புகழ்பெற்ற மனிதர்கள் -3
திராவிடவியல் அறிஞர் கமில் ஜ்வெலபில்
- கு.வெ.கி.ஆசான்
அயல்நாட்டில் பிறந்து, தமிழுக்கும் திராவிட இயலுக்கும் தொண்டாற்றிய சிறந்த அறிஞர்களில் ஒருவர் பேராசிரியர் முனைவர், கமில் வாக்லேவ் ஜ்வெலபில் (KAMIL VACLAV ZVELEBIL) ஆவார்.
குடும்பம்
அய்ரோப்பிய நாடான ஜெகோஸ்லொ வேகியாவின் ப்ரேக் எனும் தலைநகரில், 1927 நவம்பர் 17இல் பிறந்தார், கமில் ஜ்வெலபில். 82 ஆண்டு அகவையில், 2009 ஜனவரி 17இல், ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் மறைந்தார். முனைவர் நீனா, அவருடைய இணையர். அவர்களுக்கு மக்கள் செல்வம் மூன்று பேர்.
படிப்பு
ப்ரேக் (PRAGUE) நகரில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் 1946 முதல் 1952 வரை ஆறு ஆண்டுகள் பயின்றார். இந்திய இயல், ஆங்கில மொழி, இலக்கியம், மற்றும் மெய்யறிவு (தத்துவம்) ஆகியவற்றில் முதுநிலைப்பட்டம் பெற்றார். அத்துடன், சமஸ் கிருதம், ஆங்கிலம், மெய் யறிவு ஆகியவற்றில் ஆய்வு செய்து, முனைவர் Ph.D.) பட்டத்தை 1952இல், தம் 25ஆம் அகவையில் பெற்றார்.
அதை அடுத்து - தமிழ் நாட்டிற்கு வந்து, தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் கமில் ஜ்வெலபில் நன்கு கற்றார். மு.வரதராசனார், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் முதலிய அறிஞர்களிடம் பயின்றார். திராவிட மொழி அறிவியலை ஆய்ந்து, 1959இல், தம் இரண்டாவது முனைவர் பட்டத்தைப் பெற்றார்.
எழுத்தாளர்
திராவிட மொழிகளின் ஆய்வுக்கு அடித்தளம் அமைத்தவர் கால்டுவெல். அவரையடுத்து அத்துறையை முன்னெடுத்துச் சென்ற அயல்நாட்டவர்கள் எமனோ, பர்ரோ (BURROW) எனும் பேராசிரியர்கள். எமனோவிடம் பயிலும் வாய்ப்பை ஜ்வெலபில் பெற்றார். தம்முடைய முன்னோடிகளை அடியொற்றி, திராவிட இயலை மேம்படுத்தினார். அத்துடன் தமிழ் இலக்கியம், மரபு, பண்பாடு ஆகியவற்றையும் நன்கு அறிந்தவரானார்; தம் எழுத்தின் மூலம் அவற்றை உலகு அறியப் பரப்பினார். நூல்கள், கட்டுரைகள், திறனாய்வுகள், சிறந்த மொழிபெயர்ப்புகள் ஆகியன அவருடைய எழுத்துகளில் அடங்கும்: தமிழ் இலக்கியப் பேரகராதி - LEXICON OF TAMIL LITERATURE (1994), திராவிட மொழியியல்: ஓர் அறிமுகம் - DRAVIDIAN LINGUISTICS: AN INTRODUCTION (1995). தமிழ் இலக்கிய வரலாற்றுக்குத் துணையான ஆய்வுகள் - COMPANION STUDIES TO THE HISTORY OF TAMIL LITERATURE (1992), தமிழ் செம்மொழி யாப்பிலக்கணம் - (CLASSICAL TAMIL PROSODY (1989), நீலமலை இருளர்கள் THE IRULAS OF THE BLUE MOUNTAINS (1988), தென்னிந்தியத் தமிழ் இலக்கியத்தில் முருகனின் புன்னகை SMILE OF MURUGAN ON TAMIL LITERATURE OF SOUTH INDIA (1973), திராவிட மொழி ஒலிப்பியல் ஒப்பீடு - COMPARITIVE DRAVIDIAN PHONOLOGY, சித்தர்கள் தேடிய இறவாமை - SIDDHA QUEST FOR IMMORTALITY (1996), சிந்து (நாகரிகத்தின்) காலம்: எழுத்து முறை INDUS AGE: THE WRITING SYSTEM (1996) ஆகியன அவர் எழுதிய நூல்களில் அடங்கும்.
அவருடைய துறைகள்
அய்ம்பதாண்டுகள் திராவிட மொழி இயலை ஜ்வெலபில் ஆய்ந்தவர் ஆவார். மனித இன வரலாற்றில் திராவிடப் பண்பாடு மிகத் தொன்மையான ஒன்று என்பதை நிறுவியுள்ளார். உலக நாகரிகத்தின் உயர்ந்த, அழியாத கருவூலங்களில் ஒன்றாகத் தமிழர்களின் பண்பாடு திகழ்கிறது என்பதில் அய்யமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உலகிலும் உள்ள மக்கள், தமிழரின் இலக்கியத்தையும் நாகரிகத்தையும் அறிய இவருடைய நூல்கள் பெருமளவு உதவியிருக்கின்றன.
பிற துறைகளிலும் ஜ்வெலபில் தம் அறிவைச் செலுத்தியுள்ளார். திராவிட மொழியில் ஒப்பீடு, நீலமலை மக்களின் மொழியியல், திராவிடரின் வேளாண்மைப் பரவல், தென்னிந்தியப் பண்பாடு மற்றும் சமய வரலாறு, இந்து மதம், சமஸ்கிருதச் சடங்கு நூல்கள், தமிழ் செய்யுளியல் (யாப்பியல்), சமஸ்கிருத மற்றும் தமிழ் இலக்கிய ஒப்பாய்வு ஆகியவை குறித்து எழுதியுள்ளார்.
அவருடைய ஆழ்ந்து பரந்த அறிவு, ஜ்வெலபில் அவர்களைப் பயன்மிக்க எழுத் தாளர் ஆக்கியது. அதே அறிவு அவரை நல்ல, இனிமையும் தெளிவும் மிக்க சிறந்த பேராசிரியராகவும் திகழச் செய்தது. ஜெக் கோஸ்லவாக் அறிவியல் கழகத்தின் கீழைநாடுகள் நிறுவனத்தில் 1952 முதல், தமிழ் மற்றும் திராவிட இணைப்பேராசிரியராக இருந்தார். இதற்கு இடையில், அமெரிக்க நாட்டின் சிகாகோ பல்கலைக்கழகம் (1965-66), மற்றும் ஜெர்மனியில் உள்ள ஹைடெல்பெர்க் பல் கலைக்கழகம் (1967-68) ஆகியவற்றில் வருகைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1968இல் சிகாகோ பல்கலையின் திராவிட ஆய்வுகளுக்கான இருக்கையின் தலைவராக இருந்தார். பின்பு 1992இல் ஓய்வு பெறும்வரை, உட்ரெஹ்ட் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியல் பேராசிரியராகப் பணியாற்றினார். பாரிசில் உள்ள ஃபிரான்சு கல்லூரி, மற்றும் ஹைடல்பெர்க் பல்கலையின் சுடசைன் நிறுவனம் ஆகியவற்றில் வருகைப் பேரா சிரியராகவும், லைடு பல்கலையில் மூத்த ஆய்வு அறிஞராகவும் திகழ்ந்தார்.
தமிழின் இனிமை, தமிழரின் உயர்மரபு ஆகியவற்றை எண்ணித் தம்மை அவர் செவ்வியன் எனவும் அழைத்துக் கொண்டார். |