நண்பருக்கு அனுப்ப பிரதி எடுக்கபறக்கும் தட்டு பூமிக்கு வந்ததா?

- சமா.இளவரசன்

பறக்கும் தட்டு பார்த்திருக்கிறீர்களா? வீட்டில் சண்டை வந்தால் ஒருவர் மேல் ஒருவர் எறிந்து கொள்வார்களே அதுவன்று. விளையாடுவதற்காக நாம் வாங்கி பறக்க விடுவோமே வட்டு அதுவுமன்று. அப்புறம்?
பல ஆங்கிலத் திரைப்படங்களில் பார்த்திருப்பீர்களே! பெரிய தட்டாக, மின்னும் வெள்ளி நிறத்தில் அல்லது கருப்பு வண்ணத்தில் வண்ண வண்ண விளக்குகளோடு இருட்டில், காட்டில் வந்து இறங்கி, உள்ளிருந்து வித்தியாசமான உருவம் கொண்ட உயிரினம் இறங்குமல்லவா? அதற்குத்தான் பறக்கும் தட்டு என்று பெயர். இங்கிலீஷில் Flying Saucer என்று அழைக்கிறார்கள்.
பூமியில் மனிதர்கள், உயிரினங்கள் வாழ் வதைப் போலவே சூரிய மண்டலத்திலுள்ள மற்ற கிரகங்களிலும், சூரிய மண்டலத்திற்கு அப்பாலுள்ள கிரகங்களிலும் உயிரினங்கள் வாழும் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. அதை ஆராய்ச்சி செய்வதற்குத் தான் நாமும் பல செயற்கைக் கோள்களை அனுப்புகின்றோம். அப்படி அனுப்பப்பட்ட செயற்கைக் கோள் களிலிருந்து இதுவரை நமக்கு வந்த தகவல்களின்படி, உயிரினங்கள் பிற கிரகங் களில் வாழ்கின்றன என்று நாம் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. ஏனெனில் நாம் அனுப்பிய செயற்கைக் கோள்கள் சென்று ஆய்வு செய்த கிரகங்களைப் போல கோடிக் கணக்கான கிரகங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன.
நாம் இரவில் பறக்கும் ஒவ்வொரு நட்சத் திரமும் ஒவ்வொரு சூரியன் அல்லவா? அப்படி யானால் எவ்வளவு கிரகங்கள் இருக்கும். அதில் எதிலும் கூடவா உயிரினம் இருக்காது என் கிறார்கள் ஆய்வாளர்கள்.
அப்படி யாராவது இருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் அவர்களும் நம்மைப் போலவே தேடுதல் வேட்டையில் இறங் கியிருக்கலாம் அல்லவா? அவர்களது செயற் கைக் கோள்கள் பூமியில் வந்து இறங்கக் கூடாதா? என்று யோசித்ததன் விளைவுதான் பறக்கும் தட்டுகள்.
அதாவது, பறக்கும் தட்டு என்பது ஏதோ ஒரு சாதாரண பொருளல்ல. பிற கிரகங்களில் வாழும் உயிரினங்கள் அனுப்பும் செயற்கைக் கோள்தான் என்கிறார்கள் சிலர்.
ஓ! அப்படியும் இருக்கலாம் என்று தோன்கிற தல்லவா? இருக்கட்டும் இது பற்றிப் பின்னால் பேசுவோம். இப்போதென்ன திடீரென பறக்கும் தட்டு பற்றிப் பேச்சு என்கிறீர்களா? இம்மாதத் தொடக்கத்தில் ஒரு செய்தி.
மெக்ஸிகோ நாட்டுக்கருகில் ஒரு மலைக் குன்றில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ஒன்று அண்மயில் வெளியிடப்பட்டது. அதில் மங்கலான உருவம் ஒன்று தாவித் தாவி, அதாவது பறந்து, பறந்து அந்தரத்தில் நடந்து மலைக் குன்றுகளைக் கடப்பது போன்ற காட்சி பதிவாகி உள்ளது. இது வெளிடப்பட்டவுடன் நீண்ட நாட்களாக சும்மா இருந்த பறக்கும் தட்டு சமாச்சாரங்கள் மீண்டும் இணையத்தில் வெற்றிகரமாக உலாவத் தொடங்கிவிட்டன.
2006 ஆம் ஆண்டும் எடுக்கப்பட்ட அந்த வீடியோ காட்சியில் தெரிவது வேற்றுகிரக மனிதன் தான். அவன் வந்து இறங்கியது பறக்கும் தட்டு மூலம் தான் என்ரூ செய்திகளில் சொல்ல ஆரம்பித்து விட்டார்க்ள். நீங்களும் கூடப் பார்த்திருப்பீர்களே! அது உண்மைதானா? பறக்கும் தட்டு பூமிக்கு வந்ததா? அதிலிருந்து பறக்கும் உயிரினம் ஏதாவது இறங்கியதா? இதை யெல்லாம் பற்றி யோசிக்கும் முன்னர் பறக்கும் தட்டு பற்றிய செய்திகள் இதற்கு முன்பு எப்போதெல்லாம் வந்திருக்கிறது என்று பார்த்துவிடுவோமா?
பறக்கும் தட்டு என்று நம்மால் அழிக்கப்படும் இந்த வகை திடீர் தோன்றிகளை அறிவியலார் UFO (Unidentified Flying Object) அறியப் படாத பறக்கும் பொருள் என்று அழைக்கிறர்கள்.
அலாஸ்காவில் ஒன்று இறங்கியது, அண்டார்டிகாவில் ஒன்று இறங்கியது, அரிஸோனாவில் ஒன்று இறங்கியது என்று ஆங்காங்கே பலர் சொல்லிக் கொண்டிருந் தாலும், 20-ஆம் நூற்றண்டில் 1947-ஆம் ஆண்டு தான் பார்த்ததாக ஒருவர் சொல்லிய செய்தி உள்ளது. கென்னத் அர்னால்ட் என்பவர் வட்ட வடிவத் தட்டு போன்ற ஒரு வாகனத்தை பார்த்ததாகத் தெரிவித்தார். அதற்கு வைத்த பெயர்தான் பறக்கும் தட்டு. பிறகு அந்தப் பெயரே காலத்துக்கும் நிலைத்துப்போனது. அத்தோடு மட்டுமல்லாம்ல், அந்தப் பொருளை மய்யமாக வைத்தே ஆயிரக்கணக்கான திரைப் படங்களும் வந்து விட்டன.
பறக்கும் தட்டுகள் என்ற இந்த சுவாரசிய மான விசயத்தை வைத்து அறிவியல் புனை கதைகளும் ஏராளம் வந்துவிட்டன. புகழ்பெற்ற இண்டிபென்டன்ஸ் டே படத்தில் அமெரிக்க வெள்ளை மாளிகை மேல் பறந்தபடி தகர்க்கும் அளவுக்கு இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வசதியைக் கொண்டு உருவாக்கப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள் இன்னும் இந்த கதைகளை பிரபலாமாக்கி விட்டன.
கென்னத் 1947- ஜூன் 24-ஆம் நாள் ரைனியர் மலை அருகே தான் பார்த்ததாகக் கூறினார். ஒன்றல்ல, ஒன்பது! ஆம், ஏதோ ஒரு வாகனம் அல்ல, வட்டவடிவத் தட்டு போன்ற 8 வாகனங்களும், பிறை வடிவ பெரிய வாகனம் ஒன்றும் மணிக்கு சுமார் 1900 கிலோமீட்டர் வேகத்தில் பறந்ததாக தெரிவித்தார்.
அதற்குப் பிறகு அதே ஆண்டு ஜூலை 4-ஆம் நாள் பலரும் இதே மாதிரி சொன்னார்கள். ஆனால் அதற்குக் காரணம் வேறு. அமெரிக்க சுதந்திர நாளுக்கு நடத்தப்பட்ட விமான அணிவகுப்பை தூரத்தில் இருந்து பார்த்தவர்க ளெல்லாம், அதை பறக்கும் தட்டு என்று எண்ணத் தொடங்கிவிட்டார்களாம்.
சரி, அதற்கு முன்பும் பின்பும் ஏகப்பட்ட கதைகள் உலாவின. 13-ஆம் நூற்றாண்டிலும் , 16-ஆம் நூற்றாண்டிலும் இதே போன்ற செய்திகள் பல காணப்படுகின்றன. அக்காலத் தில் பலர் இவற்றை கடவுளின் வாகனம் என்று மடமையில் சொல்லிவந்தார்கள். பிற்காலத்தில் இவற்றுக்கு அறிவியல் புனைகதைகள் என்று பெயர் சூட்டி பறக்கும் தட்டிலிருந்து இறங்கி வந்த உயிரினம் நன்மை செய்ததாகவும், சிறுவர்களுக்கு நன்மை செய்ததாகவும், நட்பாக இருந்ததாகவும் சில கதைகள் வந்தன. நூக்கி, ஈ.டி. போன்ற படங்களும், தீமை செய்யும் உயிரினமாக, மனித குலத்தை அழிக்கும் உயிரினமாகக் காட்டப்பட்ட பிரிடேட்டர் போன்ற படங்களும் சக்கைபோடு போட்டு விற்பனையாகின. ஆனால் எல்லாவற்றிலும் மிக முக்கியமான கேள்வி ஒன்று உள்ளது. இதுவரை இப்படி அங்கே பார்த்தென், இங்கே பார்த்தென் என்று காடுகளிலும், மலைகளும் பார்த்ததாக ஆளாளுக்கு சொல்லிக் கொண்டிருக் கிறார் களே தவிர, ஒட்டுமொத்தமாக பல்லாயிரம் மக்களோ, நூற்றுக் கணக்கான மக்களோ, ஒரு ஊரில் உள்ள அனைவருமோ பார்த்ததாக இதுவரை எந்த செய்தியும் இல்லை. இறங்கும் தட்டுகளெல்லாம் பார்த்துப் பார்த்து எப்படி காடுகளில் இறங்குகின்றனவோ? தெரிய வில்லை.
இப்போது வெளிவந்திருக்கும் காட்சியும் கூட அப்படித்தான். தெளிவில்லாத ஏதோ ஒரு உருவம் அந்தி நேரத்தில் பறப்பது போல இருக்கிறது. அது ஒரு சிறகொடிந்த பறவை யாகக் கூட இருக்கலாமல்லவா?
எனவே இப்போதைக்கு இவையெல்லாம் சுவையான அறிவியல் கற்பனைகள் தான். உறுதியாக அறிவியல் இவற்றை ஏற்கும் வரை, நாமும் பன்னாட்டு ஆங்கிலப் படங்களை தமிழில் மொழிபெயர்த்து தரும் நமது தொலைக் காட்சிகளில் பார்த்துவிட்டு மகிழ்ச்சி அடைந்து கொள்ள வேண்டியது தான்.