புகழ்பெற்ற மனிதர்கள் - 3

பலதுறை வல்லுநர் லியோநார்டோ டாவின்சி

- கு.வெ.கி.ஆசான்

இதாலி நாட்டை உள்ளடக்கிய ரோம் பேரரசு பழங்காலத்தில் பரந்து விரிந்திருந்தது. பேரரசு வீழ்ந்த பின்பு, இதாலி பல சிறிய அரசுகளாக, அதாவது நகர அரசுகளாகப் பிளவுபட்2டது. 19ஆம் நூற்றாண்டில் இதாலி ஒன்றுபடும் வரை இந்நிலை நீடித்தது. ஃபிளாரன்ஸ், மிலான், ரோம், நேபிள்ஸ், வெனீஸ் என்பவை அந்நகர நாடுகளில் முக்கியமானவை.

மறுமலர்ச்சியாளர் பிறந்த ஊர்

அய்ரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சியும், மதச் சீர்திருத்தமும் தற்கால வரலாற்றின் தொடக்கத்தைக் குறிக்கின்றன. மேலே குறிப்பிட்ட நகர நாடுகளை ஆட்சி செய்தவர் கள் கலைகளையும், இலக்கியத்தையும், புதிய கல்வியையும் ஆதரித்து, மறு மலர்ச்சிக்கு வித்திட்டார்கள். மறுமலர்ச்சி தோற்றுவித்த கலைஞர்களில் பலதுறை அறிஞராகவும் வல்லுநராகவும் விளங்கியவர், லியோ நார்டோ டாவின்சி. லியோநார்டோ என்பது அவருடைய பெயர். வின்சி, அவர் பிறந்த சிறிய நகரம்; புகழ்பெற்ற ஃபிளாரன்ஸ் நகரத்திற்கு அருகில் இருக்கிறது.

ஓவியம் கற்றார்

லியோநார்டோ 1452இல் பிறந்தார். அவருடைய தந்தை, சட்ட அறிவு சார்ந்த ஆவணங்களைத் தயாரிப்பவர். சிறுவனாக இருந்த லியோநார்டோவுக்கு இசையும் ஓவியமும் பொழுது போக்குகள். ஒருநாள் மகனின் ஓவியங்களைத் தன் நண்பருக்குக் காட்டினார் தந்தை. அந்த நண்பர் ஓர் ஓவியர்; சிறுவனின் திறமையைக் கண்டார்; தன்னு டைய மாணவனாக அமர்த்திக் கொண்டார். விரைவில் ஆசிரியர் தெரிந்திருந்த அனைத் தையும் கற்று, அவரையும் விஞ்சி நின்றார், லியோ. தம் இருபதாம் வயதிலேயே சிறந்த ஓவியர் எனப் புகழ் பெற்றார்.

புதிய புனைவுகள்

ஓவியத்துடன் சிற்பத்திலும் பயிற்சி பெற்று வல்லுநர் ஆனார். அவற்றுடன் நிற்காமல், புதியவற்றை உருவாக்குவதிலும், புனைவ திலும் ஆர்வம் செலுத்தினார். வெவ்வேறு வகையான எந்திரங்கள், பாலங்கள், கால்வாய் கள், துப்பாக்கிகள், பிற போர்க் கருவிகள், வானவூர்திகள், ஹெலிகாப்டர், பாராசூட், தானியங்கி, மிதிவண்டி ஆகியவற்றிற்கான திட்டங்களை மனதிலே வைத்திருந்தார்; பிற்காலத்தில் அவற்றிற்கான படங்களைத் தமது குறிப்பு ஏட்டில் வரைந்து வைத்தார். பொறியாளருக்கு உரிய அறிவை வளர்த்துக் கொண்ட இவர், சுகாதார வசதியுடன் நகரங் களை மாற்றியமைப்பதற்கு உரிய திட்டங் களைத் தீட்டினார். ஓவியர், சிற்பி, பொறி யாளர் எனும் தகுதிகளுடன் விஞ் ஞானி, மெய்ஞ்ஞானி, பாடகர், கவிஞர் எனவும் பெயர் பெற்றார்.

அரிய சாதனைகளில் நாட்டம்

ஃபிளாரன்ஸ் நகரை அழகுபடுத்திய ஆட்சியாளர், லொரன்ஜோ டி மெடிசி என்பவர். அவரிடம் ஒன்றிரண்டு ஆண்டுகள் பணியில் இருந்தார், லியோனார்டோ. பின்பு தம்முடைய முப்பதாவது வயதில் மிலான் சிற்றரசரிடம் பணியேற்றார். பணியேற்கு முன் தம்மால் எவற்றைச் செய்ய முடியும் எனப் பட்டியலிட்டு ஒரு மடலை அந்த ஆட்சி யாளருக்கு அனுப்பினார். அதில் பின்வரும் விவரங்களைத் தந்தார்:

- கனமில்லாத வலிமையான பாலங்களை என்னால் கட்டமுடியும்; அவற்றை ஓர் இடத் தில் இருந்து மற்ற இடத்திற்குக் கொண்டு செல்ல முடியும்; எதிரிகளை விரட்டித் தோற்கடிக்க அவை பயன்படும். கனமான, தீயாலும் தாக்குதலாலும் பாதிக்கப்படாத, பிற பாலங்களையும் கட்டுவேன்.

- பாறைகள் மீது கட்டப்பட்டுள்ள கோட்டைகளைக்கூட அழிக்கும் வழிவகை களை அறிவேன்.

- கனமற்ற, எளிதாக நகர்த்தக்கூடிய பீரங்கிகளைச் செய்வேன். அவற்றிலிருந்து சிறு கற்களையும் புகையையும் திடீரென வெளியேற்றிப் பகைவர்கள் மத்தியில் பீதியைக் கிளப்பலாம்.

- அகழிகள், மற்றும் ஆற்றுக்கு அடியில்கூட இரகசியமான, பாதாளப் பாதையைப் போட முடியும்.

- கவச வண்டிகளைச் செய்ய முடியும். எதிரிகள் மத்தியில் சென்று தாக்கும் பொழுது, அவர்கள் அதை அழிக்க முடியாது.

மேலே குறிப்பிட்டவைகள் நடைமுறை யில் முடியுமா என்ற அய்யம் எழுகிறதா? அப்படியானால் அவற்றைப் பொது இடத்தில் செய்து காட்டுவதாக மடலில் குறிப்பிட்டார்.

குதிரை வீரரின் சிலை

தன்னுடைய முன்னோர் ஒருவர் குதிரை யின் மீது அமர்ந்து செல்வதுபோல் ஒரு சிலை யைச் செய்யுமாறு, மிலான் சிற்றரசர் முதலில் லியோனார்டோவைக் கேட்டுக் கொண்டார். அதைச் செய்வதற்காக மனிதன், மற்றும் குதிரையின் உடல் அமைப்பை ஆய்ந்து கற்றார்; வரை படங்கள் தயாரித்தார்; பல சோதனைகளுக்குப் பின்பு பத்தாண்டு கழித்து, காரையால் (சாந்தினால்) செய்யப் பட்ட சிலையின் மாதிரியை 1493இல் வெளிக் காட்சிக்கு வைத்தார். இருபத்தி ஆறு அடி உயரம் கொண்ட பெரிய அளவில் அது இருந்தது. அக்காலத்தில் அதை வியந்து பார்த்து எழுதியவர்களின் பதிவுகள் இருக் கின்றன. ஆனால் அதை வெண்கலச் சிலை யாக வடிப்பதற்கு முன்பு, எதிரிகளின் படை யெடுப்பால் அழிக்கப்பட்டது.

சீடர்களுடன் யேசு கிறிஸ்து உணவு உண்ட காட்சி

அவருடைய புகழ்வாய்ந்த ஓவியம், இறுதி இரவு உணவு என்பதாகும். அதை 1494இல் தொடங்கி நான்கு ஆண்டுகள் சுவரின் மீது வரைந்தார். அது வரையப்பட்ட சுவர் இன்று சீர்கெட்டுவிட்டது; அந்நிலையிலும் ஓவியம் உலகப் புகழ்பெற்றதாக இருக்கிறது.

மிலான் நகரில் இருந்த அரண்மனையை அலங்கரித்தார்; நாடு முழுவதும் இருந்த கால்வாய்களை முன்னேற்றினார். 1499இல் அந்நாட்டின் மீது படையெடுக்கப்பட்ட பொழுது, அதைவிட்டு நீங்கினார்.

பெருமாட்டி லிசா

மிலானை விட்டு நீங்கி வெனீஸ் சென்ற லியோநார்டோ அங்கு ஓராண்டுக் கணக்கை ஆய்ந்து கற்றார். பின்பு மத்திய இதாலியில் ஓர் அரசில் பணியேற்றார். நீர்ப்பாசனம், துறை முகம் ஆகியவற்றிற்குத் திட்டமிட்டுச் செயல் படுத்தினார். அப்பகுதி முழுவதும் பயணம் செய்து, அதன் வரைபடத்தைத் தயாரித்தார்.

மொனாலிசா எனும் அழியாப் புகழ்வாய்ந்த ஓவியத்தை 1504இல் வியோனார்டோ வரைந் தார். அது அவருடைய நண்பரின் மனைவி யின் ஓவியமாகும். ஃபிரான்சு நாட்டு மன்னர் முதலாம் ஃபிரான்சிஸ் அதை விலைக்கு வாங்கினார். இப்பொழுது அந்த ஓவியம் பாரிசில் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

லியோனார்டோ டாவின்சி தமது இறுதி மூன்று ஆண்டுகளை ஃபிரான்சு மன்னரின் பணியில் கழித்தார். அந்நாட்டின் இரண்டு முக்கிய நதிகளான லாயிர் மற்றும் சயோன் என்பவற்றை இணைக்கத் திட்டம் அளித்தார். 1519இல் புகழ் உடம்பு எய்தினார்.

Archives

?பெரியார் பிஞ்சு

2008