குட்டிக் கதை
சேவலுக்குப் பயந்த சிங்கமும்! கொசுவுக்கு அஞ்சிய யானையும்!

ஒரு நாள் சிங்கமும் யானையும் பேசிக் கொண்டு வந்தன. சிங்கத்தை வெகுவாகப் புகழ்ந்த யானை, உங்களுக்கென்ன! மகாராஜா! என்ன குறை வரப்போகிறது உங்களுக்கு? என்று பாராட்டியது.
அதற்கு சிங்கம், நான் மிகவும் பலம் பொருந்திய மிருகமாக உள்ளேன். எனக்குக் கம்பீரமான உருவம் இருக்கிறது. எதையும் பலமாகத் தாக்கும் ஆற்றல் இருக்கிறது. நல்ல பற்கள் பொருந்திய தாடை, கால்களில் கூரிய நகங்கள் எல்லாம் வைத்துக் கொண்டு நான் காட்டு ராஜாவாக இருக்க முடிகிறது. ஆனாலும், பொழுது விடியும் அதிகாலையில் சேவல் கூவும்போது - எனக்குப் பேரச்சம் ஏற்படுகிறதே! என்று புலம்பியது.
அதற்கு யானை, அந்தச் சேவல் கூவும் போது மட்டும்தானே, அந்த ஒலியால் பயப்படுகிறீர்கள்! பிறகு எப்போதாவது உங்கள் தைரியத்தை நீங்கள் இழந்ததுண்டா? என்று கேட்டது.
ஆனாலும், சிங்கத்தின் மனம் தேறவில்லை. இப்படி ஏற்பட்டுள்ள, தன் கோழைத் தனத்திற்கு, வாழ்வதைவிட இறந்துவிடலாம் என எண்ணியபடி, அது வந்து கொண்டிருந்தது.
சிறிது நேரம் சென்றபின், யானை தன் காதுகளை அசைத்துக் கொண்டிருப்பதை - சிங்கம் ஆழ்ந்து நோக்கியது!
சிங்கம் யானையைப் பார்த்து, என்ன யானையாரே! எப்போது பார்த்தாலும், காதுகளை அப்படியும் இப்படியும் ஆட்டிக் கொண்டே இருப்பது ஏன்? என்று கேட்டது.
அந்நேரம் பார்த்து, யானையின் தலைமீது ஒரு கொசு உட்கார்ந்திருந்தது!
உடனே யானை சிங்கத்திடம், என் தலை மீது உட்கார்ந்து ஒரு சிறு பூச்சி ரீங்காரம் செய்து கொண்டிருப்பது உங்களுக்குத் தெரி கிறதா? அது பூச்சி அல்ல. அது என் காதில் நுழைந்தால் போதும்; என் கதை முடிந்துவிடும்! அதை உள்ளே நுழையாமல் விரட்டத்தான், காதை அசைத்துக் கொண்டே இருக்கிறேன்! என்றது.
சிங்கம் தன் மனதிற்குள், மிகப் பெரிய உருவம் கொண்ட யானையே, சிறு கொசு விற்குப் பயப்படுகிறது என்கிறபோது, எனக்கு என்ன குறை? நான் ஏன் தற்கொலை செய்ய வேண்டும்? யானையைக் காட்டிலும் என் நிலைமை சிறந்தது! யானை - கண்டு பயப் படும் கொசுவைக் காட்டிலும், என்னை அச் சுறுத்தும் சேவல் உருவத்தால் பெரியதன்றோ! என்று சொல்லி மகிழ்ந்து கொண்டது.