ஆகஸ்ட் 2008 மலர் 5 இதழ் 9
உலகின் முதல் இணையதளம் Info.cern.cn - பிஞ்சண்ணா
வணக்கம் பிஞ்சுகளே! பெரியார் பிஞ்சுக்கென தனி இணைய தளம் தொடங்கப் பட்டிருக்கும் செய்தி அறிந்திருப்பீர்களே! இதுவரை விடுதலை இணையதளத்தின் அங்கமாக விளங்கி வந்த பெரியார் பிஞ்சு இனிமேல் இன்னும் சில கூடுதல் வசதிகளுடன் periyarpinju.com என்னும் பெயரில் செயல் படப்போகிறது. இந்த நேரத்தில் நாமும் ஒரு வரலாற்று முக்கியத்துவமும் அறிவியல் சிறப்பும் வாய்ந்த செய்தியைத் தெரிந்து கொள்வோமா?
இன்று இணையத்தின் வளர்ச்சி எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்குச் சென்றுவிட்டது. வண்ணமயமான வடிவமைப்பு என்பதோடு மட்டுமல்லாமல் வரைகலை தொழில்நுட் பத்தில் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை இன்று இணையத்தில் நாம் பார்க்கி றோம். இணையத்திலேயே விளையாடுவது, உரையாடுவது, ஒளிப்படம் அனுப்புவது - பெறுவது, வீடியோ காட்சிகள் பார்ப்பது. நேருக்கு நேர் பார்த்து உரையாடுவது என்று வளர்ந்து இன்று தொலைக்காட்சிகளைப் போலவே நேரடி ஒளிபரப்பு செய்யும் அளவுக்கு இணையத்தின் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது.
ஆரம்ப காலங்களில் செய்திகளை எழுத்து வடிவில் பகிர்ந்து கொள்வதற்குத் தான் இணையம் பயன்படுத்தப்பட்டது. 1950களின் மத்தியிலேயே உலகின் வெவ்வேறு மூலை களில் இருக்கும் கணினிகளை இணைக்கும் இணையம் (Internet) என்ற இந்தத் தொழில் நுட்பம் வந்துவிட்டது.
ஆனால், அது இராணுவச் செயல்பாட்டுக் காகவும், பின்னர் அறிவியல் ஆய்வுகளுக் காகவும் பயன்படுத்தப்பட்டது. அது மக்கள் பயன்பாட்டுக்கும், வணிகப் பயன்பாட்டுக்கும் வர சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேல் தேவைப் பட்டது. இணையதள வசதியை அனைவரும் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் அனைவரும் படிக்கத்தக்க முதல் இணைய தளம் (Website) உருவானது. அது ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும்.
1990ஆம் ஆண்டு உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகும். ஹப்பிள் தொலைநோக்கி அதன் சுற்றுப்பாதையில் விண் வெளியில் நிறுவப்பட்டது; நெல்சன் மண் டேலா 27 ஆண்டுகள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டது; ஜெர்மனியை இரண்டாகப் பிரித்த பெர்லின் சுவர் இடிக்கப் பட்டு ஒன்றானது என்று 1990இல் நடந்த வரலாற்று நிகழ்வுகளின் வரிசையில் வைத்துப் போற்றத்தக்கது தான் முதல் இணையதள உருவாக்கம். அணு ஆய்விற்கான அய்ரோப்பிய அமைப் பான செர்ன் (cern) ஆய்வகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார் டின் பெர்னர்ஸ் லீ. இயற்பியல் ஆய்வாளரான இவர் தகவல் பரிமாற்றத்துக்காக ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினியைத் தொடர்பு கொள்ளப் பயன்படும் வழிமுறை பற்றி ஆய்வு செய்ய 1989ஆம் ஆண்டு மார்ச் மாதம் செர்ன் இடம் ஆர்வம் தெரிவித்தார். அவ்வமைப்பும் ஒப்புதல் வழங்கியது. அதைத் தொடர்ந்து அவரது ஆய்வில் ராபர்ட் கய்லியா (Robert Cailliau) என்ற கணினிப் பொறியாளரும் இணைந்து கொண்டார்.
செர்ன் ஆய்வகத்தில் உள்ள அனைத்துக் கணினிகளையும் இணைப்பதற்கு ஹைபர் டெக்ஸ்ட் எனப்படும் இத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த இவ்வாய்வு தொடங்கியது. வலைப் பக்கங்களுக்கு இணைப்பு வழங்கி எளிதில் அனைத்துக் கணினிகளும் படிக்கத் தக்க வாய்ப்பைத் தரும் இவ்வாய்வு செர்ன்-இல் இருந்த நெக்ஸ்ட் கணினிகள் மூலம் செய்யப் பட்டு வந்தது.
ஆய்வாளர்கள், வல்லுநர்கள் மட்டுமல்லா மல் அனைவரும் பயன்படுத்தவும், உருவாக் கவும் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்புள்ள பொதுவான ஹைபர் டெக்ஸ்டையும், வலை உலாவி மற்றும் வலைப்பக்க உருவாக்கி யையும் தயாரித்தார். 1990ஆம் ஆண்டு மே மாதத்தில் இப்பணிகள் முடிந்து அதற்கென ஒரு பெயர் சூட்ட வேண்டிய நிலை வந்தது. அதுதான் வையக விரிவு வலை என்று இன்று உலகம் முழுக்க ஒருங்கிணைக்கும் சொல்லான www - world wide web என்று பெயரிடப் பெற்றது.
அப்படி உருவான உலகின் முதல் இணையத்தளத்தின் முகவரி என்ன தெரியுமா?
info.cern.ch
முதல் வலைப்பக்கத்தின் முகவரி
http://info.cern.ch/hypertext/www/theproject.html
இந்த முகவரியில் ஒரு வலைப்பக்கத்தை உருவாக்குவதற்கான தொழில்நுட்பத் தகவல் களும், இணையத்தைப் பயன்படுத்துவது குறித்த குறிப்புகளும் இடம் பெற்றிருந்தன. புகைப்படங்களோ, எந்த நவீன வடிவமைப்பு களோ இல்லாத அப்போது வெளிவந்த வலைப்பக்கம் எப்படியிருந்தது என்பதை நாம் இன்று பார்க்க முடியாவிட்டாலும், நாள்தோறும் அது அடைந்து வந்த வளர்ச்சியில் 1992ஆம் ஆண்டு கணினித் திரையில் அந்த முதல் பக்கம் தோன்றியது என்றறிய உதவும் படம் உள்ளது. அதே வேளையில், முதல் இணையப் பக்கத்தில் இடம் பெற்ற தகவல்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன.
அதன்பின் மெல்ல மெல்ல மற்ற நிறுவனங் களிலும் இணையம் தொடங்கப்பட்டு அடுத்த இரண்டாண்டுகளில் அதாவது 1992 நவம்பர் மாதத்தில் உலகில் 26 வலைதள வழங்கிகள் (Web Server) இருந்தன. அடுத்த ஆண்டில் அக்டோபர் மாதத்தில் அதுவே 200-ஆக உயர்ந்தது.
இன்று கணினியை வைத்திருப்போரில் 99 விழுக்காடு பேர் இணைய இணைப்பு வைத் திருக்கிறார்கள். அறிவியல் செய்திகள் தொடங்கி, அடுப்படிச் செய்திகள் வரை இணையத்தில் வருகிறது. இணையத்தில் கிடைக்காதது என்று எதுவும் இருக்க முடியாது என்னும் அளவிற்கு பெரு வளர்ச்சி பெற்று வையக விரிவு வலை உலகம் முழுக்க விரிந்து கிடக்கிறது. இந்த மாபெரும் பாய்ச்சலுக்குக் காரணமாக டிம் பெர்னீரஸ்லீ, டபிள்யூ 3 கன்சார்டியம் அமைப்பின் இயக்குநராக இருக்கிறார்.
இணைய உருவாக்க ஆய்விற்கு பயன் படுத்தி நெக்ஸ்ட் கணினி காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது. அதன் ஒளிப்படத் தையும், அதன் பெருமையையும், இன்று நாம் அதே இணையத்தில் வழியாக அறிந்து கொள்வதை அறியுமா அந்தக் கணினி! என்னே அறிவியல் அதிசயம்!!