கல்லறையில் கல்வி - பிஞ்சு மாமா

இனிய பிஞ்சுகளே. . .

"வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது சொல்லிவைப்பாங்க
உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக்கூட நம்பிவிடாதே - நீ
வீட்டுக்குள்ள பயந்து/கிடந்து வெம்பி விடாதே"

-என்ற பாடல் ஒன்றைக் கேட்டிருக் கிறீர்களா?

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் இது.

சிறு குழந்தைகளை அச்சமூட்டும் செயலைக் கண்டிக்கும் அப்பாடல், மூட நம்பிக்கையை முறியடிக்கும் பாடலாகும். தற்போது பெரும்பாலும் நகரமயமாகிவிட்ட நம்முடைய வாழ்க்கை முறையில் அக்காலம் போல வீட்டில் உள்ளவர்கள் பேய்.....பிசாசு என்று இப்போதெல்லாம் அச்சமூட்டு வதில்லை. வெகுவாகக் குறைந்துவிட்டது. ஆனால், இந்த பேய்.... பிசாசு.... பூதம் போன்ற கற்பனைகள் இப்போது வேறு வடிவத்தில் வந்துள்ளன. அதாவது நமது வீட்டிற்குள்ளேயே சின்னத்திரையில் ஒளி பரப்பாகும் தொடர்களால் நுழைந்துவிட்டன.

கிராபிக்ஸ் எனும் அரிய அறிவியல் விளைவின் வழியே மூடநம்பிக்கையை விதைத்து, காசுபண்ணும் வணிகர்கள் இருக் கிறார்கள். எனவே, இப்போதும் அந்தப்பாடல் தேவைப்படுகிறது.

மனித உடலை இயக்கும் முக்கிய காரணிகளில் முதன்மையானது மூச்சுக்காற்று. உடல் என்னும் பொறியில் காற்று உள்ளே சென்று, பின் வெளியே வரும்வரை உயிர் உடலில் உள்ளது. மூச்சுவிடும் சக்தியை உடல் இழந்துவிட்டால் உயிர் போய் விடுகிறது.

மனித உடலுக்கும், உயிருக்கும் உள்ள தொடர்பு இந்தக் காற்றுதான். உடலைவிட்டு உயிர்க்காற்று போனவுடன், உடல் சவமாகி விடுகிறது அவ்வளவுதான். அதற்குமேல் அதில் எதுவும் இல்லை.

உடலில் சத்துப்போய் விடுவதைத்தான் செத்துப்போய் விடுவது என்கிறார்கள் என்று சொன்னார் பெரியார் தாத்தா.

மதவாதிகள் எப்படித் தங்களது வணிகத் திற்கு, கடவுளை உருவாக்கிக் கொண்டார் களோ, அதேபோலத்தான் இந்த பேய், பூதம், பிசாசு போன்ற கற்பனைகளையும் உருவாக் கினார்கள். ஆகவே பிஞ்சுகளே, இந்த அறிவியல் உண்மைகளை அறிந்து கொண் டால் அச்சப்படவேண்டிய அவசியமில்லை.

அண்மையில் கூந கூஅநள டிக ஐனேயை இதழில் ஒரு செய்தி படித்தேன். புதுச்சேரியில் உள்ள இடுகாடு ஒன்றில் இரண்டு குடும்பங்கள் வாழுகின்றன.

அங்குள்ள கல்லறைகளின் மேலே அமர்ந்து 5ஆம் வகுப்பு படிக்கும் சர்மிளா, அவளது தங்கைகள் சாரதா, காயத்ரி தம்பிகள் வேலன், வேல்முருகன் ஆகியோர் தினந் தோறும் படிக்கின்றனர்.

எளிய குடும்பத்தைச் சேர்ந்த இந்தப் பிஞ்சுகள் ஆவிகள் அலைவதாகவும், பேய்கள் நடமாடுவதாகவும் மத வணிகர்களால், மூடநம்பிக்கையாளர்களால் சொல்லப்படும் இடுகாட்டில் வாழ்கிறார்கள்.

இவர்களை அந்தப் பேய்கள் எதுவும் செய்யவில்லையே ஏன்?

ஏன் தெரியுமா?

பேய்கள் என எதுவும் இல்லை. இருந்தால் தானே இடையூறுசெய்ய! அங்கேயே வசிக்கும் அந்தப் பிஞ்சுகளின் பெற்றோருக்கு அது தெரிந்ததால், அந்த இடத்தையே தங்களது வாழுமிடங்களாகக் கொண்டு வாழ்கின்றனர்.

பேய் என்று அஞ்சுவது மன அச்சமே அன்றி, அறியாமையே அன்றி வேறல்ல என்பது இதிலிருந்து தெரிகிறதல்லவா?

எனவே, சின்னத்திரை தொடர்களிலோ, திரைப்படங்களிலோ பேய் என்று காட்டப் படுபவையெல்லாம் உண்மையல்ல; அவை பொய் என்பதை உணர்வதோடு, விறு விறுப்புக்காகவும், ரசிக்கவும், சமயங்களில் சிரிக்கவும் அமைக்கப்படும் காட்சிகள் என் பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

Archives

?பெரியார் பிஞ்சு

2008