புகழ் பெற்ற மனிதர்கள் 12

அடிமைத்தளை அறுத்த ஆப்ரகாம் லிங்கன்
கு.வே.கி.ஆசான்

அமெரிக்க நாட்டில் கறுப்பு இன மக்களை அடிமைகளாக வைத்திருந்தனர். ஆஃபிரிக்கக் கண்டத்தில் இருந்து அவர் களைக் கொண்டு வந்து விற்றவர்கள் பெரிய அளவில் லாபத்தைப் பெற்றனர். விலை கொடுத்து வாங்கிய வெள்ளையர்கள், அவர் களை வீட்டு வேலைக்கும் தோட்ட வேலைக்கும் வைத்துக் கொண்டனர். பருத்தி, கரும்பு, புகையிலை முதலிய வற்றைப் பயிரிட அவர்களே பாடுபட்டனர். அமெரிக்க நாட்டின் (யு.எஸ்.ஏ.) தென் பகுதியில் வெப்பம் அதிகம்; ஆகையால் அங்கு நிலத்தில் வேலை செய்ய வெள்ளை யர்கள் தொல்லைப் பட்டனர். வெப்பத்தைத் தாங்கிக்  கொண்டு வேலை செய்யும் கறுப்பர்கள் தங்களுக்கு அடிமைகளாக நீடிக்க வேண்டும் எனப் பிடிவாதமாக இருந்தனர். அநியாயமான இந்த முறையை முடிவுக்குக் கொண்டு வந்த மாமனிதர், ஆப்ரகாம் லிங்கன்; சடடத்தின்படி அனைவரும் சம உரிமை உள்ளவர்கள், அடிமைகள் இல்லை என அரசு அமைப்பில் மாற்றம் செய்த வரலாற்று நாயகர் அவரே!

இளமை

ஆப்ரகாம் லிங்கன் 1809 பிப்ரவரி 12-இல் பிறந்தவர். இப்பொழுது 50 மாநிலங்களைக் கொண்டதாக அமெரிக்க நாடு (யு.எஸ்.ஏ.) இருக்கிறது. ஆனால் அவர் பிறந்த பொழுது அதில் 17 மாநிலங்கள் மட்டுமே இருந்தன. லிங்கனின் தாய் நான்சி. அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவருடைய தந்தை, தாமஸ் லிங்கன். தச்சு  வேலையும், பயிர்த் தொழிலும் செய்து வாழ்ந்தார் அவருக்குச் சொந்தமாக  நிலம் இருந்தது. அதில், மரக் கட்டைகளால் கட்டிய, ஓர் அறையை மட்டுமே உடைய வீட்டில் குடியிருந்தனர்.

விளைச்சல் குறைவு, நிலவுடைமை பற்றிய சட்டச் சிக்கல், தொற்றுநோய் முதலிய காரணங்களால், லிங்கனின் இளமைப் பருவத்தில் அவருடைய தந்தை  வெவ்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வாழ வேண்டியிருந்தது. ஆப்ரகாம் லிங்கன் பிறந்த பொழுது கெண்டகி மாநிலத்தில் வாழ்ந்தனர்; பின்பு இண்டியானாவிற்கும், அதை அடுத்து இல்லியனாய்ஸ் மாநிலத்திற்கும் இடம் பெயர்ந் தனர். ஆப்ரகாமுக்கு வயது இரண்டு, எழு, 20 ஆண்டுகள் என நடந்து கொண்டிருந்த பொழுது, இந்த இடப்பெயர்வுகள் நடந்தன.

இவற்றிற்கு இடையில், அவருக்கு ஒன்பது வயது முடிந்தபொழுது, அவருடைய தாய் தொற்று நோயால்  இறந்தார். 11 வயதில் ஒரு மகளும், ஒன்பது வயதில் ஒரு மகனும் இருக்கையில் தன் மனைவியை இழந்த தாமஸ் லிங்கன், சராபுஷ் எனும் விதவையை மணந்தார்; அவருக்கு ஏற்கெனவே மூன்று குழந்தைகள் இருந்தனர்.

படிப்பு

ஆப்ரகாம் பள்ளிக்கூட ஆசிரியரிடம் மொத்தமாகப் பயின்றது சுமார் 12 மாதங்கள் மட்டுமே. அத்துடன்  அமையாது, அவராகச் சொந்த அக்கறை எடுத்துப் படித்தார். அவருக்குப் புதிதாக வந்து அமைந்த தாய், அவருடைய படிப்பு முயற்சியை ஊக்குவித்தார். ஈசாபின் கதைகள், டேனியல் டிஃபோ எழுதிய ராபின்சன் குருசோ எனும் புதினம், பைபிள், அமெரிக்க நாட்டு விடுதலைப் போரின் தளபதியும் முதல் குடியரசுத் தலைவருமான ஜார்ஜ் வாஷிங்டன, மற்றும் அமெரிக்க வரலாறு ஆகியவற்றை நன்கு கற்றார். கற்றவற்றையும் பெரியவர்களின் பேச்சுகளையும் புரிந்து கொள்வதில் தீவிர ஈடுபாடு செலுத்தினார்.

தொழில்கள் பல முதலில் தந்தையுடன் இணைந்து, தச்சுத் தொழில் மற்றும் உழவுத் தொழில் ஆகியவற்றை ஆப்ரகாம் செய்தார். அவருடைய 19-ஆம் வயதில் ஒரு முறையும், 21-ஆம் வயதில் மறுமுறையும், வேளாண்மைப் பண்டங்களை மொத்தமாக விற்பனை செய்ய, நியூ ஆர்லியன்ஸ் எனும் பெரிய நகருக்குச் செல்ல அமர்த்தப்பட்டார். மிஸ்சிஸ் சிப்பி எனும் நதியில் பெரிய படகில் பயணம் செய்து புதிய அனுபவங்கள் பெற்றார்; நகர மக்களின் நாகரிகத்தைக் கண்டார்.

இரண்டாவது முறை நியூ ஆர்லியன்ஸ் சென்ற பொழுது, பொது இடங்களில் கறுப்பர்கள் அடிமை களாக விற்கப்படுவதைக் கண்டார். அப்பொழுது அவர்கள் இரக்கமற்ற கடுமையான சோதனை களுக்கு உள்ளாவதைப் பார்த்தார், மனம் கசிந்தார். அடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று எனத் தீர்மானித்தார்.

 

தம்முடைய 22-ஆம் வயதில் நியூசலேம் எனும் இடத்தில் பண்டகம் ஒன்றின் மேலாளராகப் பணியேற்றார். அங்கு ஓய்வு நேரங்களில் கணக்கு, இலக்கணம் ஆகியவற்றைக் கற்றார். ஷேக்ஸ் பியரின் நாடகங்கள், மற்றும் ராபர்ட் போன்ஸ் உடைய கவிதைகள் ஆகியவற்றை மற்றவர் உதவியுடன் ஆர்வத்துடன் படித்தார்.

அவர் வாழ்ந்த இல்லினாய்ஸ் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் குடியேறிய வெள்ளையர் களை, செவ்விந்தியர் தாக்கினார்கள். அவர் களுக்கு எதிராகப் படை திரட்டப்பட்டது. அப்படையில் மூன்று மாதம் ஆப்ரகாம் அணித் தலைவராகப் பணியாற்றினார்; சண்டை நடை பெறவில்லை எனினும் புதிய இடங்களையும் மனிதர்களையும் பார்த்துப் பட்டறிவு பெற்றார்.

பண்டகம் மூடப்பட்டதால், அஞ்சலக அதிகாரி யாக மூன்று ஆண்டுகள் பணியேற்றார்; வாரத் திற்கு ஒரு டாலர் ஊதியம்; தேவைகளை நிறைவு செய்ய அது போதவில்லை; தச்சு வேலையும், பயிர் செய் வேலையும் கூடுதலாகச் செய்து வாழ்க்கையை ஓட்டினார். கடின வேலை களுக்கு இடையில், கணக்கையும் நிலஅளவை வேலைக்குரிய பாடங்களையும் இரவு பகலாகப் படித்துத் தேர்ச்சி பெற்றார். உதவி நில அளவையாளர் ஆனார். முதன் முறையாகப் போதிய ஊதியம் பெற்றார்.

வழக்குரைஞர்

ஆப்ரகாம் லிங்கன் 6 அடி 4 அங்குலம் உயரம் (1.93 மீட்டர்). கூடியிருப்போரிடம் கலகலப்பாகப் பேசுவார்; அவர் பேச்சில் கதை களும் நகைச்சுவையும் கலந்திருக்கும்; அதை அனைவரும் விரும்புவார்கள். ஊர் மக்களுக்கு நன்கு அறிமுகமானார். இல்லினாய்ஸ் மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்குப் போட்டியிட்டார். முதலில் தோற்றார்; ஆனால் அடுத்த முறை வெற்றி பெற்றார். அப்பொழுது அவருக்கு வயது 25.

சட்டமன்ற உறுப்பினரான பின்பு சட்டம் பயின்றார், வழக்குரைஞர் தொழில் செய்யத் தொடங்கினார். நியூ சலேம் நகரில் ஆறு ஆண்டுகள் வாழ்ந்தார். பின்பு, இல்லினாய்ஸ் மாநிலத்தின் புதிய தலைநகராகிய ஸ்பிரிங்ஃ பீல்டு நகரில் தம் 28-ஆம் வயதில் குடி யேறினார். 1834 முதல் 1842 வரை தொடர்ந்து இல்லினாய்ஸ் மாநிலச் சட்டமன்ற உறுப்பி னராக இருந்தார்.

இல்லறம்

இணக்கமும் பிணக்கும் கலந்த மூன்றாண் டுக் காதலுக்குப் பின்பு, 1842 நவம்பரில், மேரி டாட் எனும் படித்த மங்கையை ஆப்ரகாம் மணந்தார். இல்லறத்தில் பிணக்குகள் இருந்தன; ஆனால் பிறர் மெச்சும் வகையில் ஒருவருக்கு ஒருவர் உண்மையாய் வாழ்ந்தனர்; நான்கு மகன்களுக்குப் பெற்றோர் ஆயினர்.

மீண்டும் அரசியல்: அதிபர்

அமெரிக்க நாட்டின் பிரதிநிதிகள் சபைக்கு 1846-இல் லிங்கன் தேர்ந்தெடுக்கப் பெற்றார். 1849 முதல் 1854 வரை அரசியலில் இருந்து விலகி இருந்தார்; வழக்கறிஞர் தொழிலை நற்பெயருடன் வெற்றிகரமாக நடத்தினார். நீக்ரோக்கள் எனப்பட்ட கருப்பின மக்களை ஏற்கனவே அடிமைகளாக வைத்திருக்கும் மாநிலங்கள் அல்லாமல், பிற மாநிலங்களுக்கும் அம்முறையை விரிவடையச் செய்ய முயன்ற னர். இதை எதிர்த்து குடியரசுக் கட்சி புதிதாக 1855-56-இல் தோன்றியது. லிங்கன் அதில் தீவிரமாக ஈடுபட்டார். 1958-இல் செனட் எனும் மேலவை உறுப்பினர்ஆவதற்குப் போட்டி யிட்டுத் தோற்றம். இருப்பினும் புதிய கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு, 1860 நவம்பரில் வெற்றி பெற்று, 1861 பிப்ரவரியில், 16-ஆவது குடியரசுத் தலைவராக (அதிபராக)ப் பதவி ஏற்றார்.

உள்நாட்டுப் போர்

அடிமை முறை அழிய வேண்டுமென்ற லிங்கன் அதிபரானவுடன், அம்முறை விரிவ டைய விரும்பிய தென் மாநிலங்கள் பிரிந்து போயின. பிரிந்து போகும் உரிமையை லிங்கன் மறுத்தார். அதனால் உள்நாட்டுப் போர் மூண்டது. முதலில் பிரிந்துபோன தென் மாநிலங்கள் வெற்றி கண்டன; பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது; அய்ந்து படைத் தலைவர் கள் மாற்றப்பட்டனர். இருப்பினும் தன் பக்கம் நியாயம் இருந்ததால், லிங்கன் உறுதியுடன் போரை நடத்தினார்.  கெட்டிஸ்பர்க் போர்க்களம் 1863-இல் திருப்புமுனையாக அமைந்தது. கூட்டரசுப் படைகள் வெற்றி பெறத் தொடங் கின. லிங்கன், இரண்டாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1865 மார்ச் 4-இல் மீண்டும் பதவி ஏற்றார். பிரிந்து போன மாநிலப் படைத் தளபதி லீ, கூட்டரசுப் படைத் தளபதி, கிராண்ட் என்பாரிடம் ஏப்ரல் 9-இல் சரண் அடைந்தார். இந்நிலையில் ஜான் வில்கிஸ் பூத் என்ற தென் மாநிலத்தவன் சட்டதால், 15 ஏப்ரல் 1865-இல், மானுட உரிமை மீட்பர் லிங்கன் உயிர் இழந்தார்.

ஆனால் போர் நடக்கும் பொழுதே அடிமை களின் விடுதலைக்கான பொது அறிவிப்பை வெளியிட்டார்; அதற்காக, அரசமைப்பு 13-ஆவது திருத்தமும் செய்தார்.

Archives

பெரியார் பிஞ்சு

2009

?பெரியார் பிஞ்சு

2008