செப்டம்பர் 2008 மலர் 5 இதழ் 09

மனித இன வரலாறு-43 -
கிறித்தவ வழிபாட்டுத் தலம் - மு.நீ.சிவராசன்

 

அய்ரோப்பாவில் இடைக் காலத்தில் கிறித்தவ வழிபாட்டுத்தலம் மிக வலிமை வாய்ந்த அமைப்பாக விளங்கியது. கிறித்தவ நெறி, செல்வந்தனானாலும், விவசாயியானாலும் ஒவ்வொருவரின் தினசரி வாழ்க்கை முறையாக இருந்தது.

கிறித்தவக் கோயிலின் தோற்றம். ஆங்கிலத்தில் இவைகள் கதீட்ரல்கள் (cathedrals) என்று அழைக்கப்பட்டன. கதீட்ரா எனில் தலைமைப் பாதிரியின் இருக்கை என்று பொருள். கிறித்தவக் கோயில்களில் தலைமைப் பாதிரியின் இருக்கை (throne) இருக்கும்.

பல ஆண்களும், பெண்களும் கிறித்தவப் பாதிரிகளாயினர். அவர்கள் துறவி மடங் களிலும், கன்னியா மடங்களிலும் வாழ்ந்தனர். அவர்கள் ஏழைகளுக்கும், நோயுற்றோருக்கும் உதவி புரிந்து தொண்டாற்றினர். அவர்கள் தங்களின் பெரும்பாலான நேரத்தைப் படிப் பிலும், வழிபாட்டிலும் கழித்தனர். பைபிளை படியெடுத்து அவற்றை படங் களால் அழகு படுத்தினர். எனவே, கிறித்தவ மடாலயங்கள் சிறந்த கல்விக் கூடங்களாகத் திகழ்ந்தன.

கிறித்தவத் துறவிகளில் பல்வேறு அமைப்பு கள் இருந்தன. நர்சியா (Nursia) வைச் சேர்ந்த பெனிடிக்ட் என்ற கிறித்தவத் துறவி பெனிடிக்டைன் என்ற அமைப்பை கி.பி.500 இல் உருவாக்கினார். அவர் கிறித்தவ துறவிகளுக்கான வாழ்க்கை நெறிமுறைகளை உண்டாக்கினர். அய்ரோப்பாவின் இடைக் காலத்தில்தான் ஆயிரக்கணக்கான கிறித்தவக் கோயில்களும், மடாலா யங்களும் கட்டப்பட்டன. சில கிறித்தவக் கோயில்கள் கட்டி முடிக்க பல ஆண்டுகள் ஆகின. சில மிகப்பெரியதாகக் கட்டப்பட்டன. எடுத்துக்காட்டாக ஃபிரான்சில் உள்ள கிளனி (cluny) என்ற கிறித்தவக் கோயில் அனைத்து வசதிகளும் நிறைந்த ஒரு நகரமாக விளங்கியது.