நண்பருக்கு அனுப்ப பிரதி எடுக்க



அறிந்துகொள்வோம்

நான்தான்... அயோடின் பேசுகிறேன்...

பிள்ளைகளே! வணக்கம்
நான்தான் அயோடின். நான் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இன்றியமையாத சக்தி தரும் ஓர் ஊட்டச்சத்து.

நான் (அயோடின்) தோட்ட மண்ணில் வசிக்கிறேன். அங்கிருந்து காய்கறிகள், பழங்கள் மூலம் உங்கள் உடலை அடைகிறேன்.

தொடர்ந்து வெள்ளத்தினாலும் மழை நீராலும், எப்படியோ அயோடினாகிய நான் மண்ணுடன் சேர்ந்து அகற்றப்படுகிறேன். இந்த மண்ணிலுள்ள எனது பற்றாக்குறையால் உங்களுக்குப் போதுமான அளவு சக்தி என்னிடமிருந்து கிடைப்பதில்லை.

எனது பற்றாக்குறையால் உங்கள் மனமும் உடலும் வளர்ச்சி அடையாது. உங்கள் அறிவுத் திறன் (10 முதல் 15 அய்.க்யூ. புள்ளிகள் வரை) குறைந்து விடும்.
என்னுடைய (அயோடின்) பற்றாக்குறை காரணமாக நீங்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாது. உடல் சக்தி குறைவால் உங்களால் ஆர்வமாக விளையாடக் கூட முடியாது.
உங்களுடைய உடலில் தேவைக்கேற்ற அளவு நான் (அயோடின்) இல்லை என்றால் உங்களுடைய கழுத்துப் பகுதியில் ஒரு வீக்கம் தோன்றும். இந்த மாதிரி கழுத்து வீக்கத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதற்குப் பெயர்தான் முன் கழுத்துக் கழலை இது பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும்.

என்னுடைய இந்தப் பற்றாக்குறை, உங்களுக்குக் கெடுதல் விளைவிக்கும். இது வயது வித்தியாசமின்றி ஆண், பெண், குழந்தைகள் எல்லோரையும் பாதிக்கும்.

இருந்தபோதிலும் நீங்கள் இத்தகைய பாதிப்புகளிலிருந்து காப்பாற்றப்படலாம். குணமாவது வெகு சுலபம். எப்பொழுது நீங்கள் உப்பை உபயோகித்தாலும், அது அயோடைஸ்டு உப்பா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களைப் பாதிப்பிலிருந்து மீட்க, உங்களுக்காகவே, உப்போடு கலந்து அயோடைஸ்டு உப்பாக தயாரிக்கப்படுகிறேன்.

என்ன.. புரிந்து கொண்டீர்களா? சக்திக்கும் நானே! புத்திக்கும் நானே! என்னைப் பயன்படுத்தி நல்ல உடல் நலம் பெறலாம்!