புகழ்பெற்ற மனிதர்கள் - 4
சர் ஃபிரான்சிஸ் பேகன்
- கு.வெ.கி.ஆசான்
இங்கிலாந்து நாட்டின் நவீன அறிவியல் வளர்ச்சிக்கு அடித்தளம் போட்டவர்களில் இவருக்கு பேகன் (Bacon) என்ற பொதுப் பெயர் உண்டு. ஒருவர் ரோஜர் பேகன் (1214-1294). இவர் மத போதகராகவும் மடாலயத்தில் வாழ்ந்தவராகவும் இருந்தார். இருப்பினும், ஆராய்ச்சி செய்வதிலும், புதியன கண்டு பிடிப்பதிலும் கருத்தைச் செலுத்தினார்.
தந்தையும் தாயும்
மற்றொருவரான, ஃபிரான்சிஸ் பேகன், 1561 ஜனவரி 22இல் லண்டனில் பிறந்து, அறுபத்து அய்ந்து ஆண்டுகள் செல்வாக்குடன் வாழ்ந்து, 1626 ஏப்ரல் 9இல் மறைந்தார். இவருடைய தந்தை, அரசு முத்திரையைக் காத்து, அதைப் பயன்படுத்தும் பிரபுவாக, உயர்ந்த பதவியில் இருந்தார். இவருடைய தாயும் மிகவும் கற்றவர்; கிறித்துவ மதத்தின் தீவிரச் சீர்திருத்தப் பிரிவான பியூரிடன் எனும் பிரிவை அந்த அம்மையார் சார்ந்திருந்தார். இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற அரசியான முதலாவது எலிசபத் (1558-1603) காலத்தில், ஃபிரான்சிஸ் பேகன் வாழ்ந்தார். ஷேக்ஸ்பியர், மற்றும் ஸ்பென்சர் ஆகிய சிறந்த இலக்கியவாதிகள் அதே காலத்தைச் சேர்ந்தவர்கள்.
கல்வியும் பணியும்:
சர் நிகலஸ் பேகனின் அய்ந்து மகன்களில் கடைசி மகனாகப் பிறந்த ஃபிரான்சிஸ் பேகன், தமது தொடக்கக் கல்வியை வீட்டிலேயே தனி ஆசிரியர் ஒருவர் மூலம் பெற்றார். அவருடைய 13ஆம் வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில், டிரினிடி கல்லூரியில் பயின்றார். அங்கு மூன்றாண்டுகள் பயின்ற பின்பு, சட்டம் பயிலச் சென்றார். ஆனால், தமது மகன் அரசியலில் நுழையவேண்டுமெனத் தந்தை விரும்பினார். ஆகையால், பிரான்சு நாட்டில் இங்கிலாந்தின் தூதுவராகப் பணியாற்றிய வருக்குத் துணையாக அனுப்பினார். பிரான்சில் மட்டுமன்றி, வெளிநாட்டு அரசியல் தொடர் பாக, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளிலும் பேகன் பயணித்தார். ஆனால், அவருடைய தந்தை திடீரென மறைந்ததால், 1579இல், ஃபிரான்சிஸ் லண்டன் திரும்பினார். மீண்டும் சட்டப்படிப்பைத் தொடர்ந்தார். 1582இல் வழக்குரைஞரானார். தமது 23ஆம் வயதில், 1584இல் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக் கப்பட்டு, 1617 வரை அப்பணிக்கு வெவ்வேறு காலங்களில் அனுப்பப்பெற்றார். பின்பு அவரு டைய தந்தையார் ஏற்றிருந்த, அரசு முத்திரையைப் பாதுகாத்துப் பயன்படுத்தும் (Lord Keeper) பணியை ஏற்றார்.
முதலாவது எலிசபத் அரசிக்குப் பின்பு, முதலாம் ஜேம்ஸ் இங்கிலாந்தின் அரசரானார் (1603). அதே ஆண்டு ஃபிரான்சிஸ் பேகன், சர் பட்டம் பெற்றார். 1607இல் சொலி சிடர் ஆகவும், 1613இல் அடர்னி ஜெனரல் ஆகவும், உயர் சட்ட அலுவலர் பொறுப்புகளைப் பெற்றார். 1618இல் லார்டு சான்ஸ்சலர் என்ற மிக உயர்ந்த பதவியை அரசர் ஜேம்ஸ் இவருக்கு அளித்தார்.
தண்டனை பெற்றார் 1621இல், பேகன் மீது லஞ்சப் புகார் எழுந்தது. அதாவது, நீதி மன்றங்களில் வழக்குகளை நிலுவையில் வைத்திருந்த வர்கள் இவருக்குப் பரிசுகள் வழங்கினர் என்றும், அவற்றை இவர் வாங்கிக் கொண்டார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டார். அக்காலத்தில் பரிசுகளைப் பெறுவது சாதாரணமான ஒரு பழக்கம். தாம் பரிசுகளைப் பெற்றாலும், வழக்குகளில் நடுநிலை தவறியதில்லை என, பேகன் வாதாடினார். இருப்பினும், அவர் தண்டனைக்கு உள்ளானார்; தண்டத்தொகை (fine) அவர் மீது விதிக்கப்பெற்றது. லண்டன் டவர் என்ற இடத்தில் சிறை வைக்கப் பெற்றர். சில நாள்களுக்குப் பின்பு விடுவிக்கப்பெற்றார்; அவர் மீதிருந்த தண்டத் தொகையையும் அரசர் நீக்கிவிட்டார்.
ஃபிரான்சிஸ் பேகன் தம் 45ஆம் வயதில் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவருடைய பிற்காலத்தில் மணவாழ்வு மகிழ்ச்சியாக இல்லை. அளவுக்கு மீறிய செலவும் கடன்தொல்லையும் அதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
லத்தீன், ஆங்கிலம்
தமது வாழ்வின் இறுதி அய்ந்தாண்டுக் காலத்தை, மெய்யறிவு சார்ந்த எழுத்திலும், அறிவியல் பரிசோதனைகளைச் செய்வதிலும் பேகன் கழித்தார். கட்டுரைகள் (Essays), கற்பதில் முன்னேற்றம் (The Advancement of Learning), ஏழாவது ஹென்றியின் வரலாறு (The History of Henry VII) புதிய அட்லாண்டிஸ் (The New Atlantis) ஆகியன அவர் எழுதிய ஆங்கில நூல்கள். இவையன்றி லத்தீன் மொழியில் நிறைய எழுதினார். அவற்றில் முக்கியமானது, நோவம் ஆர்கனம் (Novum Organum) என்பதாகும். இதில் வேடிக்கை என்னவென்றால், தாம் லத்தீன் மொழியில் எழுதியவை மட்டுமே நீடித்திருக்கும், அப்பொழுதுதான் வளர்ந்து வந்த ஆங்கிலத்தில் எழுதியவை விரைவில் மறையும் என அவர் எண்ணினார். ஆனால், இப்பொழுது அவருடைய செறிவான ஆங்கில எழுத்துக்கள் தான் புகழ்ந்து படிக்கப் பெறுகின்றன; லத்தீன் மொழியில் எழுதியவற்றை மிகச் சில ஆய்வு மாணவர்களே படிக்கிறார்கள்!
அறிவியல் சோதனை தந்த சாவு
1626 ஏப்ரல் தொடக்கத்தில், லண்டனுக்கு அருகில் இருந்த ஹைகேட் எனும் இடத்தை நோக்கி, கோச் வண்டியில் பேகன் சென்றார். உறை பனி, சாலையை மூடியிருந்தது. பரிசோதனை செய்யும் ஆர்வத்தில் அவருக்கு ஒன்று தோன்றியது; மூடிய வண்டியில் இருந்து இறங்கினார். ஏழை ஒருவரின் வீட்டிற்குச் சென்றார். அங்கிருந்த ஓர் அம்மையாரிடம் கோழி ஒன்றை வாங்கினார். அதை உரிப்பதற்கு அந்த அம்மையாருக்கு உடனிருந்து உதவினார். அதனுள் உறை பனியைத் திணித்தார். பனிக்கட்டியைக் கொண்டு இறைச்சியை நெடுநாள் கெடாமல் வைக்கலாம் எனப் பரிசோதனை மூலம் காட்டுவதற்கு அவ்வாறு செய்தார். அதைச் செய்த காரணத்தால், ஏற்கனவே சிறிது காய்ச்சலாக இருந்தவருக்கு, மார்புச் சளி வந்து மூச்சுத் திணறி இறந்தார்!
அறிவியல் நெறி
கோட்பாட்டை (theory) வகுத்துக் கொண்டு, அதை நியாயப்படுத்த, மெய்ம் மங்களை (facts) தேடக்கூடாது; உற்று நோக்கியும், பரிசோதனைகள் செய்தும் மெய்ம்மங்களைக் கண்டு, அவற்றின் அடிப்படையில் கோட்பாட்டை வகுக்க வேண்டும் என்பது நவீன அறிவியல். அதற்கு வழிவகுத்தவர்களில் ஒருவர் ஃபிரான்சிஸ் பேகன்.
சில நூல்களைச் சுவைக்கலாம், மற்ற வற்றை அப்படியே விழுங்கலாம், ஆனால் மிகச் சிலவற்றை நன்கு மென்று தின்று செரிக்க வேண்டும் - Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested என்ற அவருடைய வரிகள் அனைவரும் போற்றக்கூடியவை அல்லவா!
|