ஆகஸ்ட் 2008 மலர் 5 இதழ் 9
உருகும் பனிப்பாறைகள்
20 சதுர கி.மீ. பரப்பு கொண்ட இரண்டு பெரும் பனிப் பாறைகள் ஆர்டிக் (வடதுருவ) பனிப்படலத்தி லிருந்து உடைந்து பிரிந்து உருகின. கடந்த மூன்று ஆண்டுகளில் ஆர்டிக்கில் ஏற்பட்ட மிகப் பெரிய உடைப்பு இதுவே என்று கனடா நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எல்ஸ்மேர் தீவின் கரையிலிருந்து 2005 ஆம் ஆண்டில் அயில்ஸ் பனிப்பாறை உடைந்ததற்குப் பின் ஏற்பட்ட மிகப் பெரிய வெடிப்பு இதுவே எனக் கூறப்படுகிறது.
கனடா நாட்டைச் சேர்ந்த ஆர்ட்டிக் பகுதியில் உள்ள எல்ஸ்மேர் தீவின் வார்ட் ஹன்ட் பனிப் படலத்திலிருந்து உடைந்து பிரிந்த இந்த இரண்டு பனிப்பாறைகளும் முறையே 5 சதுர கி.மீ. மற்றும் 14 சதுர கி.மீ. பரப்பு கொண்ட இரண்டு தீவுகளாக மிதக்கின்றன. முதல் பனிப்பாறை ஜூலை 22 அன்றும் அடுத்த பனிப்பாறை ஜூலை 23 இரவிலும் உடைந்தன. செயற்கைக் கோள் புள்ளி விவரங்களிலிருந்தும் முதன் முதலாக பெருமளவு பனிப்படலம் புலம் பெயர்ந்ததைக் கொண்டும் விஞ்ஞானிகள் இச் செய்தியை உறுதிப்படுத்தினர்.