ஆகஸ்ட் 2008 மலர் 5 இதழ் 9
மனித இன வரலாறு-42
இடைக்கால அய்ரோப்பாவில் வாணிபம் - மு.நீ.சிவராசன்
கி.பி. 1300ஆம் ஆண்டுகளில் அய்ரோப்பாவில் மக்கள் கொள்ளை நோயாலும், பஞ்சத்தாலும் இறந்துபட்டனர்.
அக்காலத்தில் அய்ரோப்பாவில் காடுகள் அழிக்கப்பட்டு விளை நிலங்கள் உண்டாக்கப்பட்டன. சில இடங்களில் அந்நியப் படையெடுப்பிலிருந்து தங்களை காத்துக்கொள்ள கோட்டைகள் கட்டப்பட்டன. கிருத்தவத் தேவாலயங்களும் கட்டப்பட்டன.
உணவுப் பெருக்கம் அதிகமாகியது. கி.பி.1000இல் 40 மில்லியனாக இருந்த மக்கள் தொகை கி.பி.1300இல் 80 மில்லியனாகப் பெருகியது.
செல்வப் பெருக்கம் நில உடமையாளர்களுக்கே போய் சேர்ந்தது. விவசாயத் தொழிலாளியின் வாழ்க்கையில் மாறுதல் ஏதும் ஏற்படவில்லை. அவர்கள் காய்ந்த ரொட்டியையும், புல்லரிக் கூழையும் குடித்து நோய் நொடியோடு அவல வாழ்க்கை வாழ்ந்தனர் - பிரபுக்கள் மீனும், ஊனும் உண்டு சுகத்தில் திளைத்தனர்.
வாணிபம்
அய்ரோப்பாவில் கி.பி. 1000-லிருந்து கி.பி.1300 வரையிலான கிடைக்காலத்தில் வாணிபம் செழித்து வளர்ந்தது.
குறிப்பாக ஜெர்மனியில் பல்வேறு நகரங்கள் தங்களிடையே ஓர் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு வாணிபம் செய்தன. இவ்விளைவு ஆன்சீட்டிக் லீக் (Hanseatic Leage) என்று அழைக்கப்பட்டது. வடக்கு அய்ரோப்பாவில் இது கம்பளி, மீன் மற்றும் மர வாணிபத்தில் ஈடுபட்டது.
மத்திய தரைக்கடலுக்குத் தெற்கே வெனிஸ், ஜெனோவா ஆகிய இத்தாலிய நகரங்கள் ஆசியாவுடனும், வடக்கு ஆப்பிரிக்காவிலும் வாணிபம் செய்தன.
விலையுயர்ந்த பட்டாடைகள், உணவு நறுமணப் பொருள்கள், சர்க்கரை ஆகியவை ஆல்ப்ஸ் மலை கணவாய்களின் வழியே வடக்கு அய்ரோப்பாவிற்குக் கொண்டு செல்லப்பட்டு விற்கப்பட்டன.
தெற்குப் பகுதிக்கு கம்பளி, இரும்பு ஆகியவை கொண்டு செல்லப்பட்டு விற்கப்பட்டன.