நண்பருக்கு அனுப்ப பிரதி எடுக்க



சின்னக்கதை

சிறைப்பட்ட சிங்கமும் விடுவித்த பீர்பாலும்

அயல் நாடுகளுடன் நட்பு பாராட்டுவதில் அக்பருக்கு ஈடு இணை கிடையாது. பீர்பாலைப் போன்ற மதியூக மந்திரிகள் இருப்பதால் அக்பரின் புகழ் மேலும் ஓங்கி வளர்ந்தது. அதிலும் பாரசீக சக்ரவர்த்தியுடன் நல்ல வண்ணம் நட்பு கொண்டிருந்தார். இரண்டு சக்கரவர்த்திகளும் அவ்வப்போது ஏதாவது புதிர்களை தொடுத்து அதை விடுவித்து மகிழுவர்.
ஒருமுறை பீர்பால் அரசுப்பணி நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தார். அந்த நேரத்தில் பாரசீக நாட்டுத் தூதர்கள் அக்பரிடம், மாமன்னரே, எங்கள் மன்னர் உங்களுக்கு ஒரு புதிரை அனுப்பி அதனை விடுவிக்கச் சொன்னார் என்று கூற, அக்பரும் மிகுந்த ஆவலுடன் என்ன அது என்று கேட்க, கூண்டுக்குள் இருக்கும் ஒரு சிங்கத்தைக் காட்டி, இச்சிங்கத்தை கூண்டை உடைக்காமல் திறக்காமல் வெளியே எடுக்க வேண்டும். இதற்கான அவகாசம் 3 வாரங்கள் தான் என்று கூறிவிட்டு சென்று விட்டனர். அக்பர் அதை விடுவிக்க முடியாமல் திணறினார். அரசவை யில் இருந்தவர்களும் மதி குழம்பினர்.
ஆபத்பாந்தவனான மதியூக மந்திரி பீர்பால் சரியான நேரம் பார்த்து நாடு திரும்பினார். அக்பர் மிகுந்த ஆவலுடன் பீர்பாலிடம் நடந்ததைக் கூறினார். பீர்பாலும் அந்தக் கூண்டினருகில் சென்று அந்தச் சிங்கத்தை நுனி முதல் அடி வரை உற்று, உற்று பார்த்தார். வேறு யாரும் கவனிக்காத ஒன்றை பீர்பால் கவனித்து விட்டார். சிங்கத்தின் கால்களில் வண்ணம் மாறியிருந்ததை கண்டு தலையை மேலும் கீழும் ஆட்டியபடி புன்னகைத்தார்.
மன்னர் உட்பட அனைவர் முன்னி லையிலும் நாளை தான் சிங்கத்தை கூண்டைத் திறக்காமல் வெளியேற்றுவதாக பீர்பால் கூறிவிட, மக்கள் அளவு கடந்த ஆவலுடன் பிரிந்தனர். அடுத்த நாள் அதைவிட அதிக ஆவலுடன் கூடியிந்தனர். அன்றுதான் புதிரை விடுவிக்க கடைசி நாள்.
பீர்பால் ஒரு இரும்பு கம்பியை எடுத்து காவலரிடம் கொடுத்து அதை பழுக்கக் காய்ச்சச் சொன்னார். காவலனும் அவ்வண்ணமே செய்ய, அந்தக் கம்பியை வாங்கி கூண்டுக்குள் நுழைத்து சிங்கத்தின்மீது வைத்தார். என்ன ஆச்சர்யம், சிங்கம் உருக ஆரம்பித்து விட்டது. மன்னருக்கும், மக்களுக்கும் ஆச்சர்யம் கரை வதற்குள் சிங்கம் கரைந்து விட்டது.
மன்னர் மிகுந்த ஆச்சர்யத்துடன், எப்படி கண்டுபிடித்தாய் பீர்பால் என்று கேட்க, பீர்பாலும் காலில் வண்ணம் மாறியிருந்ததை கூறி அது மெழுகால் செய்யப்பட்ட உருவம் என்று தெரிந்து கொண்டு, அதைக் கரைத்துக் காட்டவே காய்ச்சிய இரும்பை பயன்படுத்திய தாக கூற, மன்னர் அளவுகடந்த ஆனந்தப்பட்டு பீர்பாலை கட்டிப்பிடித்து பாராட்டி அளவற்ற பரிசுகள் வழங்கி பெருமைப்படுத்தினார். அத்தோடு பாரசீக மன்னருக்கும் தகவலை தெரிவித்து, விரைவில் தானொரு புதியபுதிரை அவருக்கு அனுப்பப் போவதாக பெருமையுடன் கூறிக்கொண்டார்.