தமிழறிஞர்
தமிழ்ப் பண்பின் உறைவிடம் பேராசிரியர் சாலினி இளந்திரையன்
- கு.வெ.கி.ஆசான்
ஆசிரியப் பணியுடன் இலட்சியப் பாதையை இணைத்து வாழ்ந்தவர், சாலினியார் என அழைக்கப்பட்ட சாலினி இளந்திரையன் அவர்கள். பார்த்தவுடன் அவருடைய எளி மையும், தூய்மையும் எவர்க்கும் தோன்றும்; அறிமுகமானவர்களுக்கு அவருடைய ஆர்வமும் அடக்கமும் வெளிப்படும். தம் வாழ்வு இணை யராகத் திகழ்ந்த தமிழ்ப் பெருந்தகை சாலையாருக்கு, அக வாழ்விலும், புறவாழ்வி லும் துணை நின்றவர்; ஏற்ற பொறுப்பை முழு ஈடுபாட்டுடனும் கடமை உணர்வுடனும் செய்தவர்; தமிழ் மொழியையும் இனத்தையும் நாட்டையும் நேசித்து இறுதி மூச்சு நிற்கும் வரை தொண்டாற்றியவர். உற்றாருக்கும் மற்றவருக்கும் சேவையும் உதவியும் செய்து மகிழ்ந்தவர். இவர் தாம் சாலினியார்!
பிறப்பு - கல்வி
தென் தமிழ்நாட்டில் விருதுநகரில் 1933 டிசம்பர் 22-இல் பிறந்தவர் சாலினியார். இவரு டைய இயற்பெயர் கனகசவுந்தரி. இவருடைய தாய் சிவகாமி அம்மாள்; தந்தை வே.சங்கரலிங்கம். வணிக நிறுவனம் ஒன்றில் - மும்பையில் மேலாளராகத் தந்தை பணியாற்றினார். பின்பு 1940களின் தொடக் கத்தில் இருந்து விருதுநகரில் வீட்டுடன் அமைந்த சொந்த வணிகத்தை நடத்தினார். கனகசவுந்தரியின் அக்காள், ஞான சவுந்தரி. அவரும் அவருடைய துணைவர் குமாரசாமியும் சென்னையில் சிறந்த மருத்துவர்களாயினர். அக்காவின் வழிகாட்டலைப் பெற்ற கனக சவுந்தரிக்கு, அவருடைய அண்ணார், இராசரத் தினம் அவர்களின் ஊக்குவிப்பு, நம்பிக் கையுடனும் அறிவார்ந்த முறையிலும் இவர் வளருவதற்கு உதவிற்று. மத்திய அரசில் உயர்ந்த அதிகாரியாக - வருமானவரி அலு வலராகத் திகழ்ந்த அவரும், அவருடைய துணைவியார், ஜமுனாக்காவும் சாலினியார் மறையும் வரை அன்பு காட்டியவர்கள் ஆவர்.
சிறுவயதில் பம்பாயில் (இப்பொழுது, மும்பைய்) மூன்றாம் வகுப்பு வரை படித்த கனகசவுந்தரி, அய்ந்தாம் வகுப்பை மதுரையி லும், தொடர்ந்து உயர்நிலைப் பள்ளிப் படிப்பை விருதுநகரிலும் முடித்தார். பள்ளிக்கூடம் மட்டு மன்றி, விருதுநகரில் இருந்த காரைக்கால் அம்மையார் சங்கம், சமரச சன்மார்க்க சங்கம், விருதைத் தமிழ்க் கழகம் ஆகியனவும் இவருடைய மன வளர்ச்சியில் பங்கு பெற்றன.
மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் ஈராண்டுகள் இடைநிலை (இண்டர்மீடியட்) வகுப்பை முடித்த பின்பு, சென்னை மாநிலக் கல்லூரியில் கலை இளநிலை சிறப்பு வகுப்பில் (பி.ஏ. ஆனர்ஸ்) மூன்றாண்டுகள் பயின்றார். அதில் அவர் பெற்ற பட்டம் கலை முதுநிலை (எம்.ஏ) பட்டத்திற்குச் சமம் ஆகும். அவர் பயின்ற பாடம் தமிழ்.
மணமான பின்பு...
சென்னை மாநிலக் கல்லூரி, கனக சவுந்தரி யின் வாழ்வில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது. அவருக்கு வாழ்வு இணையராக அமைந்த மகாலிங்கம் எனும் சாலை இளந் திரையன் அங்கு அவருடன் பயின்றார். இரு வரும் விரும்பியே இல்லறம் ஏற்றனர். ஆயினும், அவர்களுடைய திருமணம், புலவர் இராச கோட்டியப்பரின் துணையுடனும், பெற்றோர் சம்மதத்துடனும் 1954இல், வே.வ.இராமசாமி அவர்களின் தலைமையில் நிகழ்ந்தது.
மணமான இணையர் இருவரும் முதுநிலை இலக்கிய ஆய்வுப்பட்டம் (எம்.லிட்.) பெற ஆய்வுகளை மேற்கொண்டனர். சாலினியார், சிலப்பதிகாரத்தில் சொல்வளம் என்பது பற்றி ஆய்ந்து பட்டம் பெற்றார். பிற்காலத்தில், தமிழில் வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்பது பற்றி அய்ந்து முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்றார். ஆய்வு ஏடு பின்பு நூலாக வெளிவந்தது.
கல்லூரி ஆசிரியர்:
தம் வாழ்விணையர் சாலையாருடன் 1958 இல் புதுடெல்லியில் குடியேறிய சாலினியார், அங்கு கல்லூரி ஆசிரியராகப் பணியேற்றார். முதலில் தயாள் சிங் மாலைக் கல்லூரியில் இரண்டாண்டுகள் பணியாற்றினார். பின்பு திருவேங்கடவன் கல்லூரியில், 1961 முதல் 1982இல் விருப்ப ஓய்வு பெறும் வரை தமிழ் கற்பித்தார். ஓய்வு பெறுவதற்கு முன்பு அக்கல் லூரியின் முதல்வராகப் பணியாற்றிக் கொண்டி ருந்தார். நல்ல குடிமக்களாக, கொள்கை போற்றும் சாதனையாளராக மாணவர்கள் வளர ஆசிரியரின் பங்கு கணிசமானது, எனும் கருத்தைக் கொண்ட சாலினியார், அதற்கேற்ப மிகுந்த உழைப்பை நல்கி மாணவரை வழிநடத்தி நற்பெயர் பெற்றார்.
டெல்லியில் தமிழ் மாணவரிடையே இருந்த நம்பிக்கையின்மையையும் தாழ்வு மனப்பான் மையையும் போக்கி, பாடத்தில் ஆர்வத்தை மேம்படுத்தியதுடன் பேச்சுப் போட்டி, கட்டு ரைப் போட்டி, கலை நிகழ்ச்சிகள் முதலிய வற்றிலும் அவர்களை முன்நிற்கச் செய்தார். பிற மாணவர்களும் இவரை மதிக்கும் வகையில் வழிகாட்டினார். தமிழர் நாகரிகத்தைக் காட்டும் கண்காட்சியைக் கல்லூரி மாணவர்களைக் கொண்டு நடத்தி பெரும் வெற்றியும் நற்பெயரும் பெற்றார். இளைஞர்களை வழி நடத்தும் ஆசிரியர்களுக்கு எப்போதும் நிமிர்ந்து நிற்கும் செம்மாந்த இயல்பும் செயல்நடையில் அதாவது, தங்கள் பணியில் இடையறாத உழைப்பும் மகிழ்ச்சிப் பெருமிதமும் கட்டாயம் இருக்க வேண்டும், எனும் அவர் சொல்லுக்கு அவரே இலக்கணமாகத் திகழ்ந்தார்.
பேச்சும் எழுத்தும்
பள்ளிப் படிப்பில் இருந்து கல்லூரிப் படிப்பு முடியும் வரை, பாடங்களை ஊன்றிப் படிப் பதுடன், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவற்றில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்ற சாலினியார், பிற்காலத்தில் தம் துணைவருடன் இணைந்து தமிழகம் முழு வதும் பயணம் செய்து, இலக்கியங்கள் பற்றியும், இனம் மொழி மேம்பாடு பற்றியும், வாழ்வில் செம்மையைச் சேர்க்கும் புதிய முற்போக்கு எண்ணங்கள் குறித்தும், கருத்துகளைப் பரப்பினார். 1960களின் தொடக்கத்திலேயே மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்கு இலக்கியப் பயணம் சென்றார்.
நல்ல செய்திகளையும் எண்ணங்களையும் தாங்கிய, வாழ்க்கை வரலாற்று இலக்கியம் (1974), பண்பாட்டின் சிகரங்கள் (1975), மதிப்பீடு (1979), மனித நேய மணி நெறிகள் (1995), ஆசிரியப் பணியில் நான் (1999), குடும்பத்தில் நான் (2000) ஆகிய எல்லோருக் கும் என்றும் பயன்தரும் நூல்களை எழுதினார். தம் துணைவருடன் இணைந்து சில நூல்களை அளித்தார். மனித வீறு, வீர நடய் அறிவி யக்கம் ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் திகழ்ந்தார். தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தில் தீவிர ஆர்வமும் செயலில் ஈடுபாடும் காட்டினார்.
தடை செய்யப்பட்ட, தமிழர் தன்னுரிமைப் பிரகடன மாநாட்டில் கலந்து கொண்டதற்காகச் சில நாள் சிறைப்பட்டார். தம் துணைவர் மறைந்த பின்னரும் மனித நேயப் பார்வையுடன் மக்கள் தொண்டாற்றினார். தமிழைச் செவ்வி யல் மொழியாகவும், மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாகவும் அறிவிக்கக் கோரி, (சென்னை) தலைநகர்த் தமிழ்ச் சங்கம், தில்லி தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய மாநாட்டுக்குத் தலைமை ஏற்கத் தில்லிக்குச் சென்றார். பேராளர்களை வரவேற்கச் சென்றபோது ஏற் பட்ட சாலை விபத்தில், 2000 ஏப்ரல் 29-இல் மறைந்தார்.
சாலையாரின் கடைசித் தங்கை, முனைவர் இரா.ஞானபுஷ்பம் எழுதுகிறார்: உறவாலும் கொள்கையாலும் தங்களோடு தொடர்புடை யவர்களும் இணைந்ததே குடும்பம் என்பது சாலய் - சாலினியின் கோட்பாடாக நெடுகிலும் இருந்து வந்தது. இப்பெரிய குடும்பத்திற்குத் தலைமை ஏற்றவர் சாலினியே. இந்தக் குடும்பத்தைத் தம் கனிவான அன்பாலும், கடமை தவறாத செயல்நெறிகளாலும், கடின உழைப்பாலும், ஈத்துவக்கும் இன்பத்தாலும் பேணிக் காத்தவரும் சாலினியே.
இவ்வாறு தமிழ்ப் பண்பின் உறைவிடமாய், செயல்வடிவமாய் வாழ்ந்த சாலினியார் எல்லோருக்கும், எக்காலத்தும் ஒரு சீரிய பாடம் ஆவார்!