பெண் சிசு பேசுகிறது
பூமி எனும் அழகுத் தோட்டத்தில்
புத்தம் புதிதாய் மலருகின்றேன் - நான்!
என்னைக் காக்க வேண்டிய நீயே
என்றன் மூச்சை நிறுத்துகின்றாயே!
தாலாட்ட வேண்டிய உனது
கைகளால் தாயே என்னை தவிக்க விடுகின்றாயே!
சீராட்ட வேண்டிய நீயே! - என்
சிற்றுயிரைச் சிதைத்து விட்டாயே!
அழுகுரல் சத்தம் கேட்கவில்லையா!
அலட்சியமாக இருக்கின்றாயே!
உள்ளன்பால் உயிர்ப்பால்
பிள்ளைப்பால் தராமல் தாயே
கள்ளிப்பால் தருகின்றாயே!
கண்மணிபோல காக்க வேண்டிய நீயே!
நெல்மணி கொடுத்துக் கொல்கின்றாயே!
பசுமாடு பெண் கன்று ஈன்றால்
பார்த்தே மகிழ்கின்கிறாய் - ஆனால்
உனக்குப் பெண் பிறந்தால்
ஏன்? கண்ணீர் வடிக்கின்றாய்!
நான் என்ன யாருமே விரும்பாத
விலையற்ற பொருளா? - குப்பைத்
தொட்டியில் வீசுகின்றாயே!
அனைத்தையும் செய்யும் - என்
அன்னையே நீயும் ஒரு பெண்
என்பதை மறந்து விட்டாயா?
- பா.விஜயபிரபாகரன், நன்னிலம் |