மனித இன வரலாறு-49: தென் அமெரிக்கா - மு.நீ.சிவராசன்
கி.பி.1500-களில் அய்ரோப்பியர்கள் தென் அமெரிக்கா விற்குள் வருவதற்கு முன்னர், ஆண்டீஸ் மலைப்பகுதியில் பல்வேறு நாகரிகங்கள் செழித்து வளர்ந்தன. அவற்றில் மிகச் சிறப்பானது இன்கா (INCAS) நாகரிகமே, மற்றும் பல்வேறு இனங்களும் ஆண்டீஸ் மலைப் பகுதியில் பல்வேறு பகுதிகளைத் தங்கள் ஆளுகையின் கீழ்வைத்திருந்தன.
ஆண்டீஸ் மலைத்தொடருக்குக் கிழக்குப் பகுதியில் பரந்து விரிந்த ஆமெசான் காடுகளும் இடையே ஆமெசான் ஆறும் உள்ளன. இவ்வாறு உலகிலேயே மிகப் பெரியது. சுமார் 4,000 மைல் நீளமுடையது. சில இடங்களில் 200 அடி ஆழம் உள்ளது. வடிநிலத்தின் பரப்பிலும் உலகிற்பெரிய ஆறு இதுவே. இதில் விநாடிக்கு 35 லட்சம் கன அடி நீர் பாய்கிறது. மானாஸ் நகரின் கீழ்பாகத்தில் இதன் அகலம் 30 மைல் ஆகும். முகத்துவாரத்தில் இதன் ஆழம் காரணமாக 2,300 மைல் தொலைவில் உள்ளே இருக்கும் இக்விடாஸ் நகரம் வரை சமுத்திரக் கப்பல்கள் செல்லலாம்.
ஆண்டீஸ் பகுதியில் இருவேறு பேரரசுகள் இருந்தன. பெருவின் வடக்குக் கடற்கரையில் சிமு (CHIMU) பேரரசு சான் சான் (CHAN CHAN)அய்த் தலைநகராகக் கொண்டு விளங் கியது. கி.பி.1470இல் இன்கா மக்கள் சிமு இனத்தவரை வெற்றி கொண்டனர். இன்கா பேரரசின் தலைநகரம் கூஸ்கோ (CUZCO) ஆகும்.
தென்அமெரிக்காவிலிருந்து ஆதிக்குடிகளின் நாகரிகங்களுள் சிறந்தது. இன்கா நாகரிகமாகும். இந்நாகரிகம் பொலிவியா, பெரு, ஆர்ஜென்டினா, சிலி முதலிய பகுதிகளில் செழித்து வளர்ந்தது. கி.பி.12ஆம் நூற்றாண்டின் இறுதியில் இன்கா மக்க எல்லாத்துறைகளிலும் மேம்பாடு அடைந் தனர். அனைத்து மக்களும் விவசாயம் முதல் மண்பாண்டம் செய்தல் போன்ற கைத் தொழில்கள் வரை அறிந்திருந்தனர். ஆண்டீஸ் மலைப்பகுதியில் நல்ல சாலைகளைக் குறுக்கு நெடுக்குமாக அமைத்தனர். தேவையான இடங்களில் தொங்கு பாலங்களைக் கட்டிப் பயன்படுத்தினர். அவர்களின் மன்னர் சபா இன்கா (SAPA INCA) என்று அழைக்கப்பட்டார். |