நாட்டுப்புறக் கதை
சகுனமும் நம்பிக்கைகளும்
- கி.ராஜநாராயணன்
ராஜா ஒருத்தனுக்கு சகுனங்களிலும் நம்பிக்கைகளிலும் பற்று அதிகமாக இருந்தது. காலையில் எழுந்திருந்ததும் யாருடைய முகத்தில் விழிக்கிறோமோ அவர்களைப் பொறுத்தே அந்த நாள் அமையும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தான். நல்லவர்கள் முகத்தில் விழித்தால் அன்று பூராவும் நல்லதே நடக்கும்; கெட்டவனுடைய முகத்தில் விழித் தால் அன்று பூராவும் கெட்டதுதான் நடக்கும் என்று நினைத்திருந்தான்.
படுக்கையைவிட்டு எழுந்ததும் ராஜா முதல் காரியமாக தனது படுக்கை அறைக்குப் பக்கத்தி லிருக்கும் சாளரத்தைத் திறந்து வீதியில் எட்டிப் பார்ப்பான். ராஜவீதியில் போகிறவர்களின் யார் பேரிலாவது அவன் பார்வை விழும். அதே போல, காலையில் எழுந்ததும் ராஜதரிசனம் நன்மை தரும் என்றும் ஜனங்கள் நம்பினார்கள்.
ஒருநாள் காலையில் அந்த ராஜாவுக்கு படுக்கையில் முழிப்புத் தட்டியதும் எழுந்திருக்க மனசில்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். என்ன காரணமோ அன்றைக்கு அவன் மனசு சரியில்லை. சிடுசிடு என்றிருந்தது.
படுக்கையை விட்டு எழுந்ததும் பழக்கத் தின் காரணமாக சாளரத்தைத் திறந்து தலையை நீட்டி எட்டிப் பார்த்தான். அன்று பார்த்து யாரும் தட்டுப்படவில்லை. ஒரே அழுக்கும் கந்தலும் உடுத்திய ஒரு தொழு நோய் பிச்சைக்காரன் மட்டும் தென்பட்டான். சை! என்ன இழவு இன்றைக்கு இவனைப் பார்த்துத் தொலைத்தோமே என்று நினைத்த போது அவனும் தற்செயலாக ராஜாவைப் பார்த்து விட்டான்.
ராஜாவுக்கு அவனைப் பார்த்ததுகூட பெரி சில்லை. அவன் தன்னைப் பார்த்து விட்டானே அதுதான் எரிச்சலாக வந்தது! அந்த எரிச்சலில் தலையை வேகமாக உள்ளுக்கு இழுத்தான். சாளரத்தின் நிலையில் தலை பலமாக இடித்து விட்டது!
செ; எழுந்திருந்ததும் இவன் முகத்தில் விழித்ததுக்குத் தலைமேல் பலன் கிடைத்து விட்டது. நாள் பூராவும் எப்படி இருக்குமோ. இன்று இவன் முகத்தில் விழித்த அத்தனை பேருக்கும் துன்பம்தான். இப்பேர்ப்பட்ட கொடி யவனை ஏன் வைத்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்து சேவகர்களை அழைத்து அதோ போகிறானே அவனைப் பிடித்து கொலைக்களத்துக்கு இழுத்துக் கொண்டு போய்க் கொன்று விடுங்கள் என்று உத்தரவு போட்டு விட்டான்.
அந்த அழுக்கும் கந்தலையும் உடுத்திக் கொண்டிருந்த தொழுநோய்ப் பிச்சைக் காரனைப் பிடித்து, ராஜாவின் உத்தரவை நிறைவேற்றக் கொலைக்களத்துக்குக் கொண்டு போனார்கள்.
அங்கே அவன்மீது ராஜா பிறப்பித்த குற்றப் பத்திரிகையையும் தண்டனையையும் அவனுக்கு படித்துக்காட்டி கடைசியாக நீ விரும்புவதென்ன? என்று கேட்டார்கள். சாகப் போகிறவனுடைய எந்தக் கடைசி கோரிக் கையையும் ராஜாங்கம் அனுதாபத்தோடு பரிசீ லிருக்கும் வழக்கம் உண்டு.
அவன் வேறு ஒன்றும் சொல்லாமல், நான் சாவதற்கு முன்பாக மகாராஜாவை ஒருதரம் பார்த்து ஒரு வார்த்தை பேசணும்! என்று மட்டும் சொன்னான்.
இந்த விருப்பத்தை அவர்கள் ராஜாவிடம் போய்த் தெரிவித்தார்கள். ராஜாவும் இணங் கினார். பாவம் அவன்; சாகப்போகும்போது ஏற்படும் நியாயமான ஆசையை நிறைவேற்ற வேண்டியது ஒரு ராஜாவின் கடமை என்று நினைத்து அவனைப் பார்க்கப் புறப்பட்டு வந்தார்.
ராஜா வந்து, உனக்கு என்ன வேணும்? என்று அன்போடு கேட்டார். அவனுடைய கைகளைப் பின்கட்டாகக் கட்டியிருந்தார்கள், ஓட முடியாமல் கால்களும் கட்டப்பட்டிருந்தன.
ராஜாவை அவன் தலையாலேயே வணங்கி, அவருக்கு வாழ்த்துக் கூறி முடித்துவிட்டுச் சொன்னான்.
காலையில் எழுந்ததும் நாம் யார் முகத்தில் விழிக்கிறோமோ அன்றையத் தினம் அதைப் போலவே அமையும் என்ற நம்பிக்கையு டையவன் தான் நானும். இன்று எழுந் திருந்ததும் நான் மகாராஜாவின் முகத்தில்தான் விழித்தேன்.
இந்த ஏழைத் தொழுநோய்ப் பிச்சைக் காரனின் முகத்தில் விழித்த மகாராஜாவுக்குத் தலையில் சாளரத்தின் நிலை இடித்துவிட்டது. ராஜாவின் முகத்தில் விழித்த எனக்கோ தலைக்கே ஆபத்து வந்துவிட்டது!
மோசமானவர்கள் முகத்தில் விழித்தால் மோசமானது நடக்கும் என்ற படிக்கு இப்போது நம்மில் அதிக மோசமானவர் யார் என்று எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. அதை மகாராஜாவிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற் காகவே மகாராஜாவைப் பார்க்க விருப்பம் தெரிவித்தேன் என்று சொன்னான்.
ராஜா யோசித்தான். அவன் சொல்வதிலுள்ள உண்மை பளிச்சென்று மனதில் தைத்தது. எழுந்ததும் அவன் அதிகாலையில் பார்த்த ராஜ தரிசனம் அவனுக்கு நன்மையாகவே முடியட்டும் என்று நினைத்து உடனே அந்த இடத்திலேயே அவனுக்கு விதித்துள்ள மரண தண்டனையை ரத்து செய்ததோடு அவனுக்கு வேண்டிய பரிசுகளையும் கொடுத்தனுப் பினானாம் அந்த ராஜா.
("தாத்தா சொன்ன கதைகள்" நூலிலிருந்து)
நன்றி : அன்னம் வெளியீடு
|