நம்பிக்கையும் உண்மையும்

இளங்கண்ணன்

உலகின் குளிர்ந்த பகுதி

நம்பிக்கை: உலகிலேயே குளிர் மிகுந்த பகுதிகள் வடக்கு மற்றும் தெற்கு துருவங்கள்தான்.

உண்மை: நமது பூமியில் வேறு எந்தப் பகுதியையும் விட வெப்பம் மிகுந்த இடங்களாகவும் துருவங்களால் இருக்க இயலும். வடக்கு சைபீரியா மற்றும் மத்திய கிரீன்லாந்து பகுதிகளில் உள்ளதை விட வடதுருவத்தில் வெப்பநிலை அதிகமாக இருக்கிறது.

நிரந்தரமாக மக்கள் குடியிருக்கும் மிகவும் குளிர் நிறைந்த இடம் ஒய்மியாகோன் என்னும் சைபீரிய கிராமம்தான். 1964 ஆம் ஆண்டில் இங்கு வெப்பநிலை - 71.1 டி ஊ ( -96 டி கு) பதிவாகியுள்ளது. துருவ வட்டத்தில் இருந்து 200 மைல்களுக்கு மேல் (321.86 கி.மீ.) தெற்கே இந்த கிராமம் அமைந்துள்ளது. தென்துருவத்தில் இருந்து 900 மைல் (1,448.37 கி.மீ.) தொலைவில் உள்ள அண்டார்டிகாவின் வொஸ்டாக் என்னும் இடத்தில் மிகவும் குறைவான வெப்பநிலையாக - 87.78டி ஊ (-126டிகு ) பதிவாகியுள்ளது.


அங்கே பனி இருக்காதா?

நம்பிக்கை: வெப்பமண்டல நாடுகளில் பனி இருக்காது.

உண்மை: காட்டில் பனியைக் காணமுடியாது. ஆனால் ஒரு மலை மீது ஏறினால், பனியால் சூழப்பட்ட இன்பத்தை உங்களால் நுகர முடியும். ஆஃப்பிரிக்க நாட்டின் கிளிமாஞ்சரோ மற்றும் கென்யா மலைகளில், தென் அமெரிக்காவின் ஆண்டீஸ் மலைகளிலும், மெக்சிகோவின் இக்ஸ்டாச்சியாட் மலைகளிலும் பனி உள்ளது. இந்த மலைகளின் அடிவாரம் வெப்பம் மிகுந்த வெப்ப மண்டல நாடுகளில் அமைந்துள்ளது. ஆனால் அவற்றின் சிகரங்கள் பனிபடர்ந்த, அழகு நிறைந்த, மகிழ்ச்சி அளிப்பவையாகத் திகழ்கின்றன.


ஆலங்கட்டி மழை எது?

நம்பிக்கை: ஆலங்கட்டி மழை என்பது உறைபனி மழையே.

உண்மை: ஆலங்கட்டி மழையும், உறைபனி மழையும் ஒன்றல்ல. ஆலங்கட்டி மழை என்பது உறைந்து போன மழைத்துளிகளால் ஆனது. உறைபனி மழை என்பது நீர்த்துளிகளால் ஆனது. இந்த நீர்த்துளிகள் பூமியில் எதன் மீதாவது பட்டவுடன் பனிக்கட்டியாக மாறிவிடும். ஆலங்கட்டி மரத்தின் மீதோ, வயர்களின் மீதோ ஒட்டிக் கொள்வதில்லை. ஆனால் உறைபனித் துளி ஒட்டிக் கொள்ளும்.


மழைத்துளி எப்படி?

நம்பிக்கை:ஒரு மழைத்துளி ஓட்டை வடிவம் கொண்டது.

உண்மை: வேகம் மிகுந்த கேமிராக்களால் எடுக்கப்பட்ட படங்கள் ஒரு பெரிய மழைத்துளியை ஒரு ஓட்டையுடன் கூடிய வட்டவடிவ தின்பண்டம் போன்று காட்டும்.


புயலின் மையம்?

நம்பிக்கை: சூறாவளியின் கண்தான் புயலின் மய்யமாக இருக்கும்.

உண்மை: சூறாவளியின் கண்தான் புயலின் மய்யமாக பெரும்பாலான நேரங்களில் இருந்தாலும், இந்தக் கண் புயலினூடே பல்வேறுபட்ட திசைகளில் நகரக் கூடியது. இந்தக் கண் வறண்டதாக இருக்கக் கூடும்; ஒரு துளி மழையைக் கூட அது வெளிவிடாது. காற்று இல்லாமல், வானம் தெளிவாக இருக்கக்கூடும்; ஆனால் சூரியனோ நட்சத்திரங்களோ காணப்படா. சூறாவளியின் கண் இருக்கும் இடம்தான் அமைதியான பகுதியாகும்.

ஆனால் இந்தக் கண் நம்மை ஏமாற்றிவிடும். அமைதி நிலவுகிறது என்பதால், புயல் ஓய்ந்துவிட்டது என்று கருதிக் கொண்டு சிலர் வெளியே செல்லக் கூடும். இந்தக் கண் நமது பார்வையில் இருந்து நகர்ந்து சென்றவுடன், திடீரென, ஒரு கண நேரத்தில் பலத்த காற்றும் பெரு மழையும் தொடங்கிவிடும்.


மின்னல்

நம்பிக்கை: மின்னல் ஒரே இடத்தில் இரண்டு முறை தாக்குவதில்லை.

உண்மை: பாரிசில் உள்ள ஈஃபிள் டவரும், நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடமும் பல முறை மின்னலால் தாக்கப்பட்டுள்ளன. சில நேரங்களில் ஒரே புயலின் போது அவை திரும்பத் திரும்பத் தாக்கப்பட்டுள்ளன. உயர்ந்த கட்டடம், தனியாக இருக்கும் மரம் அல்லது உயரமாக இருக்கும் இடம் ஆகியவை மின்னல் தாக்குதலுக்கு எளிதான இலக்குகளாகின்றன.


கொலை மழை

நம்பிக்கை: ஆலங்கட்டி மழையினால் மக்கள் கொல்லப்படமாட்டார்கள்.

உண்மை: 1888 இல் இந்தியாவில் பெய்த பலத்த ஆலங்கட்டி மழையில் ஆரஞ்சு அளவிலான ஆலங்கட்டிகள் வந்து விழுந்தன. இடியுடன் கூடிய புயல்மழையின்போது வட்டவடிவம் கொண்ட பனிக்கட்டியால் ஆன ஆலங்கட்டிகள் பூமியில் வந்து விழும். அந்த மழையின்போது 200 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 1500க்கும் மேற்பட்ட ஆடு, மாடு போன்ற கால்நடைகள் இந்த ஆலங்கட்டி மழையினால் இறந்துபோயின. 1932 இல் சீனாவில் பெய்த ஆலங்கட்டி மழையில் 200 பேர் கொல்லப்பட்டனர்; ஆயிரக்கணக்கானவர்கள் காயம் அடைந்தனர். 400 கிராமங்களில் உள்ள வீடுகளையும், பயிரையும், கால்நடைகளையும் அது அழித்தது.

அமெரிக்காவில் பெய்த மழையில் விழுந்த மிகப்பெரிய அளவிலான ஆலங்கட்டியின் விட்டம் அய்ந்தரை அங்குலம் இருந்தது.

சிலநேரங்களில் ஆலங்கட்டிகளால் தாக்கப்பட்டு கீழே விழுந்துவிடும் மனிதர்கள் தொடர்ந்து விழும் ஆலங்கட்டிகளால் புதையுண்டும போகின்றனர். மிகுந்த குளிரினால், உடல் வெப்பம் இழந்து அவர்கள் இறந்து போகின்றனர்.


வெள்ளச்சேதம் உண்மையா?

நம்பிக்கை: வெள்ளப் பெருக்குகள் பெரும்பாலும் அழிவையே ஏற்படுத்துபவையாகும்.

உண்மை: பெரும்பாலான நேரங்களில் வெள்ளப்பெருக்கு என்பது அழிவைத் தருவதே. என்றாலும் சில நேரங்களில் அது நன்மையாகவும் அமைந்துவிடுகின்றது. ஈராக், சீனா, கம்போடியா, எகிப்து ஆகிய நாடுகளில் வெள்ளப் பெருக்குகள் நன்மையைத் தருபவையாகக் கருதப்படுகிறது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து நிலத்தின் மீதும் பரவி ஓடினால், அதனால் சுற்றியுள்ள நிலங்கள் வளம் பெறுகின்றன என்பதால் அங்கு விவசாயம் லாபகரமாக செய்ய இயல்கிறது. எடுத்துக்காட்டாக நைல் நதி பெருக்கெடுத்து ஓடியது ஆயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடப்படும் நிகழ்ச்சியாக அமைந்தைக் குறிப்பிடலாம். நதிக்கரையோரங்களில் பயிர்கள் செழிப்பாக வளர்ந்தன. வெள்ள நீர் எங்கு முடிகிறது என்பதை ஒருவர் எளிதாகக் கண்டு கொள்ளலாம். எப்படி என்றால் அங்கிருந்துதான் வறண்ட பாலைவனம் தொடங்குகிறது.


மணற்புயலா? மரணப்புயலா?

நம்பிக்கை: மணற்புயல்கள் மக்களை உயிருடன் புதைத்துவிடும்.

உண்மை: திரைப்படங்களிலும், கற்பனைக் கதைகளிலும் தான் இவ்வாறு நடைபெறுவதாகக் காட்டப்படுகின்றதே தவிர, உண்மையான வாழ்க்கையில் இவ்வாறு நடைபெறு வதில்லை. பனி பூமியில் படர்ந்து குவிவது போல மணல் குவிவதில்லை. மணல் நிறைந்த பாலைவகனங்களிலும் கூட இறந்து போன விலங்குகளின் உடல் மணலில் புதைந்து மறைய பல ஆண்டு காலம் ஆகும்.

மனிதரை மணல்புயல்கள் உயிரோடு புதைப்பது இல்லை என்றாலும், அவை மிகவும் ஆபத்தானவை. மக்கள் அதனால் தங்களின் வழியைத் தவறவிட்டு விட்டு, சுற்றிச் சுற்றி வந்து, தாகம் மிகுதியால் இறந்து போக நேரிடலாம்.


பாலையில் வருமா வெள்ளம்?

நம்பிக்கை: பாலைவனங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதில்லை.

உண்மை: மழை மிக அரிதாகப் பெய்யக்கூடிய பாலைவனத்தின் சில பகுதிகளில் கூட பலத்த புயல்கள் சில நேரங்களில் வீசக்கூடும். இவ்வாறு பெய்யும் பெரு மழையினால் ஏற்படும் வெள்ளப் பெருக்கு சமயங்களில் சாலைகளைப் பெயர்த்துவிட்டு, மணல் பள்ளத்தாக்கு களை குட்டைகளாக மாற்றிவிடும். அந்த நீர் ஒன்று நிலத்தடியில் இறங்கிவிடும் அல்லது வெப்பமான வறண்ட பாலைவனக் காற்றினால் ஆவியாகிவிடும்.

Bookmark and Share