ஆகஸ்ட் 2008 மலர் 5 இதழ் 9

புகழ்பெற்ற மனிதர்கள்-2

கன்ஃபூசியஸ்: உலகு புகழ் சீனர் - கு.வெ.கி.ஆசான்

 

சீனாவின் பழங்காலத்தைப் பற்றி இரண்டு செய்திகள் எளிதில் நினைவுக்கு வரும். ஒன்று அந்நாட்டின் வடக்கில் உள்ள உலக அதிசயமான நெடுஞ்சுவர். இரண்டாவது, அந்நாட்டில் வாழ்ந்த உலகப் புகழ்பெற்ற கன்ஃபூசியஸ். அவர் - வாழ்வுக்கு வழிகாட்டி, மெய்ஞானி.

இளம் வயதில்

இப்பொழுது சீனாவின் வடகிழக்கு மாநிலமாக இருப்பது ஷாண்டுங். அதன் ஒரு பகுதி லூ என்பது. அங்கு கி.மு. 551-இல் பிறந்து, 72 ஆண்டுகள் வாழ்ந்து, 479-இல் மறைந்தவர், கன்ஃபூசியஸ். லூ எனும் சிற்றரசில் அவருடைய தந்தை அலுவலராக இருந்தார். மகனுக்கு மூன்று வயதான பொழுது அவர் இறந்துவிட்டார். ஆகையால் கன்ஃ பூசியசும், அவருடைய தாயும் எளியவர்கள் ஆயினர். இந்தச் சிறுவன் தன்னையே சார்ந்து வாழ்வதற்குக் கற்றுக் கொண்டான். இளம் வயதிலேயே பணியில் அமர்ந்தான். முதலில், பொருள்களை வைத்திருக்கும் பண்டகத்தின் காப்பாளராகவும், பின்பு பூங்காக்கள், மற்றும் கால்நடைகளை மேற்பார்வை செய்கிறவராகவும் வேலை செய்தார். 19-ஆம் வயதில் திருமணம் செய்து கொண்டார்.

அலுவல் பணியும் கல்விப் பணியும்:

கன்ஃபூசியஸ் காலத்தில் பல சிறிய அரசுகள் சீனாவில் இருந்தன; அவற்றிற்கு இடையில் அடிக்கடி மோதல் நடந்தது; குழப்பம் நிலவியது; மக்கள் துன்பப்பட்டனர். இவற்றைக் கண்ட அவர் ஒரு கல்விக் கூடத்தை நிறுவினார்; கட்டுப்பாட்டையும், தலைமைப் பண்பு களையும் கற்பித்தார். அப்பொழுது அவருக்கு வயது 22 மட்டுமே. செல்வர்களிடம் அதிகமாகக் கட்டணம் பெற்றார்; ஏழைகளுக்கு இலவச மாகக் கற்றுத் தந்தார். கல்விப் பணியோடு அரசுப் பணியையும் தொடர்ந்தார். நேர்மையாக இருந்தார். தீமைகளைக் களைவதற்கான சீர்திருத்தங்கள் செய்தார்.

வாழ்வில் ஒரு மாற்றம்

லூ அரசில் திடீரென்று கிளர்ச்சி ஏற்பட்டது. புதியவர்கள் ஆட்சிக்கு வந்தனர். கிளர்ச்சி செய்தவர்களின் ஆட்சியில் வேலையில் இருப்பதற்குக் கன்ஃபூசியஸ் விரும்பவில்லை. பதவி இழந்த அரசனுடன் அருகில் இருந்த இட்சி எனும் நாட்டிற்குச் சென்றார். ஆனால், அந்த அரசன் நீதியும் நேர்மையும் இல்லாதவன். ஆகையால் தன்னுடைய சொந்த நாடான லூ திரும்பினார். அடுத்த 15 ஆண்டுகள் தனியாகத் தொழில் செய்தார். அறிவும் ஒழுக்கமும், பல சீடர்களை அவருக்குத் தேடித் தந்தன. லூ நாட்டின் புதிய அரசன் 52-ஆம் வயதில் அவரைத் தலைமை நீதிபதியாக்கினான்; பின்பு தலைமை அமைச்சர் ஆக்கினான்.

சீர்திருத்தங்கள்:

ஆட்சிப் பொறுப்பில் இருந்த கன்ஃபூசியஸ் நல்ல சீர்திருத்தங்கள் செய்தார்: பண்டங் களுக்குக் குறிப்பிட்ட விலையை முடிவு செய்தார். ஆகையால் வணிகர்கள் மக்களிடம் அதிக விலையில் விற்க முடியவில்லை. அறிவுக்கும் வலிமைக்கும் தகுந்தபடி அனை வருக்கும் வேலை கொடுத்தார். வெவ்வேறு வேலை செய்வோருக்குத் தகுந்த உணவை அறிவித்தார். பிரபுக்கள், மக்களை ஒடுக்கு வதைத் தடுத்தார்; அனைவருக்கும் சமநீதி வழங்கினார். நாட்டிற்கு இவற்றால் நன்மைகள் ஏற்பட்டன; ஆனால் செல்வாக்குள்ள சுயநலமி கள் இவருக்கு எதிராகத் திரண்டனர். ஆகை யால் நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு தலைமை அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

மீண்டும் நாட்டைவிட்டு வெளியேறி சீனாவின் வடகிழக்குப் பகுதியில் பல இடங் களுக்குச் சென்றார். அவருடன் சீடர்களும் சென்றனர். நல்ல நிருவாகி என்றும் நன் னெறியாளர் என்றும் இவர் புகழ் பரவி இருந்தது. மக்கள் வரவேற்றனர். ஆனால், இவர் சொல்வது போல் ஆள்வதற்கு எந்த அரசனும் முன்வரவில்லை. எங்கும் அடக்கி ஆண்டார் கள்; குடிகள் அவதிப்பட்டார்கள். இதை விளக்குவதற்கு ஒரு செய்தியைச் சொல்வது வழக்கம்.

கன்ஃபூசியஸ் தம் சீடர்களுடன் ஒரு காட்டின் வழியே சென்று கொண்டிருந்தார். இறந்தவர் உடலைப் புதைத்துவிட்டு, அங்கு ஒரு பெண் ஓலமிட்டு அழுதுகொண்டிருந் தாள். ஆறுதல் கூறியும் அழுகை நிற்கவில்லை. ஏன் என்று கேட்டனர். இந்தக் காட்டில் உள்ள புலி, முதலில் என் தந்தையைக் கொன்றது. அடுத்து என் கணவரைக் கொன்றது. இப்பொழுது என் அண்ணனையும் கொன்று விட்டது. இவ்வளவு ஆபத்தான காட்டில் ஏன் வாழவேண்டும் எனக் கேட்டபொழுது, கொடிய ஆட்சியில் வாழ்விதைவிட புலியிடம் சாவது மேல், என அந்தப் பெண் அவலத்துடன் கூறினார். இதைப் படிக்கும் பொழுது, அதி வீரராமபாண்டியன் பாடிய வெற்றி வேற்கை நினைவிற்கு வருகிறது:

கொடுங்கோல் மன்னர் ஆளும் நாட்டில்

கடும்புலி வாழும் காடு நன்றே

என்பது அதில் வரும் ஒரு செய்யுள். (நாட்டில்=நாட்டைவிட)

புத்தரைப் போன்றே, கடவுளைப் பற்றியும் மறு உலகைப் பற்றியும், கன்ஃபூசியஸ் பேச மறுத்தார். சமுதாயத்தில் ஒருவர் பிறருக்குச் செய்ய வேண்டிய கடமையை வலியுறுத் தினார். பிறர் உனக்கு எதைச் செய்ய வேண்டு மென விரும்புகிறாயோ, அதை நீ பிறருக்குச் செய், என்பது பொதுவான, பொன் போன்ற, அற நெறி. அதையே இவர் எதிர்மறைச் சொற்களில் கூறினார்: பிறர் உனக்கு எதைச் செய்ய வேண்டாம் என நினைக்கிறாயோ, அதைப் பிறருக்குச் செய்யாதே.

பல இடங்களில் 13 ஆண்டுகள் அலைந்த பின், 69-ஆம் வயதில் மீண்டும் சொந்த நாடான லூ திரும்பினார்; 72ஆம் வயதில் மறைந்தார். ஆனால், அவருடைய போதனைகள் மறைய வில்லை; சீனா மட்டுமன்றி உலகம் எல்லாம் அவை மதிக்கப்படுகின்றன.