உலகம் அழியப்போகிறதா?
இதோ... அதோ... என்கிறார்கள்...
அவர் சொல்லிவிட்டார், இவர் சொல்லி-விட்டார் என்று எதையெதையோ எடுத்துக் காட்டுகிறார்கள்...
அதெல்லாம் முன்பே துல்லியமாக குறிக்கப் பட்டுவிட்டது என்று கடிகாரத்தைத் தூக்கிக் காட்டுகிறார்கள்...
இதற்கு அறிவியல் ஆதாரமெல்லாம் இருக் கிறது என்று அளந்து கொட்டுகிறார்கள்...
அப்படி என்னதான் ஆசையோ தெரிய வில்லை?
வேறெதற்கு? உலகம் அழியப் போகிறதாம். அதுவும் ஒரே நாளில் ஒட்டுமொத்த உலகமும் அழிந்துவிடுமாம். அதற்கு நேரமும் குறித்து வைத்திருக்கிறார்களாம். அதுவும் இன்னும் ரொம்பத் தொலைவில் இல்லை... இப்போது ஆறாவது படிப்பவர் எட்டாவது படிக்கும் போது, இப்போது ஏழாவது படிப்பவர் ஒன்பதாவது படிக்கும் போது... அட, இன்னும் இரண்டே ஆண்டுகள் தானாம்!?
ஆண்டு மட்டுமல்ல... தேதி என்ன தெரியுமா? உங்கள் அரையாண்டுத் தேர்வு முடியப்போகிறது, "அப்பாடா...கடைசி இரண்டு தேர்வுகள் தான் இருக்கிறது" என்ற ஆசையில் மனம் துடிக்குமே அந்த டிசம்பர் மாதத்தின் 21-ஆம் தேதி தான்... 21-12-2012! இதுதான் உலகின் கடைசி நாள் என்கிறார்கள்! (அழிவு நாள் வருவதாயிருந் தால்... வருவது தான் வருகிறது தேர்வு தொடங்கும் முன்பு வந்தாலாவது பரவாயில் லையே என்று தோன்றுகிறதா? நான் அப்படித் தான் ஆசைப்பட்டேன்.! பின்னே.. சிரமப்பட்டு தேர்வு எல்லாம் எழுதி, முடிவுகள் வரும் முன்பே எல்லாம் போச்சு என்றால் எப்படி இருக்கும்!)
உலகம் அன்று அழிவது நிச்சயம் என்று மாயன் நாள்காட்டியில் குறித்துள்ளார்கள். மாயன் இனமே அழிந்து போயிருந்தாலும் அவர்கள் சொன்னது மட்டும் நடக்கப்போவது நிச்சயம். இந்த அழிவுக்கு சூரியன் தான் காரணமாக இருக்கப் போகிறது என்றெல்லாம் அறிவியல் ஆதாரங்கள் இருப்பதாக அடுக்கு கிறார்கள். சரி, இப்போது புதிதாய் வந்திருப்பது தான் இந்த உலக அழிவு பற்றிய கதைகளா என்றால் அதுதான் இல்லை. காலம் காலமாய் இந்தக் கதைகள், அச்சங்கள் இருந்துகொண்டு தான் இருக்கின்றன.
முந்தைய காலங்களில், கடவுளின் சாபம், சாத்தானின் கோபம், தெய்வ குத்தம் அப்படி இப்படி என்று ஏகப்பட்ட மூடநம்பிக்கைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அச்சம் நிலவி வந்தது. வானம், சூரியன், சந்திரன், கிரகங்கள் என்றெல்லாம் தொடக்க கட்ட வானியல் அறிவு வளர்ந்த காலத்தில், ஜோதிடம் போன்ற முட்டாள்தனங்களோடு சேர்த்து வானியல் பார்க்கப்பட்ட காலங்களில் அவற்றால் எழுந்த அச்சம். பிறகு போர்கள் காரணமாக அச்சம் ஏற்பட்டது. அறிவியல் வளரத் தொடங்கியதும், ஆகாயத்தில் பறக்கத் தொடங்கியதும் பிறந்த அச்சம்... இப்படி அடுக்கடுக்காய் உலகம் அழியப் போகிறது என்ற அச்சம் மனித குலத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், அண்மைக் காலங்களில் எழுந்த அச்சங்களைச் சொல்லலாம். 1979-களின் நடுவில் வந்தது ஸ்கை லேப் என்னும் அச்சம். அதென்ன? ஸ்கை லேப் என்னும் செயற்கைக் கோள் செயலிழந்து பூமியின் மீது வந்து மோதப் போகிறது. அப்படி மோதினால் எங்கு மோதும் தெரியுமா? இந்தியாவில் தான்! என்கிற ரீதியில் கிளம்பிய பீதியால் படிக்காத பாட்டி கூட ஸ்கை லேப் பற்றிப் பேசினாள். பிறகு ஷூ மேக்கர் லெவி என்னும் வால்நட்சத்திரம் சூரியக் குடும்பத்தைச் சுற்றி வரும்போது வியாழனை மோதப்போகிறது. அவ்வாறு மோதினால், அதிலிருந்து சிதறும் துகள்கள் பூமியைத் துளைத்துவிடும் என்று 1994-ஆம் ஆண்டில் பரபரப்பு கிளம்பியது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல் ஒரு பெரும் பீதியை நூற்றாண்டு காலமாகவே பரப்பி வந்தார்கள். சிலுவையில் மரித்த இயேசு திரும்பி வருகிறார் என்று! 2000-ஆம் ஆண்டு அவர் திரும்பி வருகிறார் என்றார்கள். சரி, செத்துப் போன இயேசு திரும்பி வந்தால், நாமும் இயேசுவுக்கு முன்பே தோன்றி மறைந்த நமது புத்தர், திருவள்ளுவர் தொடங்கி சீனியாரிட்டி அடிப்படையில் முக்கியமான அறிவாளிகளையெல்லாம் திருப்பிக் கொண்டு வந்துவிடலாம் என்று பார்த்தால் இயேசுவின் வருகை உலகின் அழிவைக் குறிக்கும் என்றார் கள். 'அடக் கொடுமையே! உலகம் அழிவதற் காக இயேசு மீண்டும் பிறந்துவரவேண்டுமா?' என்ற நம் கேள்விக்கு வாயை மூடிக் கொண்டார்கள். இது போதாதென்று, நாம் ஆண்டுகளைக் குறிப்பிடும் போது 04-05-1994- என்றால் வெறும் 04-05-94 என்று கடைசி இரண்டு எண்களை மட்டும் குறிப்பிட்டே பழகியிருக்-கிறோம் அல்லவா? அதே போல கணினியிலும் கடைசி இரண்டு எண்களை மட்டுமே குறிப்பிட்டுக் கொண்டிருந்தோம். இதனால், 31-12-1999 என்பதை 31-12-99 என்றே குறிப்பிட்டு வந்தோம். இப்படி இருந்தால் 31-12-99 க்குப் பிறகு 01-01-00 என்றல்லவா வரும். அப்படி வந்தால் கணினி குழம்பிவிடும். கணக்குகள் எல்லாம் (-) கழித்தல் குறியில் வந்துவிடும். கணினி குழம்பிப் போனால், ஆங்காங்கே தானியங்கி ஏவுகணைகளை எல்லா நாடும் நிறுத்தி வைத்திருப்பதாலும், அதில் அணுகுண்டு உள்ளிட்ட கொடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்கள் நிரப்பப்பட்டிருப்பதாலும், அமெரிக்காவி லிருந்து, ரஷ்யாவுக்கும், ஈராக்குக்கும், ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவுக்கும், இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும், பாக்-இலிருந்து இந்தியாவுக்கும், இப்படி மாறி மாறி ஏவுகணைகள் பறந்து 2000-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் சுக்கல் கோடியாக சிதறிப் போய்விடும் என்றும் எல்லா ஊடகங் களும் அலறின. இது தான் சாக்கென்று, இயேசு வருகிறார் கும்பலும், பார்த்தீர்களா.. பார்த் தீர்களா.. என்று கூக்குரல் இட ஆரம்பித்தது. 2000-ஆம் ஆண்டு பிறந்தது.. வழக்கம் போல் வேட்டுச் சத்தங்கள் முழங்கின... கொண்டாட்டத்தின் அறிகுறியாக! கணினிக் குழப்பமும் வரவில்லை... (முன்பே அதற்கான தீர்வுகளெல்லாம் வழங்கப் பட்டுவிட்டன) ஏவுகணைகளும் பறக்க வில்லை.. இயேசுவும் எழுந்து வரவில்லை(ஒரு வேளை அவருக்கு டிக்கெட் கிடைக்க வில்லையோ என்னவோ) இப்படி ஒன்றல்ல.. இரண்டல்ல... ஓராயிரம் முறை வால்நட்சத் திரம், விண்கல், ஏவுகணை, பறக்கும் தட்டு, வெளிகிரக வாசிகள் என்று அழிவுக் கதைகள் நம்மைச் சுற்றிக் கொண்டே இருக்கின்றன.
இப்படிப்பட்ட கதைகள் என்றால் ஹாலிவுட் காரர்களுக்கு அல்வா..ம்ம்... பீட்சா சாப்பிட்ட மாதிரி! ச்சும்மா அள்ளிக் கொட்டிவிடுவார்கள். கைவசம் இருக்கும் வரைகலை தொழில்நுட் பத்தைக் கொண்டு கலக்கிவிடுவார்கள். ஸ்டீபன் ஸ்பீல்பர்க், ஸ்டான்லி ஹூப்ரிக், ஜேம்ஸ் கேமரூன், ஜார்ஜ் லூகாஸ் வரிசையில் அந்த இடத்தில் இருப்பவர் ரோலண்ட் எம் மெரிச். இண்டிபெண்டென்ஸ் டே, தி டே ஆப்டர் டுமாரோ போன்ற இவரது படங்கள் அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் குறிப்பாக இந்தியாவிலும் சக்கைபோடு போட்ட படங்கள்.
இண்டிபெண்டென்ஸ் டே படத்தில், வேற்றுகிரக வாசிகள் வந்து பூமியை ஆக்கிர மிக்கப் பார்ப்பார்கள். அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மேல் திரண்டு நிற்கும் ஆபத்தைப் போக்க பெரும் முயற்சி மேற் கொள்ளப்படும். சகலகலா அமெரிக்கர்கள் அந்த ஆபத்தை முறியடித்து, உலகையும், அமெரிக்காவையும் காப்பார்கள்.
அடுத்து வந்த 'தி டே ஆப்டர் டுமாரோ' படம் வானியல் மாற்றங்களால் மீண்டும் ஒரு பனிக்காலம் (ஐஉந ஹபந) உருவாகக் கூடிய ஆபத்தை எடுத்துச் சொல்லும். ஒரு சிறிய இடை வெளிவிட்டு மீண்டும் அதே போன்ற ஒரு படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் ரோலண்ட் எம்மெரிச். அது தான் "2012" என்ற ஆங்கிலப் படம். தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு திரையரங்குகளில் கூட்டம் நிரப்பிக் கொண்டிருக்கிறது படம்.
இதில் என்ன தான் புதிதாக சொல்லியிருக் கிறார்கள்? சூரியனின் வெப்பநிலை அதீதமாய் உயரத் தொடங்கி, அதனால் பருவநிலைக் கோளாறுகள் உருவாகும், புவி வெப்பமாகும்... இதையெல்லாம் தாண்டி, சூரியனும் மற்ற கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் துருவங்களில் மாற்றம் உண்டாகும். புவியின் மேற்தட்டுகளான டெக்டானிக் தட்டுகள் நகரத் தொடங்கி, இன்றைய வட அமெரிக்காவின் விஸ்கான்சன் பகுதி வட துருவமாகிவிடும். பூமியின் தட்டுகள் இப்படி ஒரே நேரத்தில் நகரத் தொடங்கினால் என்ன ஆகும்? கொஞ்சம் நகர்ந்தாலே நிலநடுக்கும் ஆட்டம் காட்டுகிறது. இப்படி ஒட்டுமொத்தமாக நகர்ந்தால் என்ன ஆகும்... என்று நமது வாயைப் பிளக்க வைக்கும் ஆச்சரியக் கற்பனையை திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆங்காங்கே ஏற்படும் பெரும் பெரும் நிலநடுக்கங்களால், பெரும்பான்மைப் பகுதி கள் அழியவும், எரிமலைச் சீற்றங்களால் இன்னும் பலவிடங்கள் அழியவும், கடலுக் கடியில் ஏற்படும் நிலநடுக்கங்களால் ஆழிப் பேரலைகள் உருவாகி உலகின் பெரும் பகுதியை நீர் சூழ்ந்து கொண்டு உலகமே பிரளயமாகிவிடும். இத்தனை பெரிய அழிவை திரையில் மிகவும் தத்ரூபமாகக் காட்டியிருக்கிறார்கள். நிச்சயம் நாம் பார்க்கப் போவதில்லை என்பதால் அவசியம் இந்த கற்பனையை திரையில் பார்க்கலாம். "கற்பனையா- என்ன விளையாடுகிறீர்களா? அவர் சொன்னார்.. இவர் சொன்னார் என் கிறார்கள்? அய்ன்ஸ்டீனே இதைப் பற்றி யெல்லாம் சொல்லியிருக்கிறாராமே.. சில புத்த கங்களைக் கூட ஆதாரமாக படத்தில் காட்டு கிறார்கள்? நீங்கள் என்னமோ" என்கிறீர்களா? "அவர் சொன்னார்; இவர் சொன்னார் என்று அறிவிழந்து போகாதே; எவர் சொன்ன சொல்லானாலும் உன் கூர்மையான அறிவைக் கொண்டு யோசித்துப் பார்" என்று சாக்ரடீஸ் முதல் பெரியார் தாத்தா வரைக்கும் எல்லோரும் சொல்லிருக்கிறார்கள் அல்லவா? அப்படி யோசிக்க வேண்டும். இந்த அட்டகாசமான கற்பனைக்கு மத முலாமும் பூசினால் அட்டகாசமாகிவிடும் அல்லவா? பைபிளும், குர்-ஆனும் இதை உலகின் அழிவு என்கின்றன. மாயன்கள் இதை முன்பே கணித்திருக்கிறார்கள்.. என்று எவ் வளவோ புருடாக்களை ஆதாரமாகக் காட்டி னாலும், அவை புருடாக்கள் என்பதால் அதை ஒதுக்கிவிட்டு இந்த அறிவியல் செய்திகளைக் கவனத்தில் வைப்போம்.
சூரிய கிரகணத்தின் போது, சூரியனின் ஈர்ப்பு விசை அதிகம் இருக்கும்.. அதனால் பூமியின் டெக்டானிக் பிளேட்டுகள் நகரும். ஆழிப் பேரலை வரும் என்று அறிவியல் சொற்களைக் கொண்டு எவனோ கிளப்பிவிட்ட கப்சாக்களை வைத்துக் கொண்டு, சுனாமி வரும் என்றும் பீதியைக் கிளப்பிய நம்மூர் ஜோதிடர்கள் இப் போது எங்கு கொண்டுபோய் முகத்தை வைத்திருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும் அல்லவா?
அப்படித் தான் இதுவும். "நுயசவா ஊசரளவ னுளையீடயஉநஅநவே கூநடிசல" எழுதிய சார்லஸ் ஹேப்குட் என்பவர் அறிவியல் ஆராய்ச்சியாளரோ, புவியியல் வல்லுநரோ கிடையாது. அவர் அறிவியலின் வரலாற்றை ஆய்பவர். அவர் எடுத்துக் கொண்ட கருது கோள்களில் ஒன்றுதான் இந்த புவித்தட்டின் பெரும் இடப்பெயர்வு என்பது. அறிவியலில், இப்படி நடந்தால் எப்படி இருக்கும்? இப்படி இருந்தால் என்ன செய்வது என்பது பற்றியெல்லாம் பலவாறாக யோசிப் பார்கள். அவையெல்லாம் ஆராய்ச்சிக்குப் பயன்படும் கருதுகோள்கள் அவ்வளவே.. அவை நடக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே அப்படியொரு கருதுகோளை எடுத்துக் கொண்டு சுவையாகக் கதை பின்னி, அதைக் காட்சிகளிலும் விரித்திருக்கும் கற் பனைத் திறத்தை வியந்தபடி படத்தைப் பார்த்துவிட்டு வந்துகொண்டிருக்க வேண்டியது தான்.. இப்போது பார்க்க முடியாதவர்கள்.. இப்படத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை 2012-இல் ஏதாவதொரு செயற்கைக் கோள் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார்கள். அப்போது பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.
மற்றபடி, இந்த படத்திலிருந்தோ, இதற்கு முந்தைய 'டே ஆப்டர் டுமாரோ' படத்தி லிருந்தோ நாம் கற்க வேண்டிய பாடம் ஒன்று உண்டு என்றால், அது "புவி வெப்பமயமாதல்" பற்றிய எச்சரிக்கைதான். அதனால், ஏற்படப் போகும் ஆபத்தை ஒட்டுமொத்த மனித குலமும் எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பற்றிய அறிவார்ந்த செயல்கள் தான் நமக்குத் தேவை.
மற்றபடி எந்த அழிவும் நமக்கு நேரப் போவதில்லை. கவிப்பேரரசு வைரமுத்து சொல்வதைப் போல,
"பூமியை நோக்கி
அழிவுக் கோளா?
இன்னொரு கிரகம்
இல்லையா என்ன?" தேடிக் கண்டுபிடிப்போம் விண்வெளிக்குள்! அதற்கு முன் நமது புவியைக் காப்போம்! வாருங்கள் பிஞ்சுகளே!
|