அன்னை மணியம்மையார் பிறந்த நாள் மார்ச் 10

நினைவு நாள் மார்ச் 16 - தொண்டறம் புரிந்த அன்னை

இனிய பிஞ்சுகளே,

உலக வரலாற்றில் பல துறைகளில் பணியாற்றிய பெண்களைப் பற்றிப் படித்திருப்பீர்கள். அதிலும் முதல் பெண்கள் என்கிற வரிசையும் உண்டு. அப்படி ஓர் முதல் பெண்தான் நமது அம்மா, அன்னை மணியம்மையார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் பிஞ்சுகளே, நாத்திக இயக்கத்திற்குத் தலைமை ஏற்ற உலகின் முதல் பெண்மணி அன்னை மணியம்மையார் அவர்கள் ஆவார்கள்.

இந்த மார்ச்சுத் திங்களில் தான் அன்னையார் பிறந்தார்; மறைந்ததும் இதே மார்ச்சுத் திங்கள்தான் 1917-ல் மார்ச் 10-ஆம் நாள் வேலூரில் பிறந்த மணியம்மையார், 1978-ஆம் ஆண்டு மார்ச் 16-ஆம் நாள் காலமானார்.

பெரியாரின் சுயமரியாதை இயக்கக் கருத்து களால் ஈர்க்கப்பட்டு 1943-ஆம்ஆண்டு முதல் பெரியாருடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த மணியம்மையார், தமிழ்ப் புலவர் படிப்பு படித்தவர். பெரியாருக்குத் தொண்டு செய்வது, அவரது உடல் நலனைக் கவனித்துக் கொள்வது என முழுமையாக தன்னை ஒப்படைத்துக் கொண்ட மணியம்மையாரை, அம்மா.. அம்மா... என்றுதான் பெரியார் அழைப்பாராம். ஒரு போதும் மணியம்மை எனப் பெயர் சொல்லி அழைத்ததில்லை என்று அன்னையார் எழுதியுள்ளார்.

இந்த உயிர் இந்த வயதிலும் சாகாமல் இருக்கின்றது என்றால், இந்த அம்மாவால்தான் என்று மணியம்மையாரைப்பற்றி, தந்தை பெரியாரே தமது 85-ஆம் வயதில் குறிப்பிட்டுள்ளார்.

அறிஞர் அண்ணா அவர்கள், அன்னை மணியம்மையார் பற்றிக் கூறும்போது, அய்யா அவர்களிடம் நான் வந்து சேரும்போது, இப்போது எனக்கு என்ன வயதோ, அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு. இப்பொழுது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ, அதைவிட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன. அப்படியிருந்த அய்யாவை, கடந்த 30 ஆண்டுகளாகக் கட்டிக் காத்து அவரை நோயின்றி உடல் நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை மணியம்மையாரையே சேரும் என்று குறிப் பிட்டுள்ளார்.

வரலாற்றில் அன்னை மணியம்மையாரைப் போன்றவர்களை பார்ப்பது அரிது. பெண்கள் பொது வாழ்வுக்கு வருவதற்கு அச்சப்பட்ட காலத்தில் பெரியாரின் கொள்கையைப் பரப்ப வந்து அவருக்கே தொண்டு புரிந்த மணியம்மையார் வீராங்கனை தானே.

ஒரு தொண்டராக தன் வாழ்வைத் தொடங்கி, பல முறை சிறை சென்ற போராளியாக வளர்ந்து, தனது தலைவருக்கே தொண்டு செய்து, அவருக்குத் துணையாக இருந்து அவரைப் பாதுகாத்து, அத்தலைவருக்குப்பின் அவரது கொள்கையை வளர்த்தெடுக்கும் இயக்கத்தின் தலைவராக உயர்ந்து, தனக்குப்பின் இயக்கத்திற்கு தகுதி வாய்ந்த ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து அடையாளம் கூட்டிவிட்டு வரலாற்றில் இடம் பெற்ற அந்த அன்னையின் பணியைத் தொண்டறம் என்றுதானே சொல்ல வேண்டும்.

- பிஞ்சு மாமா

Archives

பெரியார் பிஞ்சு

2009

?பெரியார் பிஞ்சு

2008