ஜூலை 2008 மலர் 5 இதழ் 8

நாள் குறிப்பு எனும் சிறப்பு

பிஞ்சுகளே, உங்களுக்கு நாம் அன்றாடம் என்ன செய்கிறோம் என்பதைக் குறித்து வைக்கும் பழக்கமுண்டா? காலை எழுந்ததும் இன்று என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் எனக் குறித்து வைத்துக் கொண்டு பணியாற்றுவது வேறு. அது நாம் திட்டமிட்டு செயலாற்ற உதவும். எடுத்துக்காட்டாக, என்னென்ன வீட்டுப் பாடங்கள், என்ன தேர்வு, படிப்பு தவிர்த்து வீட்டில் செய்ய வேண்டிய பணிகள், நண்பர்கள், நூலகங்கள், சந்திப்புகள் இவற்றைக் குறித்துக் கொண்டு பணியைத் தொடங்குவது என்பது நாம் நினைத்ததை படிக்காமல் நிறைவு செய்ய உதவும் குறிப்புகளாகும். இவற்றை துண்டுச் சீட்டுகளிலோ சிறு குறிப்பேட்டில் தேதியிட்டோ எழுதி, முடிந்த பின் அடித்து விடுவோம்.
இன்னொரு வகை குறிப்பு இருக்கிறது. அது நாம் கற்றுக் கொண்டவற்றை, புதிதாய்க் கேட்ட செய்திகளை, நாளிதழ்களில் படித்த விசயங் களை விவரத்தோடு தனிக் குறிப்பேட்டில் குறித்து வருவதாகும். இது பிற்காலத்தில் பெரும் செல்வமாகப் பயன்படும். நமது அறிவைப் பெருக்கிக் கொள்ள உதவுவதோ, புள்ளி விவரத்தோடு எதைப் பற்றியும் பேச, எழுத, உரிய ஆதாரங்களைத் தேடிப்பிடிக்க பெருந்துணையாக அமையும். இது வேறு வகையான குறிப்பு. முன்னது திட்டமிட்ட செயல்பாட்டுக்கும், எதையும் மறக்காமல் செய்து முடிக்கவும் உதவுவது; பின்னது அறிவு வளர்ச்சிக்குப் பயன்படுவது. இவை தவிர இன்னொரு வகைக் குறிப்பும் உண்டு. அதுதான் நாள் குறிப்பு (Diary) ஆகும்.

இந்த Diary என்பதும் Journal என்பதும் ‘Day’ என்ன வேர்ச் சொல்லிலிருந்து உருவான சொற்களாகும். அதாவது நாள் என்ற சொல்லின் அடிப்படையில் உருவானது தான் நாள் குறிப்பு என்ற சொல்லாகும். இவ்வாறு நாள் குறிப்பு எழுதும் பழக்கம் இன்று உலகில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களில் பெரும் பாலானோர்க்கு இருக்கிறது. அலுவலகப் பணிகளை, குறிப்புகளை தினம்தோறும் பதிந்துவரும் பழக்கம் நீண்ட காலமாக இருந்து வந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி நாள்குறிப்பு எழுதும் பழக்கம் ஜப்பானியப் பெண்களிடம் பத்தாம் நூற்றாண்டு காலத்தில் தோன்றியதாக வரலாறு சொல்கிறது.
17ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த சாமுவேல் பெப்பைஸ் என்பவர் எழுதிய நாள் குறிப்புதான் நமக்குக் கிடைத்துள்ள மிக மூத்த நாள்குறிப்பாகும். 1665-1666 ஆண்டுக் காலங்களில் சாமுவேல் எழுதியுள்ள இந்த டைரியின் வாயிலாக அப்போது இங்கிலாந்தில் நடந்த மாபெரும் தீ விபத்து மற்றும் லண்டனில் பரவியிருந்த பிளேக் நோய் பற்றிய செய்திகளை வரலாற் றோடு ஒப்புநோக்க முடிகிறது. மிகப் புகழ்பெற்ற இந்த நாள்குறிப்பு ஒரு பெரிய ஆவணமாகப் போற்றப்படுகிறது.
தென்னிந்தியாவின் பெப்பைஸ் என்ற பெயர் சென்னை பெரம்பூரில் பிறந்து பாண்டிச்சேரியில் பிரெஞ்சு அரசாங்க அலுவலராகப் பணியாற்றிய அனந்தரங்கப் பிள்ளையைச் சேரும். 1709ஆம் ஆண்டு பிறந்த அனந்தரங்கர் தன் வாழ்வின் பெரும் பகுதியைப் பற்றிய ஏராளமான குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். 1761ஆம் ஆண்டு வரையிலான அவரது நாள்குறிப்பு, வரலாற்றாசிரியர்களுக்கு பெருந்துணை புரிவதாகும்.
அதற்கும் முன்பே முகலாயப் பேரரசை இந்தியாவில் நிறுவிய பாபரின் நாள் குறிப்புகள் புகழ்பெற்றவை. புரட்சியாளர் சேகுவேராவின் வாழ்க்கைச் சிந்தனையை மாற்றிய அவரது தென்னமெரிக்க மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணம் பற்றிய மோட்டார் சைக்கிள் டைரீஸ் நூலாகவும், திரைப் படமாகவும் வந்து பெரும் புகழ்பெற்றது. அவரது பொலிவிய நாட்குறிப்பு, புரட்சிகர சிந்தனைகயாளர்களுக்கு ஒரு பாடநூல் போன்றதாகும். அவரது அனுபவங்களை அள்ளிப்பருகும் வாய்ப்புக் கிடைப்பது அரிதல்லவா? இதுபோன்றே பெர்னார்ட்ஷா, விர்ஜினியா வுல்ப் போன்றோரின் நாள் குறிப்புகள் உலகப் புகழ்பெற்றவையாகும்.
லியோ டால்ஸ்டாய் மற்றும் அவரது இணையர் சோபியா டால்ஸ்டாய் ஆகியோர் தாங்கள் எழுதும் நாள்குறிப்புகளை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு படித்துக் கொள்வார்களாம்.
வரலாற்று ஆதாரங்களாகப் பயன்பட்ட நாள்குறிப்புகளும் உண்டு. மிசா எனப்படும் அடக்குமுறை அவசரச் சட்டம் பிறப்பிக்கப் பட்டு, தமிழ்நாட்டில் ஆசிரியர் வீரமணி தாத்தா, உள்ளிட்ட பலரும் சிறைக் கொடுமைகளுக்கு ஆளானதைப் பற்றிய செய்திகளை சிறையில் மறைந்த மேயர் சிட்டி பாபுவின் டைரிக் குறிப்புகள் மூலம் அறிய முடிந்தது. இதேபோல் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது 1942-44ஆம் ஆண்டுகளுக்கிடையில் நெதர்லாந்து நாட்டை ஜெர்மனி ஆக்கிரமித் திருந்தபோது அங்கிருந்து தப்பி ஆம்ஸ்டர்டாம் நகரில் ஒளிந்திருந்த அன்னே பிரான்க் என்ற பதின்மூன்று வயதுச் சிறுமியின் நாள்குறிப்பும் உலகெங்கும் படிக்கப்பட்ட நூலாக சிறப்புப் பெற்றதாகும்.
இப்படி உலக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் எழுதப்படும் நாள் குறிப்புகள் தான் முக்கியமானவை என்றல்ல. நாம் வாழ்ந்த வாழ்க்கையை, நம் இளவயதுக் குறும்புகளே, சின்னச் சின்ன சோகங்களை, ரசித்து மகிழ்ந்த நினைவுகளையெல்லாம் எவ்வித ஒளிவு மறைவும் இன்றி எழுதி வைப்பதன் மூலம் பிற்காலத்தில் அவற்றைத் திரும்பிப் பார்த்து பாடம் கற்கவும் மகிழ்வில் திளைக்கவும் வாய்ப்பு ஏற்படும். நாம் எப்படி வளர்ந்தோம் நாம் செய்த தவறுகள் என்ன போன்றவற்றை புரட்டிப் பார்ப்பது நமது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அடிகோலுவதாகும்.
நாள்தோறும் எழுதும் நாள்குறிப்பு மட்டு மல்ல. சிறப்புக் குறிப்புகளும் உண்டு. பயணக் குறிப்புகளில் குறிப்பிட்ட நமது ஒரு பயணத்தின் அத்தனைச் செய்திகளையும் பதிவு செய்ய முடியாதா? நாம் சென்ற ஊர், அதன் சிறப்பு, பார்த்த இடங்கள், பழகிய மனிதர்கள், சென்று வந்த வழித்தடம் இப்படி சுவையான எத்தனையோ தகவல்கள் நிரம்பிய களஞ்சியமாக நாள்குறிப்பு பரிணமிக்கும்.

இன்றைய நவீன உலகில் நாள்குறிப்புகள் என்பது தாள்கள் நிரம்பிய ஏட்டுப்புத்தக வடிவத்தில் மட்டுமல்ல; கணினியில் பிறர் படிக்க முடியாமல் ஓட்டுப்போட்டு எழுதுவதற் கான வாய்ப்புடனும் இணையத்தில் வேறு யாரும் நுழைய முடியாத ரகசியக் குறியீடு களுடன் கூடிய நாள்குறிப்புத் தளங்களும் கிடைக்கின்றன.
நாள்குறிப்பு எழுதுவது என்பது நமக்காக! நம் வாழ்க்கை முறையை நாமே அலசிப் பார்ப் பதற்காக! விரைந்து எழுதுங்கள்! எல்லா வற்றையும் எழுதுங்கள்! எதையும் விடாதீர்கள்! நேர்மையாக எழுதுங்கள்! உணர்வுகளை எழுதுங்கள்! என்கிறார் டிரிஸ்டின் ரெய்னர். உண்மையில் நாள்குறிப்பு நமக்காகத்தான். கேள்வி கேட்கப்படாத வாழ்க்கை பயனற்றது என்கிறார் சிந்தனையாளர் சாக்ரடீசு. நாம் வாழ்க்கை முறையை நாம் கூர்ந்து அலசி பார்க்க வேண்டாமா? அதற்கு நாம் நாள்குறிப்பு எழுதுவது அவசியமல்லவா?
நாள் குறிப்பு எழுதும் பழக்கமுடையோர் உங்கள் நாள் குறிப்பில் இக்கட்டுரையைப் படித்ததைப் பற்றி ஒரு வரி இன்றே எழுதங்கள்! எழுதும் பழக்கமில்லாதோர் இதையே தொடக் கமாகக் கொண்டு இன்றே எழுதத் தொடங்குங்கள்!
- விண்டோஸ் அண்ட் எய்சில்ஸ் மார்ச் இதழ் கட்டுரையை தழுவி எழுதியது