நாத்திக இராமன் கதைகள்
- சிதம்பரமா? மதுரையா?
நாத்திக இராமன் தன் நண்பர்களோடு ஒரு மரத்தடியில் அமர்ந்து ஓய்வாக பேசிக் கொண்டிருந்தான். அப்போது புதிதாக திருமணமாகி வெளியூரிலிருந்து வந்திருந்த ஒரு நண்பனும் அவர்களுடன் பேசுவதற்காக வந்தமர்ந்தான்.
புதிய நண்பனை பார்த்து சுப்பையா என்பவன் நலம் விசாரித்துவிட்டு, உங்க வீட்டில் சிதம்பரமா? மதுரையா? என்று கேட்டுவிட்டு அவனிடமிருந்து பதிலை எதிர்பார்த்து அதையொட்டி அவனை வம்புக்கு இழுக்கலாம் என்ற காத்திருந்தான்.
ஆனால் அந்த இளைஞனோ எதுவும் புரியாதது போல விழித்தான். அருகிலிருந்த மற்றொருவன் சுப்பையன் கேட்ட கேள்வியை விளங்கவைப்பது போல் தம்பி உன் வீட்டில் மதுரையா? சிதம்பரமா? என்ற கேட்பதன் பொருள் என்னவென்றால், வீட்டிற்குள் உனக்கு செல்வாக்கு அதிகமா? அல்லது உனது மனைவிக்கு செல்வாக்கு அதிகமா? என்பதை அறியத்தான் என்றான்.
உன் மனைவி உனது சொல்லுக்கு கட்டுப்பட்டு நடந்தால் சிதம்பரம், நீ உன் மனைவியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடந்தால் அது மதுரை என்று கூறினான்.
கேள்வியைப் புரிந்துகொண்ட இளைஞன் உடனே பதில் சொல்ல முடியாமல் திகைத்து நின்றான். ஏனென்றால் எதைச் சொன்னாலும் கூட்டத்தினர் அதற்கொரு காரணம் காட்டி இவனைக் கேலி செய்வார்கள். அப்போது சுப்பையன், தம்பி இன்னும் பயணத்தில்தான் இருக்காரு. போய்ச் சேர்ந்த பின்னர்தான் சிதம்பரமா? மதுரையா? என்று தெரியும் என்று சொல்லிச் சிரித்தான்.
அதோடு விடாமல் அருகிலிருந்த நாத்திக இராமனைப் பார்த்து, என்ன இராமா உங்க வீட்டில் எப்படி சிதம்பரமா இல்லை மதுரையா? என்று கேட்டு மிகப்பெரிய நகைச்சுவையாக நினைத்துச் சிரித்தான்.
நாத்திக இராமன் தயங்காமல், சிதம்பரமும் இல்லை, மதுரையும் இல்லை என் வீடு ஈரோடு என்று பதிலளித்தான்.
இப்போது சுப்பையன் உள்பட யாரும் எதுவும் புரியாமல் விழித்தார்கள், சிரித்துக் கொண்டே இராமன் சொன்னான், ஆணோ பெண்ணோ, யாருக்கும் யாரும் அடிமை யில்லை, இருவருமே ஒருவருக்கு ஒருவர் சரிசமம்தான்.
இந்த கருத்தை புராண புளுகுகளுக்கு மாற்றாக தமிழ் மண்ணில் நிலை நிறுத்திய தந்தை பெரியார் பிறந்த ஊரான ஈரோட்டு ஆட்சிதான் - இன்றல்ல என்றும் எனது வீட்டில் நடக்கும் என்று,
இந்தப் புதுமையான பதிலைக் கேட்டு எல்லோரும் சிரித்ததுடன் உண்மையை சிந்திக்கவும் செய்தார்கள்.
- ச.கந்தசாமி, அருப்புக்கோட்டை
|