ஜூலை 2008 மலர் 5 இதழ் 8
டாவின்சி வடிவமைத்த பாராசூட்டில் குதித்து சாதனை
புகழ் பெற்ற ஓவியர் லினோனார்டோ டாவின்சி 500 ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைத்த பாராசூட்டில் இருந்து சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பயிற்சி பெறும் ஒருவர் 650 மீட்டர் உயரத்திலிருந்து குதித்து சாதனை படைத்துள்ளார்.
![]() |
பாராசூட்டில் கீழே வந்த நான் பெய்ரீனில் உள்ள ராணுவ விமான தளத்தின் ஓடுதளத்தில் இறங்கினேன். இது ஒரு சரியான குதியல் என்று ஆலிவர் வியட்டி தெப்பா கூறுகிறார். லியோனார்டோ டாவின்சி உருவாக்கிய மாதிரி பாராசூட்டில் பத்திரமாக தரை இறங்கிய முதல் நபர் இவர்தான். 2000 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆட்ரியன் நிக்கோலஸ் என்பவர் இவ்வாறு குதிக்க முயற்சி செய்தார். ஆனால் பாதுகாப்புடன் தரை இறங்கு வதற்காக நவீன பாராசூட்டின் கயிற்றினைப் பயன் படுத்தினார் அவர். வானத்தில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு ஹெலிகாப்டரில் இருந்து வியட்டி தெப்பா இவ்வாறு பாராசூட்டில் குதித்தார். 600 மீட்டர் உயரத்தில் அந்த பாராசூட் விரிந்து கொண்டது. அந்த ஓவிய மேதை வடிவமைத்தபடியே நவீன துணிகளைப் பயன்படுத்தி அவர் இந்த பாராசூட்டைச் செய்தார்.
பிரமிட் வடிவிலான இந்த பாராசூட்டின் முதல் வடிவத்தைப் பற்றி டாவின்சி ஒரு நோட்டுப் புத்தகத்தில் 1483 ல் குறித்து வைத்தார். அதனுடன் இணைக்கப்பட்டிருந்த குறிப்பில் சொல்லப்பட்டிருப்பதாவது: 12 கெஜம் நீளத்திற்கு இரு பக்கத்திலும், 12 கெஜம் உயரத்திற்கும் பசை பூசப்பட்ட லினன் துணியை ஒருவனிடம் கொடுத்தால் எவ்வளவு உயரத்தில் இருந்து வேண்டுமானாலும் எந்த வித விபத்துமின்றி அவனால் குதிக்க முடியும். இந்த பாராசூட்டில் 7 மீட்டர் பக்கம் கொண்ட நான்கு ஒரே அளவான முக்கோண வடிவிலான துணி இருக்கும் என்று வியட்டி டெப்பா விவரித்தார். இந்த பிரமிட்டின் அடிப்பாகம் சதுர வடிவங்கொண்ட கொசு வலையே ஆகும். இதுதான் பாராசூட் விரிவதற்கு உதவுகிறது. டாவின்சி முதலில் பயன்படுத்தக் கருதிய மரச் சட்டத்தை தெப்பா தனது குதிப்பில் பயன்படுத்தவில்லை.
இதில் உள்ள ஒரே குறைபாடு என்னவென்றால், அதை திருப்பவோ, செலுத்தவோ முடியாது. காற்றின் தயவில்தான் நீங்கள் கீழே வந்து சேரவேண்டும் என்று தெப்பா கூறுகிறார். ரிமோட் கன்ட்ரோல் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய மாதிரி ஹெலிகாப்டரில் இருந்து ஒரு டம்பி பாராசூட்டைப் பயன்படுத்தி முன்னதாக சோதனைகளை தெப்பா மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
