செப்டம்பர் 2008 மலர் 5 இதழ் 09

அண்ணா நூற்றாண்டு - புத்தகப் பிரியர் அண்ணா - பிஞ்சு மாமா

 

இனிய பிஞ்சுகளே . . . கடமை, கண்ணியம், கட்டுப்பாடு

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு

யார், எங்கிருந்தாலும் வாழ்க!

கத்தியைத் தீட்டாதே தம்பி, புத்தியைத் தீட்டு

போன்ற வைர வரிகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லது படித்திருப்பீர்கள் அல்லது யாராவது சொல்லக் கேட்டிருப்பீர்கள். இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் அறிஞர் அண்ணா அவர்கள் என்பது தெரியுமா உங்களுக்கு?

என்பது உங்களுக்குத் தெரியுமா?. . . என்றுதான் எல்லோரும் எழுதுவார்கள். ஆனால், என்பது தெரியுமா உங்களுக்கு? என்று புதுநடையால் எழுதியவர் அண்ணா அவர்கள். தமிழ் எழுத்துலகில் புதுநடை; மேடைச் சொற்பொழிவில் புதுமுறை; சிறுகதைகள் எழுதுவதில் புதிய கருத்துகள்; கட்டுரைகள் தீட்டும்போது புதிய செய்திகள்; தம்பிக்கு மடல் தீட்டும்போது உலக வரலாற்றையே கண்முன் கொண்டுவந்து பாடம் நடத்தும் பாங்கு; பகுத்தறிவுச் சிந்தனையை எடுத்துக் காட்டும் போது எள்ளல்-நகைச்சுவை என்று தமிழ் நாட்டில் புதியன பல புகுத்தியவர் அறிஞர் அண்ணா.

நான் ஒரே, ஒரு தலைவரைத்தான் கண் டேன்; அவரைத்தான் என் தலைவராகக் கொண் டேன். அவர்தாம் பெரியார்; அவரைவிட்டு அகத்தால். ஒருபோதும் பிரிந்தது கிடையாது என்று உவகையுடன் அறிவித்தார் அண்ணா. 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் காஞ்சிபுரத்தில் எளிய நெசவாளர் குடும்பத்தில் அண்ணா பிறந்தார். இவரது தந்தையார் பெயர் நடராஜன். தாயார் பெயர் பங்காரு அம்மாள். வளர்ப்புத் தாயார் பெயர் இராசாமணி அம்மையார் (தொத்தா)

இளம் வயதிலேயே கல்வி கற்பதில் ஆர்வம் மிகக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் சிறிய பிள்ளைகளுக்கும், நீண்ட முடி வளர்த்து கொண்டை போட்டு விடுவதுதான் பழக்கம். ஆனால், அண்ணாவுக்கோ கிராப் வைத்துக் கொள்ள ஆசை. அவர் எப்படி கிராப்புக்கு மாறினார் என்று அவரே கூறுகிறார் கேளுங்கள். சிறுவயதில் எனக்கு நீண்ட முடி வளர்த்துப் பின்னலிட்டு, காதில் கடுக்கன் போட்டுத்தான் பள்ளிக்கு அனுப்புவார்கள். எனக்கு கிராப்பு வைத்துக் கொள்ள ஆசை. இதை தொத்தா விடம் (வளர்ப்புத் தாய் இராசாமணி அம்மை யார்) கேட்க பயம். ஒரு முறை ஆங்கிலத்தில் 100க்கு 90 மார்க் வாங்கிருந்தேன். அதைக் கொண்டு போய் தொத்தாவிடம் காண்பித்து என் கிளாசில் எல்லோரும் கிராப்பு வைத்திருக் கிறார்கள். நானும் வைத்துக்கொள்கிறேன் தொத்தா என்று கேட்டேன், சம்மதித்தார்கள் என்று தான் கிராப்புக்கு மாறிய கதையை அண்ணா கூறியுள்ளார்.

சிறுவயதில் அண்ணாவுக்கு கல்வி மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது. காஞ்சிபுரத்தில் பச்சையப் பன் உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி வரை பயின்று முடித்து, பின்னர் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் இன்டர் மீடியட் கல்வியும், பி.ஏ., (ஆனர்சு) கல்வியும் கற்றுத்தேர்ந்தார். தமிழில் மட்டுமல்லாமல், ஆங்கிலத்திலும் நல்ல புலமை பெற்றார்.

பள்ளிக்கல்வி என்பது அடிப்படை அறிவைத் தருவது. உலகக் கல்வி கற்க வேண்டுமானால், நூலகம் சென்று படித்தறிய வேண்டும் என்பது அண்ணாவின் வாழ்வில் இருந்து நாம் கற்க வேண்டியது. சென்னை கன்னிமாரா நூலகத்தில் ஆயிரக்கணக்கான நூல்களைக் கற்றுத் தம் அறிவை வளர்த்துக் கொண்டவர் அண்ணா. தாம் கற்றதை, தமக்கு மட்டும் பயன்படுத்தாது, அது மக்களுக்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தில், தாம் எழுதிய பல்வேறு கட்டுரைகளில் உலக வரலாற்று நிகழ்வுகளை எழுதி எல்லோரையும் படிக்க வைத்தார்.

கன்னிமாரா நூலகத்தில் நேரம் போவதே தெரியாமல் அண்ணா அவர்கள் நூல்களைப் படித்துக்கொண்டே இருப்பாராம். நூலகர் வந்து, நூலக நேரம் முடிந்துவிட்டது என்று சொல்லும் வரையில் படித்துக்கொண்டு இருப்பாராம்.

இந்த நூல்களைப் படிக்கும் பழக்கம் அவரது வாழ்நாள் முழுவதும் நீடித்தது. அவரது இறுதிவரை தொடர்ந்தது. அமெரிக்காவில் அண்ணாவுக்கு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. டாக்டர் மில்லர் என்னும் மருத்துவர் அறுவை சிகிச்சைக்கான நாளைக் குறித்துவிட்டு அண்ணாவுக்குத் தகவல் தந்தார். தகவலைக்கேட்ட அண்ணா, இரண்டு நாள்கள் தள்ளிப் போடச் சொல்லலாமா என்று கேட்டார். ஏன் தள்ளிப்போடச் சொல்கிறீர்கள்? என்று அண்ணாவிடம் கேட்டபோது, ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதைப் படித்து முடித்த பின்பு அறுவை சிகிச் சையை வைத்துக் கொள்ளலாமே என்று கூறினாராம்.

இப்படி வாழ்நாள் முழுதும் ஒரு மாணவனாக படித்துக்கொண்டே இருந்தவர்தான் அண்ணா அவர்கள். இத்தகைய பெருமையும், சிறப்பும் பெற்ற அண்ணா அவர்களுக்கு இந்த செப்டம்பர் 15இல் நூற்றாண்டு விழா எடுக்கப்படுகிறது. (15.9.2008 - 15.9.2009)

நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியவர்; சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்டவடிவம் கொடுத்தவர்; தமிழ்-ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை நடை முறைப்படுத்தியவர் என்ற முப்பெரும் பெரு மைகளைத் தந்தவர் அறிஞர் அண்ணா.

சென்னை கடற்கரையில் உள்ள அண்ணா அவர்களின் நினைவிடத்தில் எதையும் தாங்கும், இதயம் இங்கே உறங்குகிறது என்று எழுதப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று கூறிய அண்ணா அவர்கள், எதையும் தாங்கும், இதயம் வேண்டும் என்பதனை நான் கற்றுணரும் வாய்ப்பும் தந்தார் என்று பெரியாரைப் பற்றிக் கூறுகிறார்.

பிஞ்சுகளே . . . அண்ணா அவர்களை வழிகாட்டியாகக் கொண்டு, நூலகம் சென்று புத்தகங்களைத் தேடிப் படிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். மறவாதீர்கள் . . . புத்தகங்கள் நம் இறுதிவரை வரும் நண்பர்கள்.