருக்கும் வேண்டாம் தூக்கு
வேண்டும் என்பவனைத் தாக்கு
தூக்கை உலகில் நீக்கு
இதுவே அறிஞர் வாக்கு
- கு. அ. தமிழ்மொழி, புதுச்சேரி
(குறிப்பு: அரி-சிங்கம், பரி-குதிரை, கரி-யானை)
|