முதலிடம் பெற்றது எப்படி
தொலைகாட்சி பார்க்கவில்லை
பிஞ்சு குமார்
இனிய பிஞ்சுகளே...
இந்த ஆண்டு 10-ஆம் வகுப்புத் தேர்வில் மாநிலத்திலேயே முதலாவதாக வெற்றி பெற்ற மாணவர் யார் தெரியுமா? எளிய
குடும்பத்தில் பிறந்தவர்; இவரது தந்தை வீதி வீதியாக சைக்கிளில் சென்று மீன் வியாபாரம் செய்பவர்; கன்னியாகுமரி மாவட்டம், குமாரபுரம் பேரூராட்சி யில் வசிக்கும் பயஸ் என்பவரின் மகன் ஜோஸ் ரிஜன் எனும் மாணவர்தான் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். 500-க்கு 496 மதிப்பெண் பெற்றுள்ள மாணவர் ஜோஸ் ரிஜன் சொல்வ தைக் கேளுங்கள்:
எனது குடும்ப நிலையை உணர்ந்து நான் விடா முயற்சியுடன் படித்தேன். தனியே டியூசன் எதுக்கும் போகவில்லை. நான் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக வீட்டில் கேபிள் டி.வி. இணைப்பை எனது பெற்றோர் துண்டித்து விட்டனர். இதனால் நான் கடந்த ஓர் ஆண்டாக தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தி விட்டேன். தினமும் இரவிலும் , அதிகாலையிலும் கண் விழித்துப் படிப்பேன் இப்படிக் கூறியுள்ள ஜோஸ் ரிஜன் +2விலும் மாநிலத்தில் முதல் இடம் பிடிப்பேன் என்கிறார். கல்பனா சாவ்லா போல எதிர்காலத்தில் ஏரோநாட்டிகல் என்ஜினீயராகி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பதே எனது இலட்சியம் என்கிறார் ஜோஸ் ரிஜன்.
ஒரு காலத்தில் நமக்கெல்லாம் படிப்பு வராது என்று ஒதுக்கி வைக்கப்பட்டு, வாய்ப்பு மறுக்கப் பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தின் இன்றைய தலைமுறை இப்போது மாநிலத்திலேயே முதல் இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளனர். விடாமுயற்சியும், வென்றே தீருவோம் எனும் இலக்கும். கவனத்தைச் சிதறவிடாமல் கல்வி கற்பதிலேயே முழுமையான ஈடுபாடு என்று உழைத்தால் உயர்வு உறுதி என்பதை பிஞ்சுகளே நினைவில் கொள்ளுங்கள்
|