ஜூலை 2008 மலர் 5 இதழ் 8

புகழ்பெற்ற மனிதர்கள்

 

ஜெசி ஓவன்ஸ்: ஆரியத்தை வென்ற கருப்பர்

- கு.வெ.கி. ஆசான்

அவருடைய பாட்டனார் ஓர் அடிமை; அவருடைய தந்தை வாரத்திற்கு (குத்த கைக்கு) பயிர்த் தொழில் செய்தவர். அந்தக் கருப்பு இனத்தினரின் தோன்றல், பந்தைய ஓட்டத்தில் அனைவரும் வியக்கும் வகையில் விரைந்து ஓடி உலகப் புகழ் பெற்றார். விளையாட்டு வீரர்களில் வரலாறு படைத்த அவர் பெயர், ஜெசி ஓவன்ஸ்.
பிறப்பும் பெயரும்

அமெரிக்க நாட்டில் அலபாமா மாநிலத்தில், லாரன்ஸ் பகுதியில் 1913, செப்டம்பர் 12-இல் பிறந்தவர், ஜெசி ஓவன்ஸ். தந்தையின் பெயர் ஹென்றி ஓவன்ஸ்; தாயின் பெயர் எம்மா ஓவன்ஸ். இவர் ஒன்பது வயதுச் சிறுவனாக இருந்தபொழுது, இவருடைய தந்தை, ஒஹாயோ (Ohio) மாநிலத்தில் கிளீவ்லேண்ட் பகுதியில் குடியேறினார். ஜேம்ஸ் கிளீவ் லேண்ட் (cleveland) ஓவன்ஸ் என்றும், சுருக்க மாக J.C. ஓவன்ஸ் என்றும் அச்சிறுவன் அழைக்கப்பெற்றான். பள்ளியில் சேரச் சென்ற சிறுவன், தன் பெயரின் முன் எழுத்துகளை து.ஊ. எனப் பலுக்குவதற்கு (உச்சரிப்பதற்கு) மாறாக, கிராமத்துப் பாணியில், ஜெசி (Jesse) எனச் சொன்னதால், இவர் பெயர் ஜெசி ஓவன்ஸ் எனப் பதிவாகி, அவ்வாறே நிலைத்துவிட்டது.
அடிமை முறை - இன ஒதுக்கல்
ஆஃபிரிக்கக் கண்டத்தில் இருந்து, கொண்டு செல்லப்பட்டு, அமெரிக்காவில் விற்கப்பட்டவர்கள், நீக்ரோக்கள் (Negroes) என அக்காலத்தில் அழைக்கப்பட்டார்கள். அவ்வாறு அழைக்கப்படுவதை விரும்பாத அவர்கள், தங்களைக் கருப்பர்கள் (Blacks) எனச் சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டார்கள். இப் பொழுது, ஆஃபிரிக்க - அமெரிக்கர் என அவர்கள் அறியப்படுகிறார்கள்.
அப்ரகாம் லிங்கன் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்தபொழுது (1860-64), அடிமைத் தனம் சட்டப்படி ஒழிக்கப்பட்டது. எனினும் இன ஒதுக்கல் தொடர்ந்து இருந்தது. சிற்றூரிலும் நகரத்திலும் கருப்பர்கள் ஒதுக்கப் பட்ட இடத்தில்தான் வாழ்ந்தனர். சம உரிமைகள் இல்லை; வாய்ப்புகள் மறுக்கப் பட்டன. ஆகையால் கருப்பர்கள் ஏழையராகவே வாழ்ந்தனர்; வெள்ளையர்கள் கண்ட வளர்ச்சி, அவர்களுக்கு இல்லாது போயிற்று. இந்தக் கடினமான சூழ்நிலையில் ஜெசி ஓவன்ஸ் வளர்ந்தார். பள்ளிக்கூட நேரம் அல்லாத நேரங் களில், வெவ்வேறு வேலைகளைச் செய்து கொண்டே படித்தார். பலசரக்குக் கடைகளில் இருந்து சாமான்களை வீடுகளுக்குக் கொண்டு சென்று கொடுப்பார்; லாரிகள் எனப்படும் சரக்கு வண்டிகளில் சரக்கு ஏற்றுவார்; செருப்புக் கடையில் பழுதானவற்றைத் தைத்துக் கொடுப் பார். இப்படி வேலை செய்து ஊதியம் பெற்றுப் படித்தார்.
கடின உழைப்பு

சார்லஸ் ரைலி என்ற விளையாட்டு ஆசிரியர், ஜெசி ஓவன்சுக்கு ஓடுவதில் இருந்த திறமையை அறிந்தார்; ஊக்கம் தந்தார். மாலையில் செருப்புக் கடையில் ஓவன்ஸ் பணியாற்றியதால், காலையில் பள்ளி தொடங்கு வதற்கு முன்பே பயிற்சி பெற அனுமதி கொடுத்தார். கிடைத்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொண்டு, ஓவன்ஸ் கடுமையாக உழைத்து, ஓட்டத்தில் தன் வேகத்தை மிகவும் வளர்த்துக்கொண்டார்.
நாடு தழுவிய புகழ்
1933-இல், கிளீவ்லேண்டில், கிழக்குத் தொழில் நுட்ப உயர்நிலைப் பள்ளியில் ஓவன்ஸ் படித்துக் கொண்டிருந்தபொழுது, தேசிய உயர்நிலைப் பள்ளி விளையாட்டு வீரர் (championship) போட்டி சிகாகோவில் நடந்தது. அதில் கலந்து கொண்டு, நூறு கஜம் (300 அடி, அதாவது 91 மீட்டர்) ஓட்டத்தில், உலக சாதனையான 9.4 விநாடி என்பதைச் சமன் செய்தார். நீளம் தாண்டுதலில் 24 அடி, ஒன்பதரை அங்குலம் தாண்டினார். இதன் காரணமாக நாடு முழுவதும் இவர் பெயர் பரவியது.
ஒஹாயோ அரசுப் பல்கலைக் கழகத்தில் பயின்ற பொழுது, 1935, 1936 ஆகிய ஆண்டு களில் நாடு தழுவிய விளையாட்டு வீரர்களுக் கான போட்டிகளில் கலந்து கொண்டார். ஒவ்வொரு ஆண்டும், முதன்மை வீரருக்கான நான்கு பதக்கங்களை ஜெசி ஓவன்ஸ் பெற்றார்; இந்தச் சாதனை 2006-இல் தான் சமன் செய்யப்பட்டது. ஆம், 70 ஆண்டுக்காலம் அவர் சாதனையை எவரும் முறியடிக்க முடிய வில்லை!
1935-இல் மிசிகனில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டு, நீளம் தாண்டுதலில், 26 அடி எட்டே முக்கால் அங்குலம் (8.13 மீட்டர்) தாண்டினார். இந்த உலகப் பதிவு (world record) 25 ஆண்டுகள் நீடித்தது!
உலகப் போட்டி
இவை எல்லாம் அமெரிக்க நாட்டின் விளையாட்டுப் போட்டிகளில் சாதித்தவை. ஜெர்மனியின் தலைநகராம் பெர்லினில் 1936 ஆகஸ்டில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி கள் நடந்தன. அதில் ஜெசி ஓவன்ஸ் சாதித்தது, உலக இனங்களின் வரலாற்றில் நிலைத் திருக்கக் கூடிய ஒன்று. 1933-இல் ஆட்சிக்கு வந்த ஜெர்மன் நாஜிக் கட்சியின் தலைவன் ஹிட்லர், தன்னுடைய ஆரிய இனம் உயர்ந்தது; அதுவே உலகை ஆளவேண்டும் என வெளிப் படையாகக் கூறினான். ஆஃபிரிக்க நாட்டுக் கருப்பின மக்கள், அனைவரிலும் கடையர் என்பது அவன் கருத்து. அவன் கண் முன்னா லேயே ஜெர்மனியர் உள்ளிட்ட மற்ற நாட்டவர் களை வென்று, நான்கு தங்கப் பதக்கங்களை ஜெசி ஓவன்ஸ் வென்றார். வெள்ளை இனம் உயர்ந்தது என்பது வெறும் வெத்துவேட்டு என்பதை நடைமுறையில் மெய்ப்பித்தார். 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், 4 ஒ 100 மீட்டர் ரிலே ஓட்டம் ஆகிய நான்கு நிகழ்ச்சிகளில் தங்கப் பதக்கத்தை ஒருவரே முதன் முதலில் பெற்றார். இவ்வளவு பெரிய சாதனை வீரருடன் கைகுலுக்க ஹிட்லருக்கு மனம் வரவில்லை. ஒலிம்பிக்கில் இந்த நான்கு விளையாட்டு களிலும், மீண்டும் ஒருவரே முதன்மை பெற்றது 1984இல்; ஆம், 48 ஆண்டுகளுக்குப் பின்பு! அவர் பெயர் கார்ல் லூவிஸ்; அவரும் ஒரு கருப்பரே!
சொந்த நாட்டில் புறக்கணிப்பு
ஹிட்லர், ஜெர்மனியின் அதிபர். அவன் கைகுலுக்காதது ஜெசி ஓவன்சுக்குப் பெரிய குறையாகப்படவில்லை. அமெரிக்கக் குடியரசுத் தலைவர், ஃபிராங்லின் டி.ரூஸ் வெல்ட் (1932-44), அவருக்குப் பின்பு வந்த ஹேரி எஸ்.ட்ரூமன் ஆகியோரும் கூடப் பாராட்டவில்லை, மதிக்கவில்லை, ஆதரவு தரவில்லை.
உலர் சலவையகம் (dry cleaning) வாகனங் களுக்கு வாயு நிரப்பும் நிலையம் முதலிய வற்றில் வேலை செய்து வாழவேண்டியவர் ஆனார், ஜெசி ஓவன்ஸ். அவருக்கு மூன்று பெண் குழந்தைகள், மனைவியின் பெயர் மின்னி ருத் சாலமன்.
அமெரிக்காவின் குடியரசுத் தலைவரான அய்சன் ஹோவர், 1955-இல் விளையாட்டுக் கான தூதுவர் எனும் சிறப்பை அளித்து, ஜெசி ஓவன்சைப் பெருமைப்படுத்தினார். அந்நிலை யில் அவர் இந்தியாவிற்கு வந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் கம்பீரமாக நின்று அவர் உரையாற்றியதை இக்கட்டு ரையாளர் கேட்டு மகிழ்ந்தார். அமெரிக்க குடியரசுத் தலைவரின் சுதந்திரப் பதக்கம் ஓவன்சுக்கு 1976-இல் அளிக்கப்பட்டது. 1980, மார்ச் 31-இல் அவர் மறைவதற்கு முன்பும் பின்பும் பல வகையில் பெருமை செய்யப் பட்டார். 1936-இல் பெர்லினில் ஒலிம்பிக் போட்டியில் அவர் சாதனை புரிந்த மைதானத் திற்கு அருகில் ஒரு தெருவுக்கு இப்பொழுது ஜெசி ஓவன்ஸ் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.