ஜூலை 2008 மலர் 5 இதழ் 8
சுவையான நிகழ்வுகள்
‘O’ மாணவன்
- அய்க்கண்
![]() |
சென்னை மாநிலக் கல்லூரியில் முதல்வர் அறை.
முதல்வர் பக்கத்தில், பேராசிரியர் ஒருவரும் அலுவலக மேலாளரும், சிந்தனை முகத்தில் தேக்கி, யோசித்தபடி நிற்கிறார்கள்.
ஓரமாக மாணவன் அழகப்பன் நின்று கொண்டிருக்கிறான்.
அவன்தானே, அந்தக் கல்லூரியின் வரலாறு காணாத ஒரு சிக்கலுக்குக் காரண கர்த்தா?...
கல்லூரியில் ஒரு வகுப்புக்கான சேர்க்கை முடிந்ததும், மாணவர்களுக்கெல்லாம் வரிசை எண்கள் கொடுக்கப்படுவது வழக்கம்.
அவ்வழக்கப்படி அந்த வகுப்பில் மாணவர் களுக்கு வரிசை எண்கள் கொடுக்கப்பட்டு, வகுப்பு தொடங்குகிற நாளில் அழகப்பன், நல்ல மதிப்பெண்கள் பெற்ற சான்றிதழுடன் வந்தான்.
ஆண்டுத் தேர்வு முடிந்த பிறகு, மேலே படிப்பதா, வேண்டாமா? என்ற பிரச்சினையில் சிக்கித் திணறி, கடைசியில் மேற்படிப்புக்குப் போவது என்று முடிவாகி, அந்தக் கல்லூரிக்கு வந்தவன் அழகப்பன்.
உலகிலேயே பழைமையான மரம் கண்டுபிடிப்பு
உலக வன இயலாளர்கள் காட்டுப் பகுதிகளில் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆய்வுகளில் இருந்து பல தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுவரை, வடஅமெரிக்காவில் உள்ள 5 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பைன் வகை மரங்கள்தான் உலகிலேயே மிகப் பழைமையானவை எனக் கருதப்பட்டு வந்தன. ஆனால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஸ்வீடன் நாட்டு காடுகளில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான 20 மரங்களும், 9,550 ஆண்டுகள் பழைமையான ஒரு மரம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்புருஸ் என்னும் மர வகையைச் சேர்ந்த இந்த மரங்கள் தான் உலகிலேயே மிகப் பழைமையானவை என ஸ்வீடன் நாட்டின் உமேயா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அடிமரம் காய்ந்து போனாலும் அதன் விழுகளால் உருவான வேர்களால் அந்த மரம் இன்னமும் வாழ்ந்து கொண்டு இருப்பது வியப்புக்குரியது என்று அந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். |
அவனுடைய மதிப்பெண்களின் சிறப்பு மட்டுமல்ல - அவனுடைய அறிவுக்களை படர்ந்த முகமும், அருமையான ஆங்கிலப் பேச்சும், இயல்பான நுண்ணறிவும், கல்லூரி முதல்வரின் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டன.
சேர்க்கை முடிந்துவிட்டது; இனிமேல் உன்னைச் சேர்க்க முடியாது... என்று சொல்லி, அந்த அறிவார்ந்த இளைஞனை வெளியே அனுப்ப, முதல்வருக்கு மனம் வரவில்லை.
ஆனால் அவனைச் சேர்த்துக் கொண்டால், வகுப்பில் ஏற்கெனவே சேர்ந்துள்ள மாணவர் களின் வரிசை எண்களையெல்லாம் மாற்றியாக வேண்டும். ஏனென்றால் அழகப்பன் என்ற பெயர் அகர வரிசைப்படி முதலில் வர வேண்டும். அவனுடைய பெயருக்கு முதல் எண் கொடுத்த பிறகு, ஏற்கெனவே கொடுத் துள்ள முதல் எண்ணிலிருந்து கடைசி எண் வரை மாற்றியாக வேண்டும்.
இதுவரை அந்தக் கல்லூரியில் ஒரு முறை கொடுத்த வகுப்பெண்களை (Roll Numbers) மாற்றியதே இல்லை. இந்த அழகப்பனுக்காக மாற்றுவதா?...
அங்கே படிக்கின்ற மாணவர்கள் எல்லோருமே, பிரபலமான, செல்வாக்குள்ள பெரிய மனிதர் (வி.அய்.பி.) வீட்டுப் பிள்ளைகள்...
ஒரு கிராமத்து மாணவனுக்காக எங்கள் வகுப்பெண்களையெல்லாம் மாற்ற வேண்டுமா? என்று பெரிய வீட்டுப் பிள்ளை கள் முணுமுணுத்தால் என்ன செய்வது என முதல்வருக்கும் பேராசிரியருக்கும் தடு மாற்றம்...
இச்சிக்கலை எப்படித் தீர்ப்பது என்று பெரியவர்கள் எல்லோரும் தீவிரமாகச் சிந்தித்துக் குழம்பிப் போயிருக்கிறார்கள்...
அப்போது, அந்த இளைஞனே ஒரு தீர்வு சொல்கிறான்:
அய்யா!... அகர வரிசைப்படி என் பெயர் முதலில் இருக்கவேண்டும்: ஆனால், மற்றவர் களின் எண்கள் மாற்றப்படக்கூடாது - அவ்வளவுதானே? இதற்கு ஒரு வழி - என் பெயருக்கு, ஒன்றுக்கு முன்னால் உள்ள ஸீரோ (0) என்ற எண்ணை கொடுங்கள். ஸீரோ என்ற எண்ணை அழைத்தால், நான் எழுந்து பதில் கூறுவேன் என்று அழகப்பன் கூறியதும், எல்லோரும் திகைப்புடன் அவனைப் பார்க்கிறார்கள்.
கணக்குப் பாடத்தில், எண் வரிசையில் ஒன்றுக்கு முந்திய எண், பூஜ்யம் தானே?...
ஸீரோவா?... ஸீரோ என்று உன்னை அழைத்தால், உனக்கு அவமானமாக இருக் காதா? அகௌரவமாக நீ உணரமாட்டாயா? என்று பதற்றத்துடன் கேட்கிறார் முதல்வர்.
கணக்கியலில், ஒன்றுக்கு முன்னாலுள்ள எண் ஸீரோ தானே? ஸீரோ என்று அழைக் கப்படுவதில் என்ன அவமானம்?... உண் மையில், ஸீரோ என்பது, உலகக் கணிதத் துறைக்கே நம் நாடு வழங்கிய அற்புதக் கொடை அல்லவா? என்று சிரித்துக் கொண்டே இளம் வள்ளல் சொன்னதும், எல்லோரும் அவனு டைய நுண்ணறிவைக் கண்டு வியந்து நிற்கிறார்கள்...
பிற்காலத்தில், இதே அழகப்பனைப் பாராட்டி, அந்தக் கல்லூரியில் விழா நடத்திய போது, கல்லூரி முதல்வர் அன்று இந்தக் கல்லூரிக்கு ஸீரோவாக வந்த அழகப்பன், இப்போது மாணவரிடையே ஹீரோவாகத் திகழ்கிறான்... என்று சொல்லிப் பெருமைப் பட்டார்...
(காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அழகப்பா நூலிலிருந்து)

