ஜூலை 2008 மலர் 5 இதழ் 8

பிள்ளைப் பாட்டு

 

நிலா

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

துருக்கச் சிறுவன்:
நிலவே நிலவே நிற்பாய் நிலவே!
மெருகு கொடுத்த வெள்ளி நிலவே!
நாங்கள் உன்னை நாயம் கேட்போம்
கூறவேண்டும் குளிர்ந்த நிலவே!
மூன்றாம் பிறையாய்த் தோன்றுங்காலை
என்கூட்டத்தார் உன்னைத் தொழுவார்
ஆதலாலே அழகு நிலவே!
துருக்கருக்குச் சொந்தப் பொருள் நீ!
கத்தோலிக்கச் சிறுவன்:
கன்னி மரியாள் உன்மேல் நிற்பாள்
ஆத லாலே அழகு நிலவே!
கத்தோ லிக்கர் சொத்து நீதான்!

இந்துச் சிறுவன்:
எங்கள் சிவனார் முடியில் இருப்பாய்
ஆத லாலே அழகு நிலவே!
இந்து மதத்தார் சொந்தப் பொருள் நீ!

மூவரும்:
மூன்று பேரும் மொழியக் கேட்டாய்
யார்க்குச் சொந்தம்? தீர்ப்புச் சொல்வாய்!

சுயமரியதைச் சிறுவன், மற்றப் பிள்ளைகளைக் குறித்து:
உன்த கப்பன் உளறு வாயன்
துருக்க னென்று சொன்னான் உன்னை.
உன்த கப்பன் உளறு வாயன்
கத்தோ லிக்கப் பட்டம் கட்டினான்.
உன்த கப்பன் உளறு வாயன்
இந்து என்றான் ஏற்றுக் கொண்டாய்!
துருக்கன் என்ற சொல்லை நீக்கு!
கத்தோலிக்கப் பித்தம் தொலைப்பாய்!
இந்து என்ற சிந்தனை வேண்டாம்!
யாவரும் மனிதர் என்பது தெரிந்தால்
நிலவும் பொதுவே என்பது தெரியும்.
அறிந்து வாழ்வீர் அன்பர் கூட்டமே.