மதத்தை மண்டியிட வைத்த டார்வின்
- பிஞ்சண்ணா
மேற்படிப்புகளுக்காகச் சென்றிருந்த புருனோ கல்லூரிகளுக்கு விடப்பட்டிருந்த விடு முறையை யொட்டி வீடுதிரும்பியிருந்தான். புருனோ வரும் தகவலறிந்த பிஞ்சுகள் ஆர்வத்தில் துள்ளிக்குதித்தனர். நீண்ட நாள்களாகிவிட்டது புருனோவைப் பார்த்து! வானவியல் பற்றிய ஆச்சர்யமான செய்தியைப் பகிர்ந்து கொண்டு, தங்களுக்கு பெரும் அறிவியல் ஆர்வத்தை ஊட்டியவன் என்பதால் அவர்களுக்கு புருவின் வருகை பெரும் மகிழ்ச்சியைத் தந்ததில் வியப்பில்லை.
புருவைப் பார்த்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிவிட்டது. அவனின் தோற்றத்தில் சின்னச் சின்ன மாற்றங்கள் இருந்தன. அரும்புமீசை முளைத்திருந்தது. உயரத்திற்கேற்றவாறு கொஞ்சம் பருமன் கூடியிருந்தது. பவானி வீட்டு வரவேற்பறையில் தமிழீழம், சூர்யா, குறிஞ்சி, டார்வின் சிபி ஆகியோர் காத்திருந்தனர். வீட்டுக்குள் நுழைந்த புருவைச் சுற்றி வளைத்து, தங்கள் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
அடடே! எல்லாம் நல்லா வளர்ந் திட்டீங்களே! டேய் வால் டார்வின், நீதான் ரொம்ப வளர்ந்திட்டே! என்று தன் மகிழ்வைக் காட்டினான் புருனோ.
ஆமா! சின்னப் பிள்ளைகள்தான் வேகமா வளரும், வயசானதுக்குப் பிறகுதான் வளர்ச்சி குறைஞ்சிடுமே! என்று துடுக்கென பதில் சொன்னான் டார்வின்.
அட! என்று தன் வியப்பைக் காட்டிய புருனோ, எல்லோருடனும் பேசிவிட்டு, குளித்து முடித்துத் திரும்பினான். என்ன புருனோ உங்களுக்கு மட்டும் விடுமுறை விட்டுட் டாங்க? என்று கேட்டாள் தமிழீழம்.
எனக்கு மட்டுமில்ல தமிழ்நாட்ல எல்லா கல்லூரிகளும் விடுமுறைதான். எல்லாம் உன் பிரச்சனைதான் என்றான் புரு.

என் பிரச்சனையா? என்ன? நான் என்ன பண்ணேன். என்று புரியாமல் விழித்த தமிழீழத்தைப் பார்த்து பவானி,
ஏய்! ஈழத்தில நம்ம தமிழர்கள் மேல தினந்தினம் சிங்கள ராணுவம் குண்டுபோட்டுக் கொன்னுக்கிட்ருக்கில்ல, அதைப்பத்தி சொல்றாங்க! என்று விளக்கினான்.
ஆமா, உங்களை மாதிரி பிஞ்சுக் குழந் தைகள் படிக்கிற பள்ளிக்கூடம், மருத்துவ மனை, கூடாரம்னு எங்கு பார்த்தாலும் குண்டு போட்டு மக்களை அழிச்சுக்கிட்டிருக்கிற சிங்கள அரசைக் கண்டிச்சும், அதுக்கு ஆயுதம் தர்ற பாகிஸ்தான், இந்தியா, சீனா மாதிரி நாடுகளைக் கண்டிச்சும், போராட்டம் செஞ் சோம். போராட்டம் பெரிசாகி, இன்னைக்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகம் முழுக்க பத்திக்கிச்சு. ஆனா, இங்க மாணவர்கள் போராட்டத்தில வேகம் கூடி வன்முறை வந்திடக்கூடாதுங்கிறதுக்காகவும், நம்ம ஈழ சகோதரர்கள், சகோதரிகள் கொல்லப்படுற செய்தியை கிராமத்தில உள்ள நம்ம சொந்தங் களுக்கெல்லாம் சொல்லி, விழிப்புணர்வை ஏற்படுத்துங்கன்னு எங்களுக்கு விடுமுறை விட்டு அனுப்பியிருக்காங்க என்றான்.
ஆமா புரு! நானும் பார்த்தேன். என்னைவிட சின்னக் குழந்தைங்ககூட செத்துக் கிட்டிருக்கு! என்று வேதனையை வெளிப் படுத்தினாள் குறிஞ்சி.
சரி, எப்ப நீ திரும்ப ஊருக்குப் போற? என்றார்கள் புருவைப்பார்த்து.
இந்த வாரத்திலேயே கிளம்பிடுவேன். பிப்ரவரி 12ம் தேதி டார்வின் பிறந்த நாள் வருதில்ல. அதுக்காக நம்ம பெரியார் திடல்ல 18ம்தேதி ஒரு நிகழ்ச்சி இருக்கு! அதில கலந்துக்கணும் என்றான் புருனோ.
டார்வினுக்குப் பிறந்த நாளா? என்று டார்வினைப் பார்த்தான் சூர்யா.
எனக்குப் பிறந்த நாளா? அது ஜுலை 26 தானே புரு, என்ன குழப்புற என்றான் டார்வின் சிபி. ஹ, ஹா...... டார்வின்-னா நீ மட்டும் தானா? உனக்கு யார் பெயரை வெச்சோமோ, அந்த சார்லஸ் டார்வினுக்குப் பிறந்த நாளு, அதுவும் 200-ஆவது பிறந்த நாளு! அதைக் கொண்டாடத்தான் நான் போறேன். பிறந்த நாள்னா சும்மா கொண்டாட்டம் இல்ல. அது அறிவியல் மனப்பான்மையைப் பரப்பும் விழா என்றான்.
அறிவியல் அறிஞர்னா நிறைய பேரு இருக்காங்களே, அதென்ன டார்வினுக்கு அவ்வளவு சிறப்பு? என்றாள் தமிழீழம்.
இருக்கு. எத்தனையோ அறிவியல் கண்டு பிடிப்புகள், அறிஞர்கள் இருந்தாலும், உலகின் சிந்தனையை மாற்றிப்போட்டு, அறிவியலின் பாதையைத் திருப்பியவர்கள்னு சொல் லணும்னா கலிலியோ, நியூட்டன், டார்வின், எடிசன், அய்ன்ஸ்டீன் இவங்களைச் சொல்லலாம். இதில மற்றவங்களெல்லாம் இயற்பியல் துறையில சிறந்தவங்கன்னா டார்வின் தான் மதவாதிகளின் பொய்யை உடைச்சு உயிர்கள் தோன்றியது எப்படி? ங்கிற உண்மையைக் கண்டு சொன்னவர். புருனோ விளக்கம் சொன்னான்.
ஆமா! உயிர்களின் மூலம் origin of speciesங்கிற புத்தகத்தை எழுதியிருக்காருன்னு நானும் பாடத்தில படிச்சிருக்கேன் என்றாள் பவானி.
சரியாச் சொன்ன பவானி! அதுவரை கடவுள்னு ஒருத்தன் இருக்கான். அவன்தான் உலகத்தை உருவாக்கினான். உலகத்தில இருக்கிற கல்லு, மண்ணு, மரம், மட்டை, செடி, கொடி, நாய், பூனை, யானை, சிங்கம், புலி, மான், மீன், நண்டு, திமிங்கலம், சுறா, புறா, காகம், மயில், குயில், குரங்கு, கரும்பு, இரும்புனு எல்லாத்தையும் கடவுள்தான் உண்டாக்கினார்னு புளுகி வைச்சிருந்தானுங்க. இதையெல்லாம் படைச்ச கடவுள் கடைசியா, தன்னுடைய உருவம் மாதிரியே மனுசனைப் படைச்சார்னு விட்டான் பெரிய ரீலு.
இதை ஒவ்வொரு மதவாதியும் ஒவ்வொரு மாதிரி புளுகி வெச்சான். அவனவன் வாழ்ந்த நிலப்பகுதிக்கு ஏத்த மாதிரி உருவத்தையும் உடைகளையும் வச்சு கடவுள் இப்படித்தான் இருப்பார். இவர்தான் நம்மளைப் படைச்சார்னு அள்ளிவிட்டான். பல ஆயிரம் வருசமா இதைத்தான் உலகம் நம்பிக்கிட்டிருந்தது என்று புரட்டுகளை உடைத்தான் புரு.
ஆமா, God created man in his own imageனு பைபிள்-ல இருக்கிறதா ஒரு தடவை எங்க மிஸ் சொன்னாங்க! என்று நினைவு கூர்ந்தாள் குறிஞ்சி.
ஆனா உண்மை அதுவா? என்று பிஞ்சுகளை நோக்கி வினா எழுப்பினான் புரு.
இல்லையே நீங்க சொல்றதப் பார்த்தா, Man created God in his own imageனு அதை மாத்தி சொல்லணும் போலிருக்கே! என்றார்கள் பவானியும், தமிழீழமும்.
சரியாச் சொன்னீங்க! உண்மையும் அதுதான் என்று பாராட்டிய புருனோவை மறித்த சூர்யா, ஆமாமா, உலகம் ஒரே நாள்ல உருவாகலை. சூரியன்லயிருந்து வெடிச்சுச் சிதறின நெருப்புக்குழம்பு ஆறி, ஆறி பூமியானதுன்னு ஏற்கெனவே சொல்லியிருக் கீங்கல்ல என்று நினைவூட்டினான்.
ஓ! அப்படின்னா மெதுமெதுவா உருவான பூமியில உயிர்களும் அப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமா உருவானதா? என்றான் டார்வின் சிபி.
ஆமா, அப்படி ஒரு செல் உயிரிலிருந்து வளர்ந்து, உருமாறி திரிந்து இன்னைக்கு இத்தனை வகையான உயிர்களும், மனிதனும் வந்திருக்கான். இதுக்குப் பேருதான் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு. இங்கிலீஷ்ல Evolution Theory! இதைச் சொன்னது டார்வின்தான் என்ற புரு தொடர்ந்தான்.
டார்வின் தன்னோட சின்ன வயசில யிருந்தே, செடி கொடிகள் சின்னச் சின்ன புழு, பூச்சிகள், நாய்கள், விலங்குகள் எல்லாத் தையும் உன்னிப்பாக் கவனிச்சு, அதைப்பற்றிய செய்திகளைத் தெரிஞ்சுக்கிட்டு, பிறகு, மருத்துவப் படிப்பு, மதப்படிப்பு எதுவும் ஒத்துவராமல் இயற்கையியல் வல்லுநராக மாறிட்டாரு. கேப்டன் பிட்ஸ்ராங்-ங்கிறவர் தலைமையில் கிளம்பின பீகில்-னு ஒரு கப்பலில் இயற்கையியல் வல்லுநர் தேவைன்னு வந்த கடிதத்தை வைத்து அவரும் பயணத்தில் சேர்ந்துக்கிட்டாரு. அந்தப் பயணம்தான் இன்றைய உலகத்தில அறிவியல் சிந்தனை மாறினதுக்குக் காரணம்னு சொல்லலாம்.
அந்தப் பயணத்தில் அவர் ஏகப்பட்ட தீவுகளுக்குப் போனாரு. எதிலேயும் அவர் சும்மா இருக்கலை. கொஞ்சம் கொஞ்சமா தான் பார்த்ததைப் பற்றி குறிப்புகள் எடுத்துக்கிட்டே வந்தாரு. வேணும்கிற பிராணிகள், பூச்சிகள் தாவரங்களை சேமிச்சு, அப்பப்போ அதை இங்கிலாந்துக்கு அனுப்பிக்கிட்டே இருந்தாரு. இதையெல்லாம் அவருடைய நண்பர்கள் சேமிச்சுக்கிட்டு வந்தாங்க. இரண்டு வருடங் களில் முடியும்னு நினைச்ச பயணம் அய்ந்து வருடங்கள் தொடர்ந்தது. டார்வினுக்கு சந்தோசம்தான் அதில் என்றான் புரு.
எனக்கும் சந்தோசம்தான் ஊர் ஊரா சுத்துறதில என்று துள்ளினான் டார்வின்.
அது சரி, அப்படித்தான் அவருக்கும்! ஆனா ஊர் ஊரா சுத்தினா பயணக் குறிப்புகள்தான் எழுதலாம். அறிவியல் செய்திகளையா எழுத முடியும் என்று கேட்டான் சூர்யா.
சற்று சிரித்த புருனோ, நம்ம ஆட்கள் எல்லாம் ஊர் சுத்திட்டு வந்தா எங்கே இட்லி கிடைக்கும்? இட்லிக்கு எங்கே நல்ல சட்னி கிடைக்கும்-னு புத்தகம் போடுவாங்க. ஆனா, டார்வின் தன்னோட பயணத்தில பார்த்தவை அவருக்கு வெவ்வேறு சிந்தனைகளை உருவாக்கியது. ஒவ்வொரு தீவுலயும் புதுப்புது விலங்குகளைப் பார்த்தார்.
இந்தத் தீவுல பார்த்த விலங்கு அடுத்த தீவில் இல்லை. பறவைகள், பூச்சிகள், தாவரங்கள்னு எல்லாத்திலேயும் இதே நிலை இருந்தது. ஆனா, பலவித விலங்கு வகைகள், உயிரினங்களுக்குள்ள ஒற்றுமைகளும், வேற்று மைகளும் இருந்தன. கொஞ்சம் கொஞ்சம் மாறுபாடு, அந்தந்த சூழலுக்கேற்ப விலங்கு களுக்குள்ள வித்தியாசம் இருந்தது. அப்பதான் அவருக்கு ஒரு விசயம் புரிந்தது என்று ஆர்வத்தைக் காட்டினான் புரு.
அவன் காட்டிய ஆர்வத்தை பிஞ்சுகள் கூட்டினர்.
உலகம் முழுக்க ஒரே நேரத்தில் உயிர்கள் தோன்றவில்லை. தோன்றியிருக்க முடியாது. கொஞ்சம் கொஞ்சம் வேறுபாடுடைய உயிர்களுக்கு இடையில் இருக்கும் வேற்றுமை, காலம், சூழல் போன்றவற்றிற்கேற்ப உயிர்கள் மாற்றம் கண்டிருக்கின்றன அப்படின்னு முடிவு பண்ணாரு. இந்தக் கோணத்தில் அவருக்கு நிறைய ஆதாரங்கள் கிடைச்சது. அய்ந்து ஆண்டுகள் பயணம் முடிச்சு அவர் லண்டன் திரும்பி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆய்வு செய்ததோட முடிவுதான் பரிணாம வளர்ச்சி ங்கற கோட்பாடு.
அது பத்தி விரிவாச் சொல்லு, புரு என்றாள் தமிழீழம்.
விரிவாகச் சொல்றதுக்கு நிறைய செய்திகள் இருக்கு. கண்டிப்பா அடுத்த விடு முறைக்கு வரும்போது எடுத்துக்காட்டுகளோடு சொல்றேன். இப்போ சுருக்கமா தெரிஞ்சுக் கோங்க.
உலகத்தில் ஏகப்பட்ட உயிரினங்கள் இருக்கு. அதில் ஒரே இனத்தைச் சேர்ந்த உயிரினமா இருந்தாலும் அதுகளுக்குள் குணம், நிறம் இதிலெல்லாம் மாறுபாடுகள் இருக்கின்றன. அப்படிங்கிறதுதான் அவரு டைய முதல் கருத்து.
அடுத்து, ஒவ்வொரு உயிரினமும் அளவுக்கு மீறிப் பெருக்கமடையுது அப்படிங் கிறது இரண்டாவது கருத்து என்று விளக்கினான் புரு.
ஆமா, மக்கள் தொகைப் பெருக்கம்னு தான் எல்லாரும் அலறுறாங்களே! என்றாள் பவானி.
ஆமா! ஆனா மக்கள் தொகைப்பெருக்கம் மட்டுமில்லை. தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள் எதுவானாலும் இதுதான் நிலைமை. அவரோட கணக்குப்படி ரொம்பக் குறைவா இனப்பெருக்கம் செய்யுற யானைகளை விட்டோம்னா கூட 750 ஆண்டுகள்ல இந்த உலகமே நிரம்பிவெறும் யானைகள் மட்டுமே இருக்கும் அளவுக்கு ஆயிடும். இப்படி அளவுக்கு மேல பெருகிறதனால அது தங்கள் வாழ்க்கைக்காகப் போராட வேண்டியிருக்கு.
இயற்கைப் பேரழிவுகள், விலங்குகளுக்குள் போராட்டம் இதெல்லாம் தொடர்ந்து நடக்கும் கிறதுதான் மூன்றாவது கருத்து.
அப்படி நடக்கிற போராட்டத்துல தாக்குப் பிடிக்கக்கூடிய உயிரினங்கள்தான் காலங்கடந்து வாழுது. இதைத்தான் ளுரசஎஎயட டிக வாந கவைவநளவனு சொல்றோம். இயற்கையின் மாறுபாடுகளுக் கேற்ப தங்களை மாற்றிக்கிறது தான் இயற்கை தேர்ந்தெடுத்தல்னு மிக முக்கியமான செய்தியாகச் சொல்றாரு டார்வின் என்றான் புரு.
காலரைத் தூக்கிவிட்டுக் கொண்ட டார்வின், என்ன புரிஞ்சதா டார்வின் சொல்றது என்று பெருமை காட்டினான்.
அப்படித் தேவையான மாற்றங்கள் தலைமுறை தலைமுறையாக ஏற்படுது. பின்னர் அப்படியே அது தொடருது. எடுத்துக்காட்டா, ஒட்டகச் சிவிங்கியோட கழுத்து அதன் தேவைக்கேற்ப, உயரமான மரங்களை சாப்பிடு வதற்காக நீண்டு நீண்டு இன்றைக்கும் அப்படியே இருக்கு. இதைத்தான் டார்வின் சொல்றாரு.
இப்படி எல்லா உயிரினங்களையும் படைச்சது கடவுள்தான்கிற கருத்தை உடைச் சதனால டார்வினுடைய இந்தக் கொள்கைக்குப் பெரும் எதிர்ப்பு என்றான் புரு.
யார்கிட்ட இருந்து? என்று வியப்படைந் தார்கள் பிஞ்சுகள். வேற யாரு, எப்பவும் அறிவியலை எதிர்க்கிற மதவாதிகள் தான் என்று புருனோ சொன்னதும்.
அவனுங்க கிடக்கிறாங்க. அவங்களுக்கும் அறிவுக்கும் தான் தொடர்பேயில்லையே! கவலையை விடுங்க என்றனர் பிஞ்சுகள்.
ஆமா, சரிதான். ஆனா, அவங்களால தொடர்ந்து நிற்க முடியுமா? காலப்போக்கில வேற வழியில்லாம டார்வின் கொள்கைகளை எதிர்க்க முடியாம, தோல்வியை ஒப்புக் கிட்டாங்க. டார்வின் மட்டுமில்ல, எந்த அறிவியலுக்கும் முன்னாடி முட்டாள்தனமும், மதமும் நிற்க முடியாதில்ல என்றபடி எழுந்தனர் அனைவரும். |