சின்னக்கதை -
ஒரு சித்தெறும்பின் மறைவு -

கி.ராஜநாராயணன்

ஒரு குழிநரியும் சித்தெறும்பும் ரொம்ப சினேகிதமாய் இருந்தன. ஒருத்தருக்குமேல் ஒருத்தர் அவ்வளவு பிரியம். இரைதேடும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் அவைகள் கதைகள் சொல்லிக் கொள்ளும். பாட்டுகள் பாடும். ஓடிப்பிடித்து விளையாடும்.
சித்தெறும்புதான் நல்ல நல்ல கதைகள் சொல்லும். குழிநரிக்கு கதைகேட்க அப்படி ஒரு பிரியம். சித்தெறும்பைப் பார்க்காமல் குழிநரிக்கு ஒருநாள்கூட இருக்க முடியாது.
ஒருநாள், சித்தெறும்பக் காணோம்! குழிநரி காத்திருந்து காத்திருந்து பார்த்தது. நேரம் ஆக ஆக அதால் தாங்க முடியலை. சித்தெறும் பைப் பார்க்கத் தேடிப் போனது.
போய்ப் பார்த்தால்.. சித்தெறும்பு நசுங்கிச் செத்துக் கிடந்தது. அதன் தலையில் யாரோ தெரியாமல் உலக்கையை வைத்து விட்டார் கள். உரலடியில் இரைதேடிப் போன இடத்தில் சித்தெறும்பின் கதி இப்படி முடிந்துவிட்டது. பாவம். யாருமே பார்க்கவில்லை. அனாதையாக செத்துக்கிடந்தது. எல்லாரும் அவரவர் வேலைகளை கவனித்துக் கொண்டிருந் தார்கள். அங்கே நின்றால், குழி நரியின் தலையிலும் உரல் இடி விழலாம்.
அங்கே உட்கார்ந்து அழ நேரமில்லை. தனது நண்பனின் உடலை எடுத்துக் கொண்டுவந்து தகனம் செய்துவிட்டு, ஆற்றங்கரையில் வந்து உட்கார்ந்து ஓ என்று உரத்து அழுதது.
மெதுவாக நகர்ந்து போய்க் கொண்டிருந்த ஆற்றின் காதில் இந்தக் குழிநரியின் தாங்க முடியாத அழுகைச் சத்தம் கேட்டது. சத்தத் தைக் கேட்ட ஆறு குழிநரியே, குழிநரியே ஏன் அழுரெ? என்று கேட்டது. என்னோட உயிர் நண்பன் சித்தெறும்பு இரை தேடிப் போன இடத்தில் உலக்கை இடியால் உடல் நசுங்கி இறந்து போனான். அவன் பிரிவைத் தாங்க முடியலை என்னால். என்ன செய்வேன், அய்யோ! என்று சொல்லி அழுதது.
குழிநரியின் துக்கத்தைக் கேட்டதும் ஆறு கலங்கி விட்டது. அந்த ஆற்றுத் தண்ணீரைக் குடிக்க வழக்கமாக வந்த கோயில் யானை, ஆற்றுத் தண்ணீர் கலங்கி இருப்பதைப் பார்த்து, ஆறே, ஆறே! ஏன் கலங்கியிருக்க? என்று கேட்டது. ஆறு சொன்னது,
ஆனையே, ஆனையே! ஒனக்குத் தெரியாதா -
குழிநரியின் உயிர் நண்பன் சித்தெறும்பு
இரைதேடிப் போன இடத்தில்
உலக்கையால் நசுங்கிச் செத்துப் போனதுச் குழிநரியின் கதறல் என்னால் தாங்கிக் கொள்ள
முடியலை; நானும் கலங்கிவிட்டேன்.
என்றது. இதைக்கேட்ட யானையாலும் துக்கத்தைத் தாங்க முடியாமல் அதன் ஒரு தந்தத்தை ஒடித்துக் கொண்டது.
கண்ணீர் வடிய அழுதுகொண்டு வரும் யானையைப் பார்த்த ஆலமரம்.
ஆனையே, ஆனையே! ஏன் கண்ணீர் விடுற? உன்னுடைய ஒரு பக்கத்துத் தந்தம் என்ன ஆச்சி? என்று கேட்டது யானை சொன்னது:
ஆலமரமே ஆலமரமே! ஒனக்குத் தெரியாதா?
குழிநரியின் உயிர்நண்பன்
உலக்கை இடிபட்டுச் சாக
குழிநரி கதறி அழ
அதைக்கேட்ட ஆறும் கலங்க
அதைக்கேட்ட நானும் துக்கம்தாங்காமல்
எனது ஒரு தந்தத்தை ஒடித்துக் கொண்டேன்
என்றது.
அதைக் கேட்டதும் ஆலமரத்துக்கும் துக்கம் தாங்கமுடியலை. அய்யோ! இப்படியெல்லாம் நடந்து போச்சா, என்னாலும் தாங்க முடியலையே! என்று சொல்லி அந்த அதிர்ச்சி யில் தனது ஒரு பக்கத்துக்கு இலைகளை எல்லாம் உதிர்த்து விட்டது.
அந்த ஆலமரத்துல வழக்கமா ஒரு கொக்கு வந்து உக்காரும். அந்தக் கொக்கு வந்தது. ஆலமரத்தோட ஒரு பக்க இலைகளைக் காணோம்ன்னு பாத்து, என்ன விசயம் என்று கேட்க, ஆலமரம்...
கொக்கே, கொக்கே? உனக்கு விசயம் தெரியாதா
குழிநரியோட உயிர்நண்பன் தலையில்
உலக்கை விழுந்து சாக...
அந்த வருத்தம் தாங்காம குழிநரி அழ....
அதைப்பார்த்து ஆறு கலங்க...

அதைப் பாத்த யானை வருத்தம் தாங்க முடியாம தன்னோட ஒரு தந்தத்தை ஒடிச்சிக்கிட...
அதுவந்து என்னிடம் சொல்ல, நானும் அந்த
வருத்தத்துல என் ஒரு பக்க இலைகளை
உதுத்துட்டேன்
இதைக்கேட்ட கொக்குக்கு ரொம்ப வருத்தமாயிட்டது.
ஒரு சித்தெறும்புக்காக இத்தனை பேரு இத்தனை இழந்துட்டாங்களா என்று சொல்லி நானும் அந்தச் சித்தெறும்புக்காக ஏதாவது செய்யனும்னு சொல்லி தன்னோட ஒரு கண்ணெ குச்சியால குத்திக்கிட்டு, கொக்கு ஒரு கண்குருடு ஆயிட்டது.
அதுலயிருந்து அந்தக் கொக்குக்கு நேரே பார்க்க முடியாம ஒரு பக்கமா தலைய சாச்சித் தான் பாக்க முடிஞ்சிது. ஒருநா ஒரு நஞ்சை வரப்புல உக்காந்து இரை தேடிக் கிட்டுருந்தது.
நஞ்சையில உழுதுக்கிட்டிருந்த விவசாயி, கொக்கு இப்படி தலையெ சாச்சிப் பாக்கிறதை கவனிச்சி, கொக்கே கொக்கே ஏம் இப்படி தலைய சாச்சிப் பாக்கிறென்னு கேட்டான். அதுக்கு அந்தக் கொக்கு.
ஏ! மனுசா மனுசா, ஒனக்குத் தெரியாதா சங்கதி?
குழிநரியோட உயிர்நண்பன் சித்தெறும்பு தலைமேல
உலக்கை விழுந்து சாக...
நண்பன் பிரிவால குழிநரி அழ....
அதெப்பார்த்து ஆறு கலங்க....
அதைக்கேட்ட யானை துக்கம் தாங்காம
தன்னோட ஒரு தந்தத்தை ஒடிச்சிக்கிட....
அதெக்கேட்ட ஆலமரம் ஒருபக்கத்து இலைகளைஉதிர்க்க...
அதக்கேட்ட நானும் வருத்தம் தாங்க முடியாம
என்னோட ஒரு கண்ணை குச்சியால குத்திக்கிட்டு
ஒருகண் குருடு ஆயிட்டேன் என்றது.
அதைக்கேட்ட விவசாயிக்கு, அடடா இவ்வளவு நடந்திருச்சா என்று நினைச்சி அந்த வருத்தத்துல அவனால நேரா உழ முடியல. உழவு கோணல் மாணலா ஆயிட்டது.
அவனுக்கு மத்தியானக் கஞ்சி கொண்டு வந்த அவனோட சம்சாரம், அட என்ன இது, இப்படிக் கோணல் மாணலா உழுகிரே என்று கேட்டாள்.
தெரியுமா சங்கதி ஒனக்கு.
தலையில் உலக்கை விழுந்து சித்தெறும்பு சாக...
அதன் உயிர்நண்பன் அழ...
அதைக்கேட்ட ஆறு கலங்க...
யானை ஒரு தந்தத்தை ஒடித்துக் கொள்ள...
ஆலமரம் இலைஉதிர்க்க...
துக்கத்தைக் கேட்ட கொக்கு
ஒரு கண்ணைக் குத்திக்கொள்ள...
என்னையும் அது பாதித்ததால்
என் உழவு கோணலாயிட்டது என்றான்.
உடனே அந்தப் பொம்பளை, அய்யோ இவ்வளவு ஆயிட்டதா எனக்கு துக்கம் தாங்க முடியலையே, நமக்கெதுக்கு மத்தியானக் கஞ்சி என்று தலையிலிருந்த கஞ்சிக் கலயத்தை கீழே போட்டு உடைத்தாள்.
அவளுக்கும் அழுகை வந்துவிட்டது. சரி; இனிமே உழமுடியாது. பாரு மாடுகளும் கண்ணீரு விடுறதெ. வீட்டுக்குப்போவோம் என்று சொல்லி ஏரை அவிழ்த்து மாடுகளை விடுவித்தான். மாடுகளும் கண்ணீர் விட்டுக் கொண்டு இவர்களுக்கு முன்னால் வீட்டுக்கு வந்துவிட்டது.
மத்தியானம் கஞ்சிகுடிக்க பள்ளிக்கூடத்தி லிருந்து வீட்டுக்கு வந்த பையன் கஞ்சியைக் குடித்துவிட்டு, சிலேட்டையும் எடுத்துக் கொண்டு புறப்படும்போது மாடுகள் கண்ணீர் விட்டுக்கொண்டே வீட்டுக்கு வந்ததைக் கண்டான். என்ன விசயம் இந்நேரத்துக்கே வந்துட்டீக என்று கேட்டதுக்கு, மாடுகள் சொன்னது:
அய்யோ உங்களுக்கு விசயம் தெரியதா
என்னெல்லாமோ நடந்து போச்சே
என்று அத்தனையும் வரிசையாகச் சொல்ல வும் நானும் ஏதாவது செய்யனுமே என்று நினைத்த பையன் சிலேட்டை தரையில் ஓங்கி அடித்தான். சிலேட்டு சில்லுச்சில்லாய் நொறுங்கிப் போனது.
பள்ளிக்கூடத்துக்குப் போன பையனைப் பார்த்து, வாத்தியார் சிலேட்டு எங்கே என்று கேட்க, பையனும் வரிசையாக நடந்ததை யெல்லாம் சொல்லி அதனால் சிலேட்டை உடைத்துவிட்டேன் என்றான்.
இதைக்கேட்ட வாத்தியாரும் பள்ளிப் பிள்ளைகளும், அந்த சித்தெறும்புக்காக நாமும் ஏதாவது செய்யலாமே என்று யோசித்தார்கள். வாத்தியாருக்கு ஒரு நல்ல யோசனை தோன்றியது.
வாத்தியார் சொன்னார்: பிள்ளைகளே, உங்களுக்கு இன்று சித்தெறும்பு நினைவாக மதியத்துக்கு மேல் விடுமுறை என்றார்!
-நன்றி: யுரேகா புக்ஸ்

 

Archives

பெரியார் பிஞ்சு

2009

?பெரியார் பிஞ்சு

2008