மனித இன வரலாறு-50 - ரஷ்யா
- மு.நீ.சிவராசன்
ரஷ்ய வரலாறு 9ஆம் நூற்றாண்டில் துவங்குகிறது. கி.பி. 860இல் வைகிங் (Viking) மக்கள் நாவ்கொராடு (Novgorod) என்ற நகரத்திற்கு அங்கு வாழ்ந்த ஸ்லாவ் (Slav) என்ற மக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்த அழைத்து வரப்பட்டனர். நாளடைவில் அவர்கள் நாவ்கொராடு மற்றும் கீயெவ் (Kiev) நகரங்களுக்கு இடையே வாழத்தொடங்கினர். அவர்கள் வரஞ்சியன் ருஸ் (Vangian Rus) என்று அழைக்கப் பட்டமையால் அவர்கள் வாழுமிடம் ரஷ்யர்கள் நாடு என்று அழைக்கப்பட்டது.
இந்தப் பகுதியின் முதல் அரசர் விளாடிமர் என்பவர். (கி.பி. 980-1015) இவரும் இவர்தம் குடிமக்களும் கி.பி.988இல் கிருத்துவ மதத் தைத் தழுவினர். அதுமுதல் கிழக்குக் கிரேக்கத் திருச்சபை ரஷ்யாவின் அதிகாரம் பெற்ற திருச்சபையாயிற்று.
நாடோடி இனத்தவர் பலர் கிழக்குகிலிருந்து வந்து கீயெவ் இராச்சியத்தைத் தாக்கினர். கி.பி.13ஆம் நூற்றாண்டில் மங்கோலியர் ரஷ்யாவைத் தாக்கி அதிக நாசம் விளைவித் தனர். கி.பி.1380இல் மாஸ்க்கோவை ஆண்டு வந்த டமீட்ரி (Dmitri) கூலிக்கோவோ (KuliKovo) போரில் இவர்களை வென்றார்.
15ஆம் நூற்றாண்டின் இறுதியில் மூன்றாம் அய்வன் (Ivan III) மங்கோலியர் ஆதிக்கத்தை ஒழித்து ரஷ்யா முழுவதற்கும் மன்னனானார்.
நான்காம் அய்வன்
இவர் கொடூர அய்வன் (Ivan, The terrible) எனப் புகழ் பெற்றவர். இவர் கி.பி. 1533 முதல் 1584 வரை ஆண்டார். சார் (Tsar) என்ற பட்டத்தை முதலில் சூடியவரும் இவரே. வால்கா நதி முதல் யூரல் மலைத் தொடர் வரை ரஷ்ய ஆட்சி பரவியது. ரஷ்ய எல்லைகளை (Cossacks) காஸர்க்குகள் காத்தனர். போயர்கள் (Boyars) எனப்பட்ட பிரபுக்கள் ஒழிக்கப் பட்டனர். நான்காம் அய்வனுக்குப்பின் ரஷ்யா குழப்பத்தில் ஆழ்ந்தது.
ரோமனாப்
கி.பி.1613இல் போயர்கள் மைக்கல் ரோமனாப் (Michael Romanov) என்பவரை மன்னராகத் தேர்ந்தெடுத்தனர். இவர்கள் ரஷ்யாவை 300 ஆண்டுகள் ஆண்டனர். மகா பீட்டர் (Peter, The Great) கி.பி. 1689இல் சக்ரவர்த்தியானார். இவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்னும் நகரத்தை நிறுவனார். மக்களை அய்ரோப்பியர் வாழ்க்கை முறையை கைக் கொள்ளச் செய்தார். மதவாதிகளின் அதி காரத்தை ஒழித்தார். நீண்ட தாடி வைத்துக் கொள்வதைக் கண்டித்தார். ரஷ்யாவின் முன்னேற்றத்திற்காகச் சலிப்பில்லாது உழைத் தார். ஆனால், வரலாறு இவரை மேதைமிக்கக் காட்டுமிராண்டியென்றே கருதுகிறது.
பின்னர் 18ஆம் நூற்றாண்டில் ரஷ்யா காதரின் (Catherine II) என்ற ஒரு ஜெர்மானிய அரசகுமாரியின் ஆட்சிக்கு உள்ளானது. பெரும்பாலான வருமைமிகுந்த ரஷ்ய விவ சாயிகள் கி.பி.1770இல் ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அரசு கிளர்ச்சியை அடக்கி ஒடுக்கியது.

|