சின்னக்கதை
தொப்பி செய்கிற வேலை
 |
ஒரு போலீஸ்காரன் சீருடை அணிந்து தலையில் தொப்பி வைத்து கைத்தடியுடன் நாற்சந்தியில் டூட்டியில் நின்றுகொண்டிருந்தான்.
அந்த வழியாக வந்து கொண்டிருந்த டீக்கடைக்காரன் நாற்சந்தியில் தன்னுடைய பால்ய சகா நின்று கொண்டிருப்பதைக் கண்டுவிடவே, சந்தோஷத்தில் அவன் பக்கத்தில் வந்து, என்னடே, இன்னைக்கு டூட்டி இங்கேயா? என்று கேட்டான்.
என்ன டேயா? மரியாதை கெட்டவனே என்று சாடி, கைத்தடியால் நாலு வீக்கு வீக்கினான்.
இந்த நிகழ்ச்சியை டீக்கடைக்காரன் ஒரு யானைக் கோபத்தோடு தனக்குள் அடக்கிக் கொண்டு ஒன்றும் சொல்லாமல் போய்விட்டான்.
சில நாட்களுக்குப் பிறகு, அதே போலீஸ்காரன், டீ கடைக்காரனின் கடைக்குள் டீ குடிக்க வந்தான். நண்பனிடம் அன்பாகப் பேசி டீக்கு ஆடர் கொடுத்தான். உக்ரமான வெயிலின் வெப்பத்திலிருந்து சற்றுக் குளுமை பெற தொப்பியைக் கழற்றி மேஜை மேல் வைத்து, கைத்தடியையும் அதன் பக்கத்தில் வைத்தான்.
டீக்கடைக்காரன் ஆடர்படி டீ போட்டுக் கொண்டு வந்து அவன்முன் வைத்தான். நன்றாக அமைந்த டீயை போலீஸ்காரன் ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த சமயம் ஆமா அன்னைக்கு தேவையில்லாம ஏன் என்னை அடிச்சயாம்? என்று கேட்டான்.
ஓ! அதைக் கேக்கிறியா?... அன்னைக்கு உன்னை நானா அடிச்சேன்; எல்லாம் இந்தத் தொப்பி செய்த வேலை என்று சிரித்தான் போலீஸ்காரன்.
டீக்கடைக்காரனின் மூளைக்குள் ஒரு வெளிச்சம் வீசியது. நைசாக பதிலுக்குச் சிரித்துக் கொண்டே, ஓ! அப்படியா சங்கதி, அப்படியானால் பரவாயில்லை என்று சொல்லிவிட்டு, இந்தத் தொப்பி உனக்கு ரொம்ப நல்லா இருக்கு டேய் என்று சொல்லி தன்னுடைய தலையில் வைத்துப் பார்க்கிறதுபோல் வைத்துக்கொண்டு கைத்தடியை எடுத்து திடீரென்று போலீஸ்காரனை பதிலுக்கு நாலு வீக்கு வீக்கினான்.
போலீஸ்காரன் தன் உடம்பை நெளித்து, வளைத்து டேய், டேய் என்ன இது? என்றான் கோபமாக.
டீக்கடைக்காரன் வாய் விட்டுச் சிரித்துக் கொண்டே சொன்னான்.
நானா அடிக்கிறேன்; எல்லாம் இந்தத் தொப்பி செய்கிற வேலை!
- கி.ராஜநாராயணனின் தாத்தா சொன்ன கதைகள் நூலிலிருந்து, கதை சொல்லியவர் கோ. முருகேசன், திருவனந்தபுரம்