அமெரிக்காவை, அதிபர் ரூஸ்வெல்ட் ஆண்டபோது எத்தனையோ துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்தார். அப்போது, தமது கூர்மையான அறிவாலும், புத்திசாலித்தனத்தாலும் அவர் எதிர்கொண்டு வெற்றிபெற்ற ஒரு சிறிய நிகழ்ச்சியினை இங்குக் காண்போம். எதிர்பாராத நேரத்தில் அமெரிக்காவின் மீது ஜப்பான் போர் தொடுத்தது. அமெரிக்காவின் முக்கியமான கடற்படைத் தளங்களில் ஒன்றான பெர்ல் என்ற துறைமுகத்தைச் சேதப்படுத்திக் கைப்பற்றிவிட்டது. அதிபர் ரூஸ்வெல்ட்டிற்குச் செய்தி சென்றதும், தனது கடற்படை வீரர்களின் (29பேர்) திறமையை யோசித்து, வயதில் இளைஞரான அட்மிரல் செஸ்டர் நிமிட்சை அழைத்துப் பொறுப்பை ஒப்படைத்தார். பிற வீரர்களுக்கு இது அதிருப்தியை ஏற்படுத்தியது. அதிபரோ அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. நிமிட்ஸ், பெர்ல் துறைமுகத்திற்கு விரைந்தார். அடுத்துச் செய்ய வேண்டிய செயல்களைச் சிந்தித்துத் திட்டமிடுகிறார்செயலில் ஈடுபடத் தொடங்குகிறார். முதலில், நம்பிக்கையிழந்த நிலையில், மனச்சோர்வுற்றிருந்த சக வீரர்களுடன் பேசுகிறார். அவர்கள் மனதிலும் முகத்திலும் நம்பிக்கை ஒளியினை ஏற்படச் செய்கிறார். தாங்கள்தான் வெல்வோம், வெற்றி நமக்கே என்ற எண்ணத்துடன் அனைவரும் விரைந்து சென்று, எதிரிகளுடன் போரிட்டு வெற்றிவாகை சூடுகின்றனர். வெற்றிச் செய்தியறிந்த பத்திரிகையாளர்கள், அமெரிக்க அதிபரைச் சந்தித்து வாழ்த்துக் கூறுகின்றனர். பின்பு, வயதில் பெரியவர்கள், அனுபவமிகுந்தவர்கள் தங்கள் படையில் பலர் இருந்தபோதிலும், வயதில் குறைந்தவரான நிமிட்சைத் தேர்ந்தெடுத்த காரணம் என்ன என்று கேட்கின்றனர். அதற்கு அதிபர், 1. ஒன்றை எப்படிச் செய்தால் எப்படி முடியும் என்பதைக் கணிப்பதில் வல்லவர் நிமிட்ஸ். ஆனால், அவர் அதனை ஒருபோதும் வெளிக்காட்டிப் பறைசாற்றியதில்லை. 2. சிறு பிரச்சினைகள் வந்தபோதுகூட பிற வீரர்கள் நிலைகுலைந்தனர். ஆனால், நிமிட்ஸ் எப்போதும் நிதானம் இழந்ததில்லை. 3. என்ன நடந்த போதும், எது நடைபெற்றாலும் தன்நிலை மாறாத உறுதிப்பாட்டுடன் இருந்தார். மலையைக்கூட அசைத்துவிடலாம். அவரது மன உறுதியை அசைக்க முடியாது என உணர்ந்தேன். பெரிய பதவிக்கு தலைமைப் பதவிக்குத் தகுதியானவர் என்று முடிவு செய்தேன் என்று கூறி, மேலும் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்து சொல்கிறார். கடலின் மேல்தளத்தில் கப்பல் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதில் உயர் அதிகாரிகள், நிமிட்ஸ் ஆகியோர் தங்களது பணிகளைச் செய்து கொண்டிருந்தனர். திடீரென கப்பல் மூழ்கும் அபாயகரமான சூழ்நிலை ஏற்பட, அனைவரும் பதற்றமடைந்தனர். கேப்டனும் செய்வதறியாது திகைத்தார். யாருக்கும் எதுவும் புரியாத சூழல். நிமிடத்திற்கு நிமிடம், விநாடிக்கு விநாடி கப்பல் கடலுக்குள் மூழ்கியபடி இருந்தது. கப்பலின் மற்றொரு தளத்தில் பணியாற்றிய நிமிட்சைத் தேடி ஓடினார் கேப்டன். பேராபத்தை ஓரிரு விநாடிகள் பதற்றத்துடன் விளக்கினார். நிமிட்ஸ் ஒரு வினாடிகூட பதற்றப் படாமல் யோசிக்காமல் தாமதிக்காமல் கூறினார். நீங்கள் உடனடியாக கப்பலின் மேல்தளம் சென்று பார்டன் எழுதிய என்ஜினியரிங் மானுவல் என்ற நூலைப் படியுங்கள். நூலின் 84 ஆம் பக்கத்தில் இப்படி ஒரு சூழ்நிலையில் என்ன செய்வது என்பது பற்றிய விளக்கம் இடம் பெற்றிருக்கும். அதன்படிச் செயலாற்றுங்கள் என உத்தரவிட்டு, தன் வேலையைத் தொடர்ந்தார். கேப்டனும் நூலில் எழுதப்பட்டிருந்த அறிவுரையின்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள, பேராபத்திலிருந்து அனைவரும் தப்பினர். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை, தான் செய்யும் தொழிலில் அக்கறை, ஆர்வம், பிரச்சினை ஏற்பட்டால் அதனைத் தீர்ப்பதற்குரிய கூர்மையான அறிவு ஆகியன தேவை. இத்திறமைகள் அதிபர் ரூஸ்வெல்ட்டிடம் மட்டுமா இருந்தது? நிமிட்சிடமும் இருந்ததால்தான் ஒரு நாட்டையே காக்கும் பொறுப்பை ஒப்படைத்தார் அதிபர். செல்வா
|
|