செப்டம்பர் 2008 மலர் 5 இதழ் 09

நாத்திக இராமன் கதைகள் - இதுவல்ல தாமரை

 

நாத்திக இராமன் தன் இரு மகன்களையும் அழைத்துக்கொண்டு மலையடிவாரத்திலுள்ள ஒரு கிராமத்திற்கு தனது உறவினர்களோடு சுற்றுலா சென்றிருந்தான். அப்போது மூத்த மகனுக்கு பத்து வயதும், இளையவனுக்கு எட்டு வயதும் இருக்கும்.

மூத்தவன் அழுதுகொண்டே வந்தான். இளையவனாகிய தம்பி தன்னை அடித்து விட்டான் என்று அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளும் மூத்தவனோடு வந்திருந்தார்கள். இராமன் அவனை எதற்காக தம்பி அடித்தான் என்று கேட்டான். அதற்கு மூத்தவன் சொன்னான், அப்பா, அந்தக் குளத்துல நிறைய தாமரைப்பூ பூத்திருக்கு. அதைப் பார்த்து இது என்ன பூ? என்ற தம்பி கேட்டான். நான் இதுதான் தாமரைப்பூ என்று சொன்னேன். ஆனால், தம்பி இல்லை நீ பொய் சொல்கிறாய் இது தாமரைப்பூ இல்லை என்று சொன்னான். அதைக்கேட்டு என்னுடன் வந்த பையன்கள் எல்லாம் சிரித்தார்கள். அதனால் என்னை அடித்துவிட்டு அவனும் அழுது கொண்டு நிற்கிறான் என்று சொன்னான்.

நாத்திக இராமன் என்னவென்று விசாரிக் கலாம் என்று குளக்கரைக்கே சென்றான், மூத்த மகனை அழைத்துக்கொண்டு. மற்ற குழந்தை களும் அவர்களுடன் சென்றனர்.

அங்கே நாத்திக இராமனின் சிறிய மகனும் அழுதுகொண்டு நின்றான். அவனிடம் சென்று ஏன் அழுகிறாய் என்று கேட்டான் நாத்திக இராமன். அதற்கு அவன், அப்பா இந்தக் குளத்தில் இருக்கிற பூவ பார்த்து அண்ணன் தாமரைப்பூ என்று என்னிடம் பொய் சொல் கிறான். நான் இந்தப் பூ தாமரை இல்லை என்று சொன்னால் கேட்காமல், இந்தப் பசங்களோட சேர்ந்து என்னை கேலி செய்கிறான் என்று சொல்லிக் கொண்டே அழுதான்.

இராமனுக்கும் ஒன்றும் விளங்கவில்லை, என்றாலும் ஏன் அவன் அவ்வாறு பேசுகிறான் என்று தெரிந்து கொள்வதற்காக பொறுமையாக அவனிடம் கேட்டான், சரி, இந்த பூ தாமரைப்பூ இல்லை என்று நீ ஏன் சொல்கிறாய் என்று கேட்டான்.

நான் எத்தனை படத்துல பாத்திருக்கேன். தாமரைப்பூன்னா, அது லட்சுமி, சரசுவதி எல்லாரும் உட்காருர மாதிரி பெரிசால்ல இருக்கும் என்று சொன்னான் அப்பாவியாக.

அதைக்கேட்டு எல்லோரும் சிரித்தார்கள், நாத்திக இராமனும் சிரித்துக்கொண்டே சித்திரக்காரர்களின் பொய்யான கற்பனைச் சித்திரம் பற்றி தன் மகனுக்கு விளங்க வைத்தான்.

- ச. கந்தசாமி ,
அருப்புக்கோட்டை.