ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதியை ஆண்ட மா மன்னர்கள் இருவருக்கும் உலக வரலாற்றில் பெருமைக்குரிய இடம் உண்டு. ஒருவர் மவுரிய மரபில் வந்த அசோகர்; இவர் மகதப் பேரரசை கி.மு. 273 முதல் 232 வரை நாற்பது ஆண்டு-களுக்கு மேல் ஆட்சிசெய்தவர். இரண்டாமவர், மொகலாய மரபில் வந்த ஜலாலுதீன் மொகமது அக்பர், பாபருக்குப் பேரனாகவும், ஹூமாயூனுக்கு மகனாகவும் கி.பி. 1542 நவம்பர் 23 இல் பிறந்த அக்பர், 1556 இல் அரசர் ஆனார்: சுமார் 50 ஆண்டுகள் ஆட்சிசெய்து, 1605 அக்டோபர் 27 இல் புகழ் பெற்ற பெரு மன்னராக மறைந்தார். அரச மரபில் இனக் கலப்பு மங்கோலியர் என்பது மொகலாயர் என மாறியது. மொகலாயர்களை முற்றிலும் மங்கோலிய இனத்தவர் எனக் கூறமுடியாது. மொகலாய அரசை நிறுவிய பாபரின் தாய் வழி மூதாதை, மங்கோலியரான செங்கிஸ்கான். ஆனால், தந்தை வழி மூதாதை, பர்லஸ் துருக்கியரான தைமூர். அக்பருடைய தாய் ஒரு பாரசீக (ஈரானிய) மங்கை. அவருடைய மனைவியாகிய ஒரு ரஜபுத்திர இளவரசியின் மகன் சலீம், ஜஹாங்கீர் என்ற பெயரில் அக்பருக்குப் பின்பு ஆட்சி செய்தார். ஆக, மங்கோலிய, துருக்கிய, ஈரானிய மற்றும் இந்திய இனங்களின் கலப்பாக மொகலாய அரச வம்சம் இருந்தது. உறுதிப்படுத்தினார், விரிவாக்கினார் தமது நூலக மாடிப்படியில் இடறிவிழுந்து, ஹூமாயூன் திடீரென முடிவுற்றார். தந்தையின் மறைவுச் செய்தி வந்தபொழுது அக்பர் போர்க்-களத்தில் இருந்தார்; வயது 14 நடந்து கொண்டி-ருந்தது. அவருடைய காப்பாளராக இருந்த பைராம்-கான், 1556 பிப்ரவரியில் எளிமையான முறையில் உடனடியாக முடிசூட்டு விழா நடத்தினார். பஞ்சாபில் குர்தாஸ்பூர் மாவட்டத்தில், கலனார் எனும் இடத்தில் இது நடந்தது. சிறுவனை வீழ்த்தி-விட்டு, அரசைக் கைப்பற்றப் போட்டியாளர்கள் கிளம்பினார்கள். அவர்களில் முக்கியமானவர், ஹெமு. ஆக்ராவையும் டெல்லியையும் கைப்பற்றி, பழைய விக்ரமாதித்தன் பட்டத்தைத் தனக்குச் சூடிக்-கொண்டார், ஹெமு. ஆகையால், பைராம்-கானின் முடிவின்படி அக்பர் போருக்குக் கிளம்பினார். 1556 நவம்பரில் பானிப்பட்டில் போர் நடந்தது. ஹெமு தோற்றார், கொல்லப்பட்டார். அக்பரின் ஆட்சி உறுதிப்-பட்டது. குவாலியர், ஜான்பூர் ஆகியனவும் இணைக்கப்பட்டன. பைராம்கானை, காப்பாளர் நிலையில் இருந்து நீக்கிவிட்டுப் பதினெட்டாம் வயதில் அக்பர் முழு ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றார். அக்பருடைய தாய், மற்றும் செவிலித்தாய் ஆகியோரை மய்யமாக வைத்துக் குழுவாகச் சிலர் கூடினர்; பூசலிலும் அதிகாரம் செலுத்துவதிலும் ஈடுபட்டனர். செவிலித்தாயின் மகன் ஆதம்கான், அவர்களில் ஒருவர், அக்பரின் நம்பிக்கைக்குரிய அமைச்சர் சம்-சுத்தீன் என்பவரை, அரண்மனைக்குள்ளாகவே ஆதம்கான் கொன்றான். அக்பரால் இதைப் பொறுக்க-முடியவில்லை. தனது முட்டியால் தாக்கிக் கொலைகாரனை வீழ்த்தினார்; பின்பு அவனைக் குண்டுக்கட்டாகக் கட்டி, கோட்டைச் சுவரின் மேல் இருந்து உருட்டிவிடச் செய்தார். இவ்வாறு, ஆட்சிக்குக் கேடு-செய்யும் உள்பூசலை 20 ஆம் வயதில் முடிவுக்குக் கொண்டுவந்தார். கிட்டத்தட்ட தம் இறுதிக் காலம் வரை அக்பர் தம் அரசின் எல்லையை விரிவுபடுத்திக்-கொண்-டேயிருந்தார். போரிட்டு வெற்றி-பெற்றோ, ஒப்பந்தங்களின் மூலமோ புதிய நாடுகளை இணைத்தார். புதிதாக இணைக்கப்பட்ட அரசு-களின் ஆட்சிப் பொறுப்பை, அவற்றை முன்பு ஆண்டு-கொண்டிருந்த-வர்களிடமே பெரும்-பாலும் விட்டுவைத்தார். மாளவம், கோண்டுவானா ஆகிய-வற்றை வென்ற பின்பு காபூலில் தம் ஒன்றுவிட்ட சகோ-தரரின் கிளர்ச்சியை ஒடுக்கினார். ரஜபுத்திர அரசுகளைத் தம் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவர அக்பர் விரும்பினார். அவருடைய விருப்-பத்திற்குப் பணிந்த ஜெய்பூர் அரசரின் மகளை மணந்தார். மேவார் நாட்டின் ராணா பணிய மறுத்தார். அவருடைய சித்தூர் கோட்-டையை அக்பரின் படை முற்றுகையிட்டது. கடும் போருக்குப் பின்பு, பெரும் சேதம் உண்டாக்கி, அதைக் கைப்பற்றியது (1568). ஆனால், ராணா உதய்சிங் தப்பி-விட்டார். உதய்பூர் என்ற புதிய நாட்டை உருவாக்கினார். இருப்-பினும், ரன்தம்பூர், பிகானீர், ஜெய்-சால்மர் ஆகியவற்றின் அரசர்கள் அக்பரின் மேலாதிக்கத்தை ஏற்றனர். ராஜபுடானா எனும் புதிய மாநிலம் (சுபா) உருவாயிற்று. அதற்கு ஆஜ்மீர் தலைநகர். ரஜபுத்திர அரசர்களும் இளவரசர்-களும் மொகலாயப் பேரரசில் படைத்தலைவர்களாகவும், சிறந்த செல்வாக்கான நிர்வாகிகளாகவும் ஆக முடிந்தது. குஜராத், பிஹார், பெங்கால், காஷ்மீர், சிந்து, ஒரிசா, காந்தஹார், பிரார் (விதர்பா), அகமது நகர், அசிர்கார் ஆகிய பகுதிகளையும் அக்பர் தமது பேரரசில் சேர்த்தார். மொத்தம் 15 சுபாக்கள் (மாநிலங்கள்) அவருடைய ஆட்சியின் கீழ் இருந்தன. சிறந்த நிருவாகம் துணிந்த திறமையான போர்க்கள வீரராகவும் தளபதியாகவும் விளங்கிய அக்பர், மக்கள் நலம் நாடிய சிறந்த ஆட்சியாளர் என்பதையும் மெய்ப்பித்தார். முஸ்லீம்கள் அல்லாதவர் மீதான ஜிசியா எனும் வரியையும், இந்துக்கள் மீதான யாத்திரை வரியையும், போரில் பிடிக்கப்பட்டவர்களை அடிமைகளாக்கும் முறையையும் நீக்கி மக்களின் ஆதரவைப் பெற்றார். மத, இன வேறுபாடு பார்க்காமல், நிருவாகத்தை நன்கு நடத்துகிறவர்களைப் பதவியில் அமர்த்தினார். ராஜா தோடர்மால் அக்பரின் ஆட்சியைச் சிறக்கவைத்தார். ஹூமாயூனைத் தோற்கடித்து, சுமார் ஆறு ஆண்டுக்காலம் முற்போக்கான ஆட்சி நடத்தியவர், ஆஃப்கானியரான ஷெர்ஷா. அவரைப் பின்பற்றி நிலவரியை ராஜா தோடர்மால் சீராக்கினார். நிலவுடைமையின் பரப்பு, நிலத்தின் வளம், பயிரின் தன்மை ஆகியவற்றிற்குத் தக வரி நிர்ணயிக்கப்பட்டது. கட்டவேண்டிய வரியின் அளவு உறுதியான-தால், வசூல் செய்வதில் கொடுமையும் ஊழலும் ஒழிந்தன. மதம் கடந்த நோக்கு முஸ்லீமாகப் பிறந்து வளர்ந்து, அவ்வாறே மறைந்தார் எனினும், அக்பர் மதத்தில் பிடிவாதக்காரர் அல்லர். அவருடைய புதிய தலைநகரான ஃபடேபூர் சிக்ரியில் வழிபாட்டு அரங்கம் அமைத்தார் (1575). அங்கு முஸ்லீம் மவுல்விகள், இந்துப் பண்டிதர்கள், சமண மற்றும் பவுத்தத் துறவிகள், பாரசீகரின் ஜொரோஸ்டிர மதத்தவர், கிறித்துவ ரோமன் கத்தோலிக்கர், கடவுளை மறுக்கும் உலகாயதக் கொள்கையர், யூதர்கள் ஆகிய மாறுபட்ட வழியினர் விவாதம் செய்வதை ஈடுபாட்டுடன் கேட்டுப் பயன்பெற்றார். மதக் கோட்பாடுகள், மற்றும் சட்டங்களில் மவுல்விகளுக்கு இடையில் வேறுபாடு எழும்பொழுது, தம்முடைய முடிவே இறுதியானது என்றும், அதைத் தவறு என்று சொல்லாமல் அனைவரும் ஏற்கவேண்டும் என்றும் 1579 இல் ஆணை பிறப்பித்தார். எல்லா மதங்களிலும் இருந்து நல்லனவற்றை ஏற்று, 1582 இல் இறைநெறி (தீன் இலாஹி) என ஒன்றை உருவாக்கி அதற்குத் தாமே தலைமை ஏற்றார். ஓர் இறைக் கோட்பாடு, சூரிய வழிபாடு முதலியன அதில் காணப்பட்டன. அதில் சேரவேண்டுமென எவரையும் அக்பர் கட்டாயப்படுத்தவில்லை. 18 பேர் மட்டுமே அதில் சேர்ந்தனர். அக்பருக்குப் பின்பு அம் மதம் மறைந்தது. மதங்-களைக் கடந்த ஓர் இணைப்பை ஏற்படுத்துவதில் அக்பர் தோற்றார். எனினும் மதக் கொள்கைகள் விவாதத்திற்கும் மாற்றத்-திற்கும் உரியன என்ற அவருடைய பார்வை முற்போக்கானது. மதத்தின் பெயரால் உரிமை மறுத்தல், அடக்கிவைத்தல், சிறையிலிடுதல், சித்திரவதை செய்தல், உயிருடன் எரித்தல், தூக்கிலிடுதல், நாடுகடத்துதல் எனும் போக்குகள் மலிந்திருந்த காலத்தில் மதச் சகிப்புத் தன்மையைப் பின்பற்றிய அக்பர் மிக மிக உயர்ந்தவர் அல்லவா?
|
|