பசங்க மற்றும் பெற்றோரும் பார்க்க வேண்டிய படம்!

என்ன பசங்களா! எல்லாரும் கும்பலா எங்க போயிட்டு வர்றீங்க? என்று தனது விசாரணையைத் தொடங்கினார் கிருஷ்ணசாமி மாமா.
பசங்க படத்துக்கு போயிட்டு வர்றோம் என்றான் புகழேந்தி. அதுதான் தெரியுதே! பசங்கள்லாம் படத்துக்கு போயிட்டு வர்றீங்க... என்ன படத்துக்கு போயிட்டு வர்றீங்கன்னு கேட்டேன்.

அதைத்தான் நாங்களும் சொல்றோம்! பசங்க படத்துக்கு போயிட்டு வர்றோம்!
அடப்பாவிகளா! எல்லாரும் வடிவேலு மாதிரியே பேச ஆரம்பிச்சிட்டீங்களா? தெளிவா சொல்லுங்கடா... என்ன படத்து... ஓஹோ... பசங்க படத்துக்கு போயிட்டு வர்றீங்களா?
அதைத்தான் நாங்களும் சொன்னோம். பசங்க படத்துக்கு போயிட்டு வர்றோம்னு
திரும்பவும் ஆரம்பிக்காதீங்கப்பா... தாங்காது. என்ன... படம் நல்லாயிருக்கா? என்று பயப்படுவது போல நடித்தார் கி.மூ.
நல்லா இருக்கு.. ரொம்ப நல்லா இருக்கு என்றனர் அனைவரும்.
அது சரி... விடுமுறை விட்டாச்சு... உங்களை மாதிரி வாண்டு களுக்காகத்தான் படம் எடுத்து அதையும் விடுமுறைக் காலத்திலேயே வெளியிட் டிருக்காங்க... உங்களுக்கு பிடிக்காம இருக்குமா?
என்ன படம் மாயாஜாலக் கதை மாதிரியா? மந்திரவாதிக் கதையா?
ஏன் குழந்தைங்க பார்க்கிற படம்னா மாயாஜாலக் கதை, மந்திரவாதிக் கதை தான் பார்ப்போமா? என்று பிஞ்சுகள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே பின்னால் தனது இணையருடன் வந்தார் யாழினியன்.
ஆமாங்க... அப்படித்தான் நம்ம தமிழ் சினிமாக் காரங்களும், இந்திய சினிமாக்காரங்களும் காலங்காலமா சொல்லிக்கிட்டு வர்றாங்க. விடுமுறைக்காலம்னா ஏதோ அறிவுக்கு ஒத்துவராத ஒரு மாயாஜாலக் கதையை படமாக்கி காசு பார்க்கிறாங்க. நாமளும் அதுதான் குழந்தைகள் படம்னு நினைச்சுக்கிட்டிருக்கோம் என்றார் யாழினியன்.
ஆமா.. எனக்குத் தெரிஞ்சு சின்னப்பிள்ளைல நான் பார்த்த மோகினி படங்கள்ல இருந்து இப்போ வந்த 3டி படம் வரைக்கும் அப்படித்தான் என்றார் கிருஷ்ண மூர்த்தி.
ஆனா... வெளி நாடுகளில் குழந்தைகளுக்குன்னு அறிவியல் கருத்துகளோட படம் வருது... அங்கேயும் மாயாஜாலக் கதைகள் எல்லாம் உண்டு. ஆனா அதையும் தாண்டி, குழந்தைகளின் மனநிலையை ஒத்த படங்கள், அவர்களது விளையாட்டுகள், இயல்புகள் இதையெல்லாம் வச்சு நல்ல நகைச்சுவைப் படங்கள், மனதை உருக்கும் உண்மைக் கதைகள்னு விதம் விதமான படங்கள் வருது என்று எடுத்துரைத்தார் யாழினியன்.
ஆமாப்பா... நம்ம கூட கூந ஆசைசடிச-னு ஒரு படம் பார்த்தோமில்ல என்றான் புகழ்.
ஆமா. அது ஈரானியப் படம்தானே! என்று கேட்டபடி புகழின் அம்மாவான முகிலும் உரையாடலில் கலந்துகொண்டார். வேலைக்குப் போய் திரும்புற வழியில அம்மாவைத் தொலைச்சிடுற குழந்தை ஒன்று, பாதி படப்பிடிப்பு நடந்துக்கிட்டிருக்கும் போதே நடிக்க மறுத்துட்டு, இயல்பா தன்னுடைய அம்மாவைத்தேடிப் போறேன்னு ஆரம்பிச்சிடும்.. அதையே அப்படியே படமாக்கியிருப்பாரு அந்த இயக்குநர். அடடா.. ஈரானியப் படங்கள் பார்க்கிறதே ஒரு தனி சுகம்தான் என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இது மட்டுமில்ல.. சின்னக் குழந்தைகள் சந்திக்கிற பிரச்சினைகள்-ல இருந்து, அவங்க எப்படி சமாளிக் கிறாங்க.. எவ்வளவு அழகா அதை செஞ்சு முடிக்கிறாங் கங்றதையெல்லாம் ரொம்ப ரசனையோட காட்டுவாங்க என்ற யாழினியன், தமிழ்ல அந்த மாதிரி முயற்சிகள்லாம் ரொம்பக் குறைவுங்க... ஒன்னு விட்டலாச்சாரியா வேலை காட்டுவாங்க... இல்லைன்னா இயல்பை மீறிப் பேசுற குழந்தைகளாகக் காட்டுவாங்க. அதுதான் குழந்தைகள் படம்னு நாமளும் காண்பிச்சுக்கிட்டிருந்தோம்.
ஆமா சார்! நீங்களுமா படத்துக்கு போயிட்டு வர்றீங்க?என்று கேட்டார் கிருஷ்ணமூர்த்தி
ம்.. நம்ம பிள்ளைங்களுக்கும் விடுமுறை. ஊரிலிருந்து தம்பி, தங்கை பிள்ளைங்களும் வந்திருக் காங்க. சரி, நல்ல படமா ஒன்னு போயிட்டு வருவோ மேன்னு தான் போய்ட்டு வர்றோம் கிருஷ்ணமூர்த்திக்கு பதில் சொன்னார் யாழ்.
படம் நல்லாயிருக்கா சார்? குழந்தைகள் பார்க்கிற படமா? என்று விசாரித்தவருக்கு,
பெத்தவங்களும் அவசியம் பார்க்கணும். சின்ன வயசில நம்ம எப்படி இருந்தோம்ங்கிற பழைய நினைப் பெல்லாம் அப்போதான் வரும். அப்பத்தான் பிள்ளைங் களோட சேட்டை எது, குறும்பு எது, தப்பு எதுன்னு நம்மால புரிஞ்சுக்க முடியும். என்று படத்தின் முக்கியத்துவத்தை சொன்னார் யாழ்.
எங்க சார், நம்ம காலத்தில இருந்த மாதிரியா இப்ப பிள்ளைங்க விளையாடுறாங்க... சந்தோசத்தை அனுபவிக்கிறாங்க. எல்லாம் வீடியோ கேம், கம்பியூட்டர்னு முடங்கி போயிடுறாங்க. அவங்க உலகமே வேற மாதிரி இருக்கு என்று அங்கலாய்த்துக் கொண்டார் கிருஷ்ணமூர்த்தி.
நீங்க சொல்றது உண்மைதான். ஆனா அவங்க உலகத்தில பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை, இப்போ கொஞ்சம் நவீனமாகியிருக்கு.. இன்னும் அந்த குழந்தை மனநிலையில் ஒன்னும் மாற்றம் இல்லை.
இந்தப் படத்தில அந்த மாதிரி குழந்தைகளின் இயல்பான போட்டி, பொறாமையா மாறி அதனால் ஏற்படுற விளைவுகள், அதுக்காக வெறுப்பை வளர்த்துகிறது, விளையாட்டுத் தனமான சண்டைகள், அதற்காக அவர்கள் போடும் திட்டங்கள்... இப்படி எல்லாத்தையும் ரொம்ப இயல்பா காண்பிச்சிருக்காங்க. அதுக்காக மட்டுமில்லை... பெத்தவங்களும் ஆசிரியர்களும் பார்க் கிறதுக்கும் இதில விசயம் இருக்கு
அப்படியா?
வீட்டில் நடக்குற அம்மா, அப்பா சண்டைகள்னால பிள்ளைங்க எவ்வளவுதூரம் பாதிக்கப்படுவாங்கன்னு அறிவுரையா இல்லாம, ரொம்ப இயல்பா சொல்லி யிருக்காங்க. புலியைப்பார்த்து பூனை சூடு போட்டுக்கிட்ட மாதிரி இல்லாம, மற்றவர் களோட வளர்ச்சிக்கு இணையா நாம வளருணும்னா எவ்வளவு உழைக்கணும். அதுக்கு குடும்பத்தோட உதவி எப்படி இருக்கணும். இந்த விசயங்கள் எல்லாம் வாழ்ந்து கத்துக்க வேண்டியது. அதை எல்லாம் ரொம்ப அழகா சொல்லியிருக்காரு இயக்குநர் என்று இயக்குநரைப் பாராட்டினார் யாழ்.
இதெல்லாம் இருந்தா பிள்ளைங்களுக்கு பிடிக்காதே என்று சந்தேகத்தைக் கிளப்பினார் கிருஷ்ணசாமி.
அப்படியில்லீங்க.. பசங்களோட பார்வையில இருந்தே இந்த பிரச்சினைகள் தொடங்குறதினால, அவங்களும் இதை ஏத்துக்கிறாங்க... ஜீவா, அன்புக் கரசன், அப்பத்தா, அப்புறம் ஜீவாவோட நண்பர்கள், அன்புக்கரசனுக்கு ஆதரவு தர்ற ஜீவாவோட மாமா பொண்ணு, அன்புக்கரசனோட தங்கை, குறிப்பா கடைக்குட்டி சேட்டை இப்படி எல்லா குழந்தைகளும் அருமையா பண்ணியிருக்காங்க என்று பேசிக் கொண்டு சென்ற யாழினியனுடன் இணைந்து கொண்ட முகில், சின்னப்புள்ளைங்க கிட்ட இருக்கிற மூட நம்பிக்கைகள் பற்றியும் வருது.. காசு வெட்டி போடுறது. கருநாக்கு உள்ளவன் சொன்னா பலிக்கும்னு நம்புறதுன்னு அதுக்காக பசங்க அலட்டிக்கிறது. இப்படி எல்லாம் நம்ம அந்தக் காலத்தில நம்பிக்கிட்டிருந்தோம்னு நினைச்சா நமக்கே வெட்கமா இருக்கு என்றார்.
அது மட்டுமில்லாம, படத்தில மிக முக்கியமான ஓன்றிருக்குங்க... பிள்ளைங்களை ஊக்கப்படுத்தினா அவங்க எவ்வளவு நல்லா வருவாங்கங்கறதுக்கு அன்புக்கரசன் கதா பாத்திரமே நல்ல எடுத்துக்காட்டு.. சின்னப் பிள்ளையாயிருக்கும்போதே கைதட்டி ஊக்கப் படுத்தி, அதுவே அவனோட வளர்ச்சிக்கு தூண்டுகோலா அமையுது. அப்படி ஊக்கப்படுத்தினா எல்லோருக்கும் மகிழ்ச்சி தானேன்னு அன்பு அவங்க ஆசிரியர்ட்ட சொல்லும்போது உன்னைப்பார்த்து நான் கத்துக்கி றேன்னு அவர் அதை எடுத்துக்கிறது எல்லாமே, மனித மனம் எப்படிப்பட்டது? குழந்தைகள் எப்படிப்பட்டவர் கள்?னு நமக்கு சொல்லுது
அடடே என்று வியப்பைக் காட்டினார் கிருஷ்ணமூர்த்தி.
அது மட்டுமில்ல... கடைசியா.. எல்லா மதக் கடவுள்கிட்டயும் எல்லாரும் வேண்டியும் பிழைக்காத பையனுக்கு, இந்த ஊக்கமே எப்படி உயிர் கொடுக்கு துங்கிறதும் முக்கியமா கவனிக்க வேண்டிய விசயம்...
அப்புறம் முடிவு என்ன சார்... என்று ஆர்வமானார் கிருஷ்ணசாமி.
எல்லாத்தையும் சொல்லிட்டா எப்படி... நீங்களும் உங்க பிள்ளைங்களைக் கூட்டிட்டு போய் பாருங்க.. என்னை மாதிரியே நல்ல மகிழ்ச்சி கிடைக்கும்...
ஆமா.. சார்..! நான் போய் கண்டிப்பா பார்க்கிறேன், நீங்களும் மறந்திடாம, இந்த குழந்தைகள் படங்கள்ல்லாம் சொன்னீங்கள்ல... அதெல்லாம் இருந்தா கொடுங்க... நல்ல படங்களை பிள்ளைங்களுக்கு அறிமுகப்படுத்து வோம். என்று மகிழ்வுடன் வீடு நோக்கிக் கிளம்பினார் கிருஷ்ணசாமி..
யாழினியனும், அவர் வீட்டுக் குழந்தைகளும், நாளைக்கு பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத் திற்கு போகப் போவதைப் பற்றிய பேச்சோடு வீட்டுக்கு சென்றார்கள்.

-பிஞ்சண்ணா

Archives

பெரியார் பிஞ்சு

2009

?பெரியார் பிஞ்சு

2008