ஆகஸ்ட் 2008 மலர் 5 இதழ் 9

2008 பெய்ஜிங் ஒலிம்பிக் - சமா. இளவரசன்

ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக சீனாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. பூகம்பம், கடல்சீற்றம் என்று பிரச்சினைகளுக்கு மத்தியிலும் உற்சாகத்தின் விளிம்பில் இருக்கிறது சீனா. பெய்ஜிங் நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. ஓர் உலகம், ஒரு கனவு என்ற வாசகத்துடன் தொடங்கியிருக்கின்றன. 29ஆவது ஒலிம்பிக் போட்டிகள். 2008ஆம் ஆண்டு 8ஆம் மாதமான ஆகஸ்டில் 8ஆம் நாளில் (08.08.08)இல் தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. அதனைத் தொடர்ந்து பாராலம்பிக்ஸ் போட்டிகளும் செப்டம்பர் 6இல் தொடங்கி 17 வரை நடைபெறுகின்றன.

2008இல் சீனாவின் பெய்ஜிங் நகரில் போட்டி நடைபெறுவது 2001ஆம் ஆண்டு மாஸ்கோவில் கூடிய பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்திலேயே முடிவு செய்யப்பட்டது. நாடுகளை விட நகரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்ந்தெடுக்கும் ஒலிம்பிக் கமிட்டியின் ஜப்பானின் ஒசாகா, துருக்கியின் இஸ்தான்புல், பிரான்சின் பாரிஸ், கனடாவின் டொரன்டோ ஆகிய நகரங்களை மிஞ்சி பெய்ஜிங் நகரைத் தேர்ந்தெடுத்தனர்.

ஏற்கெனவே, 2000ஆம் ஆண்டு ஒலிம்பிக் நடத்துவதற்கான போட்டியில் சிட்டியினிடம் 1993ஆம் ஆண்டு தோற்ற சீனா, 2008 ஒலிம்பிக்கை நடத்தக் கிடைத்த வாய்ப்பை பெரிதாகக் கொண்டாடியது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்த திட்டமிட்டு தயாராகியது பெய்ஜிங் நகரம்.

28 பிரிவுகளில் நடைபெற இருக்கும் 302 போட்டிகளில் கலந்துகொள்வதற்காக, 205 நாடுகளிலிருந்து சுமார் 10,500 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் சீனா வந்துள்ளனர். இவர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் கிராமத்தில் பலத்த பாதுகாப்புடன் அவர்கள் தங்கியுள்ளனர்.

பெய்ஜிங் நகரைத்தவிர ஹாங்காங், டியான்ஜின், ஹாங்காய், சென்யாங், கிங்டோன், கின்ஹூவாங்டோ ஆகிய நகரங்களிலும் போட்டிகள் நடைபெறுகின்றன இதற்கெனவே புதிதாக உருவாக்கப்பட்ட 12 அரங்கங்களுடன் மொத்தம் 37 விளையாட்டு அரங்கங்கள் தயாராக உள்ளன. ஆகும்பெய்ஜிங் என்று பெயரிடப்பட்டுள்ள ஒலிம்பிக் சின்னம் சீன எழுத்தான தலைநகரம் என்று பொருள்படும் ஜிங்-ன் வடிவிலும் ஒரு மனிதன் ஒடுவது போன்றும் வடிவமைக்கப் பட்டுள்ளது.

தொடக்க விழா நடைபெற இருக்கும் தேசிய மைதானம் புதிதாக ஒலிம்பிக்குக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது. 90000 மக்கள் அமர்ந்து ரசிக்கும் விதத்தில் 21 ஹெக்டேர் நிலப்பரப்பில் 333 மீட்டர் நிளம், 294 மீட்டர் அகலத்தில் சுமார் 69 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான தேசிய மைதானத்தை உலகமே வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. விரிந்து கிடக்கும் வானத்தை நோக்கி திறந்து நிற்கும் அரங்கத்தைப் பார்த்தால் இத்தனைப் பெரிய கட்டை எந்தப் பறவை கட்டியதோ என்று வியக்கும் அளவுக்கு பறவைக்காடு வடிவத்தி லேயே அரங்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது தவிர வாட்டர் கியூப் என்ற பிரம் மாண்டமான நீச்சல் போட்டிகள் நடைபெறும் அரங்கமும் நிர்மாணிக்கப் பட்டிருக்கிறது.

போக்குவரத்துக்கென சிறப்பு ஏற்பாடுகள், புதிய புதிய வழித்தடங்கள், விமான நிலையங் கள், வரவிருக்கும் உலகப் பார்வையாளர்களை வரவேற்க, ஆடம்பர ஏற்பாடுகள், இதை வாய்ப்பாக கொண்டு தனது நாட்டுப் பொருள் களை, சீனாவின் சிறப்பு விசயங்களை விற்பனைக்குக் கொண்டு வருவது என வேகத்தின் உச்சத்தில் நிற்கிறது சீனா.

நீங்கள் இந்தக் கட்டுரையை படிக்கப் போகும் நிமிடத்தில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி வேகமாக நடைபெற்றுக் கொண்டி ருக்கும். 8ஆம் எண்ணை ராசியில்லாத எண் என்று கூறி ஒதுக்கும் மூடநம்பிக்கை யாளர்களை ஒதுக்கி 08.08.08 அன்று தொடங்குகிறது ஒலிம்பிக்.

களைப்பை ஒதுக்கி, உழைப்பை முதலீடு செய்யும் சீன தேசத்தில் தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகளை நாம் கண்டு ரசிப்பதோடு, நாமும் உடல் வளத்தைப் பெருக்கி, உள்ளம் வளம் பெற விளையாடுவதை வழக்கமாகவும் விருப் பமாகவும் கொள்ள வேண்டும். அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகள் ஒன்றிலாவது பெரியார் பிஞ்சுகள் பங்கெடுக்கும் செய்தி வரவேண்டும்.

அதற்கு நாம் தயாராவோமா?