நாத்திக இராமன் கதைகள் - புத்தி வந்திருக்காது!
தனது உறவினர்கள் நண்பர்களோடு சுற்றுலா சென்ற நாத்திக இராமன் தன்னுடன் வந்தவர்களெல்லாம் பிரசித்தி பெற்ற அந்தக் கோவிலுக்குள் சென்று விட்டதால், கோவிலுக்கு வெளியே கடை வீதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
நெடுநேரம் சென்றபின், ராமனுடன் வந்தவர் களெல்லாம் யாரையோ திட்டிக் கொண்டு கோவிலிலிருந்து வெளியே வந்து கொண்டிருந் தார்கள். நடந்தது இதுதான். கூட்டத்தினர் கோயிலுக்குள் சென்றிருந்தபோது ஒரு குழந்தை சிறுநீர் கழித்து விட்டதாம். அதைக் கண்ட கோயில் பணியாளர்கள் உடனே அந்தக் குழந்தையை தாங்கள் தூக்கி வைத்துக் கொண்டு, ஒரு பெரும் தொகை அபராதம் கட்டினால் தான் குழந்தையைத் தருவோம் என்று கூறியிருக்கின்றார்கள்.
என்னடா இது பகல் கொள்ளையாக இருக்கிறதே, சிறுகுழந்தை தெரியாமல் செய்த சாதாரண நிகழ்ச்சிக்கு இவ்வளவு பணம் அபராதமா என்று கேட்டதற்கு கோவில் பணியாளர்கள் அருகிலிருந்த அறிவிப்புப் பலகையைக் காட்டி, கோயிலை அசுத்தப்படுத்தினால் அபராதம் கட்டித்தான் ஆக வேண்டும் என வலியுறுத்தி சொல்லியிருக்கிறார்கள்.
அவ்வளவு தொகை யினை குழந்தையின் பெற்றோர் வைத்திருக்க வில்லை. அதனால் அவர்களுடன் வந்த அனைவரும் தங்களிடமிருந்த தொகையைச் சேர்த்து மொத்தமாக அபராதத்தினை கட்டியபின்பே குழந்தை திரும்பக் கிடைத்திருக்கிறது.
ஏன் இப்படி அதிகமான தொகை அபராதமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது என்று கேட்டதற்கு சிறுபிள்ளை என்றாலும், புனிதமான (?) கோயிலுக்குள் சிறுநீர் கழித்து விட்டால் அந்த இடத்தை தேனும், நெய்யும் விட்டுக் கழுவினால்தான் தீட்டு கழியும் என்றும், அதற்காகும் செலவினம் தான் அபராதமாகப் பெறப்படுகிறது என்றும் விளக்கியிருக்கிறார்கள், அங்கிருந்தவர்கள்.
இவ்வாறு குழந்தையின் பெற்றோர் மட்டு மின்றி அவர்களுடன் சென்ற எல்லோரும் தங்களிடமிருந்த பணத்தைக் கொடுத்து ஏமாந்து வந்ததால் தான் கூட்டத்தினர் கோவில் நிருவாகத்தைத் திட்டியபடி கோவிலுக் குள்ளிருந்து வந்திருக்கின்றார்கள்.
அப்போது வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நாத்திக இராமனிடம் நடந்த தைக் கூறியதுடன், பேசாமல் குழந்தையை இராமனிடம் விட்டுச் சென்றிருக்கலாம்; பிரச்சினையே வந்திருக்காது என்று பொது வாகச் சொன்னார்.
அதைக்கேட்ட நாத்திக இராமன், என்னிடம் விட்டுச் சென்றிருந்தால் உங்களுக்குப் புத்தி வந்திருக்காது என்றார், சிரித்துக் கொண்டே.
- ச.கந்தசாமி
அருப்புக்கோட்டை |