செப்டம்பர் 2008 மலர் 5 இதழ் 09

அச்சம் என்பது....!

 

சிறுவன் நெப்போலியனுக்கு எட்டு வயதிருக்கும். ஒரு நாள் நடு இரவில் அவனைப் படுக்கையில் காணவில்லை. அவன் தாய் தவித்துப் போனாள். சுற்றுப் புறங்களில் தேடிப் பார்த்தும் நெப்போலியனைக் காணவில்லை. எட்டு வயதுச் சிறுவன் நள்ளிரவு நேரத்தில் எங்கே போவான்...?

அந்தத் தாயின் நிலைகண்டு அக்கம் பக்கத்தில் எல்லோரும் அவனைத் தேடினார்கள். கடைசியாக அந்தப் பக்கம் இருந்த காட்டை நோக்கிச் சென்றனர். தாய் முன்னே ஓடினாள். இறுதியில் நெப்போலியனை ஒரு குளத்தின் கரையில் கண்டாள். அங்கே அமர்ந்து குளத்தில் மீன்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அன்னை ஓடிச் சென்று அள்ளி அணைத்துக் கொண்டாள்.

மகனே, இந்த நள்ளிரவில் இந்தக் காட்டில் குளக் கரையில் தனியாக அமர்ந்திருக்கிறாயே, உனக்கு அச்சமாக இல்லையா? என்று கேட்டாள்.

சிறுவன் நெப்போலியன் தாயை வியப்புடன் பார்த்து, அச்சமா? அப்படி என்றால் என்ன அம்மா? என்று கேட்டான்.

அவனது அன்னை பெருமையால் பூரித்துப் போனாள். அச்சம் என்பது என்னவென்றே தெரியாத மகனா....?

அவள் அவனுக்கு அச்சத்தைப் பற்றி அதிகமாக அலட்டிக் கொண்டு விளக்கம் கொடுக்கவில்லை! சமாளித்தவாறு அவள் சொன்னாள்; என்னவோ கேட்க எண்ணினேன்... சொல் தடுமாறிவிட்டது... வேறொன்றுமில்லை... வா வீட்டுக்குப் போவோம்!

அவள் அறிவுள்ள அன்னை. பூதத்தையும், அஞ்சு கண்ணனையும், பேயையும் பற்றியெல்லாம் கதை கூறி பிஞ்சு உள்ளங்களை எதற்கெடுத்தாலும் அஞ்சி நடுங்க வைக்கும் பெற்றோர்களுக்கு இந்த நிகழ்ச்சி நினைவில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! இல்லையா?

சிறுவயதில் போர் நிகழ்ச்சிகளைக் கேட்பதில் அவனுக்கு ஆர்வம் அதிகம். போர்கள் பற்றிய வரலாறுகளையும், வீரர்களுடைய தீரச் செயல்கள்பற்றியும் தன் தாயிடம் கேட்டுக் கொண்டே இருப்பான்.

அவன் எதையாவது படித்துக் கொண்டும் சிந்தித்தவாறும் இருப்பான். துணிவும், தன்னம்பிக்கையும் தான் அவன் மனதில் மண்டிக் கிடந்தன.

அவன் வீரர்கள் பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடுவான்; அவன் விளையாட பொம்மைத் துப்பாக்கிகளும், பீரங்கிகளும் துணையானது. மரக்கட்டையைத் துப்பாக்கி போலத் தோளில் சாய்த்துக் கொண்டு, பூட்ஸ் டக் டக் கென்று ஒலி செய்ய அவன் ஒரு போர் வீரன் போல நடந்து செல்வதைக் கண்டு அவன் தாய் மகிழ்ச்சியால் பூரித்துப் போவாள்.

அவனை வரலாற்று நூல்கள் பிற்காலத்தில் புகழ்ந்து கூற இச்செயல்களே காரணம் அல்லவா?

ஒரு முறை வகுப்பில்...

வேறொரு சிறுவன் செய்த குற்றம் நெப்போலியன் மீது சுமத்தப்பட்டது. குற்றம் செய்தவன் யார்? என்று நெப்போலியனுக்கு தெரிந்திருந்தும் அவனைக் காட்டிக் கொடுக் காமல் தண்டனையைத் தானே ஏற்றுக் கொண்டான்.

உண்மை தெரிந்த அவன் நண்பன் நெப்போலியனிடம் குற்றம் செய்யாத நீ ஏன் தண்டனையை ஏற்றுக் கொண்டாய் என்று கேட்டான்.

குற்றத்தை நான் செய்யாவிட்டாலும் தண்டனையை ஏற்றுக் கொண்டேன். ஏன் தெரியுமா? அப்படி நான் ஏற்றுக் கொள்ளா விட்டால் நெப்போலியன் தண்டனைக்கு அஞ்சிவிட்டான் என்று சொல்வார்கள். இந்த நெப்போலியன் அச்சம் கொள்வதா..? என்று கொஞ்சமும் வருந்தாமல் கூறினான்.