நண்பருக்கு அனுப்ப பிரதி எடுக்க



செவ்வாயில் இறங்கிய பீனிக்ஸ்

- பிஞ்சண்ணா

சூரியக் குடும்பத்தின் பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் இருக்குமா? மற்ற கோள்களில் இருக்காதா? இருக்க வாய்ப்பில்லையா? இந்தக் கேள்விக்கு ஊகங்களின் அடிப்படையில் எப்படியும் பதில் சொல்லிவிடலாம். அது மிக எளிது. ஆனால் அதற்கு ஆதாரம் வேண்டும் அல்லவா?
முதலில் கவனிக்க வேண்டிய செய்தி - உயிர் வாழ்வதற்கான சீரான வெப்ப நிலையும் அடிப்படைத் தேவைகளும் கோளில் இருந்தால்தான் உயிரினங்கள் தோன்றும். நமது சூரியக் குடும்பத்தில் சூரியனின் வெப்பம் கடுமையாகத் தாக்கும் புதன், வெள்ளி போன்ற கோள்களில் உயிர்கள் உருவாகும் வாய்ப்பே கிடையாது. தொலை தூரத்திலுள்ள நெப்டியூன், யுரேனஸ் போன்ற கோள்களில் போதிய வெப்பம் கிடையாது. மித வெப்பமுள்ள, பூமியைப் போன்று சில விஷயங்களில் ஒத்துப் போகின்ற செவ்வாயின் மீது எப்போதுமே அறிவியலாளர்களுக்கு ஒரு சந்தேகப் பார்வை உண்டு. அதனால் செவ்வாய்க் கோளை ஆராய்வதற்கும் அவர் களுக்கு பெரு விருப்பம் உண்டு.
பூமியிலிருந்து நாம் அனுப்பிய எண்ணற்ற செயற்கைக் கோள்கள் செவ்வாயை ஆய்வு நடத்தச் சென்றிருக்கின்றன. விண்வெளிக் கலங்களும் செவ்வாயில் இறங்கி ஆய்வு நடத்தி வருகின்றன. ஆற்றுப்படுகைகள் இருப்பது போன்ற செவ்வாயின் புகைப்படங்களை அவை எடுத்து அனுப்பின.
இந்நிலையில்தான், உயிரினம் வாழ்வதற் கான அடிப்படைத் தேவையான தண்ணீர் செவ்வாய்க் கோளில் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியம் ஏற்பட்டது. அதற்காக செவ்வாயின் துருவப் பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகளை ஆய்வு செய்ய தனியான ஆய்வுக் கலன் ஒன்றை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டது.
அப்படி உருவாக்கப்பட்டதுதான் பீனிக்ஸ் என்ற ரோபோ ஆய்வு விண்கலம். அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக் கழக லூனார் - பிளானிட்டரி ஆய்வகத்தின் தலை மையில் நாசாவின் வழிகாட்டுதலில் கனடா, இங்கிலாந்து , சுவிட்சர்லாந்து, டென்மார்க், ஜெர்மனி, பிலிப்பைன்ஸ், பின்லாந்து உள்ளிட்ட நாடுகளின் கூட்டு முயற்சியில் உரு வாகியது பீனிக்ஸ்.
செவ்வாயில் தண்ணீர் இருக்கிறதா என் பதையும் அங்கு நுண்ணுயிரிகள் வாழும் சூழல் இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்வதுதான் இதன் நோக்கம். செவ்வாயின் வடதுருவமான மார்டியன் பகுதியில் இதனைத் தரையிறக்கி, தானே கரம் நீட்டி பனிக்கட்டிகளை அள்ளி ஆய்வு நடத்தும் விதமான ரோபோவோடு இக்கலம் வடிவமைக்கப்பட்டது.
பீனிக்ஸ் என்பது கிரேக்க புராணக் கதை களில் வரும் ஒரு பறவையின் பெயர். தன்னை எரித்த நெருப்பின் சாம்பலிலிருந்து உயிர் பெற்று எழும் சக்தியுள்ள பறவை என்று பீனிக்சைப் பற்றிக் குறிப்புகள் உள்ளன.
அப்படிப்பட்ட பறவையின் பெயரான பீனிக்சை இந்த விண்கலத்துக்கு சூட்டியது பொருத்தமான ஒன்றுதான். ஏன் தெரியுமா? இந்த பீனிக்ஸ் விண்கலத்தில் பயன் படுத்தப் பட்டுள்ள உட்பொருள்கள் பலவும் இதற்கு முன் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படாத அல்லது செயலிழந்த விண்கலங்கள் பல வற்றின் உதிரி பாகங்கள்தான்.
2007 ஜூலை 7ஆம் நாள் விண்ணில் ஏவுவதற்காகத் திட்டமிட்ட இவ்விண்கலத்தை பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களினால் 2007 ஆகஸ்ட் 4ஆம் நாள் தான் ஏவமுடிந்தது. அமெரிக்காவின் கேப் கேனவரால் ஏவு தளத்தி லிருந்து விண்ணில் செலுத்தப்பட்ட பீனிக்ஸ் விண்கலம் தனது பயணத் தொலைவான 422 மில்லியன் மைல்களை, அதாவது 67 கோடி கிலோ மீட்டரை பத்து மாதத்தில் கடந்து திட்ட மிட்டபடி செவ்வாய்க்கு சென்று இறங் கியுள்ளது. மணிக்கு 20 ஆயிரம் கி.மீ. வேகத் தில் விண்ணில் பறந்த பீனிக்ஸ் செவ்வாயின் வளி மண்டலத்தில் மணிக்கு 28 ஆயிரம் கி.மீ. வேகத்தில் நுழைந்தது. பின்னர் தனது பாரா ஓட்டுகளை விரித்து தனது வேகத்தை ஏழே நிமிடங்களில் மணிக்கு 8 கி.மீ. வேகமாக சுருக்கிக் கொண்டது.
திட்டமிட்ட இடத்திற்கு வெகு அருகில், திட்டமிடப்பட்ட நேரத்துக்கு 15 நிமிடங்கள் முன்னதாகவே சென்று 2008 மே மாதம் 25ஆம் தேதி தரையிறங்கியது.
இதுவரைக்கும் செவ்வாய்க்கு அனுப்பப் பட்ட 12 விண்கலங்களில், (அமெரிக்கா மட்டும் 7) பீனிக்சையும் சேர்த்து 6 விண் கலங்கள்தான் பத்திரமாகத் தரையிறங்கியவை. இந்த ஆறு விண்கலங்களும் அமெரிக்கா அனுப்பியவையாகும். செவ்வாயின் துருவப் பகுதியில் இறங்கியுள்ள முதல் விண்கலம் பீனிக்ஸ் தான்.
இந்த பீனிக்ஸ் விண்கலத்திற்குள் செவ்வா யைப் படம் பிடிக்கும் அதி நவீன 3டி கேமர, வானிலையைப் பதிவு செய்யும் கருவி, செவ்வாயின் மண்ணையும் பனிக் கட்டியையும் தோண்டியெடுக்க 7.7 அடி நீளம் கொண்ட ரோபோ கரம், எடுக்கப்பட்ட மண்ணின் மூலக் கூறுகளை அறிய அதை சூடாக்கும் கருவி, பின்னர் அதை ஆய்வு செய்ய தனி ஆய்வுக் கூடம் இத்தனையும் அடங்கியிருக்கின்றன.
போகும் வழியெங்கும் தனது செயல் பாடுகளைத் தகவல்களாக பூமிக்கு அனுப்பிக் கொண்டே சென்றது. செவ்வாயில் தரை யிறங்கிய அடுத்த நிமிடத்தில் தகவல் அனுப்பும் பணியை நிறுத்திக் கொண்டது.
மிச்சமீதியிருந்த தனது பேட்டரி சக்தியைக் கொண்டு சூரிய ஆற்றல் பெறும் சூரிய ஒளித்தகடுகளை விரிப்பதில் கவனமாக இருந்தது. பின்னர் சூரிய ஒளித் தகடுகளி லிருந்து பெறப்பட்ட மின் ஆற்றலைக் கொண்டு தனது பணியைத் தொடர்ந்தது. சரியாக தரையிறங்கிய 2 மணி நேரம் கழித்து தனது முதல் புகைப்படத் தொகுப்பை வெளி யிட்டது பீனிக்ஸ்.
திட்டமிட்டபடி தான் இறங்கியுள்ள பகுதி யின் தட்பவெப்பம் மற்றும் சூழல்களை ஆய்வு செய்துவிட்டு, 9 நாட்கள் கழித்து தனது பணியைத் தொடங்கி விட்டது பீனிக்ஸ். அது ஆய்வு செய்து அனுப்பும் தகவல்களை வைத்து, அங்கு உயிர் வாழும் வாய்ப்பிருக்கிறதா என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
அப்படித் தெரிந்து கொள்வதன்மூலம் அங்கிருக்கும் உயிர்களோடு அல்லது மனிதர்க ளோடு நாம் தொடர்பு கொள்ளலாம் என்ப தெல்லாம் அடுத்த கட்டம்தான். ஆனால் காலம் காலமாக உயிர்கள் கடவுளால் உண்டாக் கப்பட்டன என்ற புரூடாவிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் உயிர்களின் தோற்றம் பற்றிய பல செய்திகள் நமக்குக் கிடைக்கும். அறிவியல் நிச்சயம் மூடநம்பிக்கைகளைத் தகர்க்கும்.