கழுதையின் சமாதி

ஒரு ஊரிலே ஒரு மாதா கோவிலிருந்தது. அக்கோவிலின் வருமானத்தில், ஒரு வயோதிகப் பாதிரியார், ஒரு வாலிபப் பாதிரியார், ஒரு கழுதை ஆக மூன்று சீவன்கள் வயிறு வளர்த்து வந்தன.
கொஞ்ச காலத்திற்குப் பிறகு, அக்கோவிலின் வருமானம் குறைந்து கொண்டே வந்ததால், அம்மூன்று சீவன்களின் பிழைப்புக்கும் நெருக்-கடியான நிலைமை ஏற்பட்டது.
ஒரு நாள் முதலாவது சீவனாகிய வயோதிகப் பாதிரியார் இரண்டாவது சீவனாகிய வாலிபப் பாதிரியாரை நோக்கி, ஓ! வாலிபரே! எப்படியோ இவ்வளவு காலமாக மாதா கோவிலின் வருமானத்தில்- நாம் வாழ்ந்து விட்டோம்! இப்போதோ வருமானம் மிகவும் குறைந்து விட்டது. இனி இக்கோவிலையே நம்பினோமானால், நம் கதி அதோகதியாகி விடும். ஆகையால், நீர் மூன்றாவது சீவனாகிய நமது கழுதையை ஓட்டிக் கொண்டு எங்கேயாவது போய்ப் பிழைத்துக் கொள்ளும். நான் மட்டும் இன்னும் கொஞ்ச நாள் இங்கேயே இருந்து பார்க்கிறேன் என்றார்.
நிலைமையை உணர்ந்த வாலிபப் பாதிரியார், வேறு வழியின்றி மாதா கோவிலை விட்டு கழுதையை ஓட்டிக்கொண்டு ஊர் ஊராய் அலைந்து திரிந்தார். ஒரு தொழிலும் கிடைக்கவில்லை.
என்ன செய்வார் பாவம்! வாலிபப் பாதிரியார் வயிற்றுக்கே போதிய உணவு கிடைக்காமல் திண்டாடும் போது கழுதைக்கும் சரியான உணவு கொடுத்துக் காப்பாற்ற அவரால் எப்படி முடியும்? கடைசியாக, கழுதையும் மெலிந்து வழியில் நடக்கக்-கூடச் சக்தி இல்லாமல் கால் இடறிக் கீழே விழுந்ததும் செத்துப் போய் விட்டது.
அப்போது, வாலிபப் பாதிரியார் மிக மிக வருந்தினார். தனது கடைசிக் கைமுதலாக இருந்த கழுதையும்செத்துப்போகவே, தனக்கேற்பட்ட வறுமையின் கொடுமையை நினைத்துக் கண்ணீர் கொட்டிக் -கதறி அழுதார். வறுமையால் வருந்துபவர்களுக்குத்தானே திருட்டுப்புத்தி உண்டாகிறது! அதுபோலவே வாலிபப் பாதிரியாருக்கும் ஒரு சூழ்ச்சி உதயமாகி-விட்டது.
உடனே, அங்கேயே கழுதையின் சவத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, அவ்வழியே செல்லும் வழிப்போக்கர்களிடம் ஓ! மகாஜனங்களே! இங்கு ஒரு மகான் சமாதி ஆகியிருக்கிறார். இவருக்குக் கோவில் கட்டுவதற்காக உங்களால் இயன்ற தர்மம் கொடுங்கள்! உங்களுக்கு மிகவும் புண்ணியம் உண்டாகும்!! என்று பல தினங்களாகத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார்.
அந்த வாலிபப் பாதிரியார் எதிர்பார்த்தபடியே நாளடைவில் அதிகப் பணம் குவிந்துவிட்டது. அதில் கொஞ்சம் செலவு செய்து அங்கோர் புதிய மாதா கோவிலும், அதற்கு அருகிலேயே தனக்கோர் மாடிவீடும் கட்டிக்கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
பிழைக்கும் வழியைக் கற்றுக் கொண்ட வாலிபப் பாதிரியாரின் சூழ்ச்சியினால் தோன்றிய புதிய மாதா கோவில் உலகப் பிரசித்தி பெற்று விளங்க ஆரம்பித்து விட்டது.
அதைக் கேள்விப்பட்டு, வயோதிகப் பாதிரியார் ஒரு நாள் புதிய மாதா கோவிலைப் பார்க்க வந்தார். அங்கு, புதிய மாதா கோவில் அதிகாரியாக இருக்கும் பழைய வாலிபப் பாதிரியாரைக் கண்டதும் ஆச்சரியத்தால் அப்படியே திகைத்து நின்றுவிட்டார்.
பிறகு, வாலிபப் பாதிரியார் அந்த வயோதிகப் பாதிரியரை அழைத்துக் கொண்டுபோய்த் தன் மாடி வீட்டையும், அதிலுள்ள செல்வங்களையும் காட்டி மகிழ்ந்தார். இவ்வளவு செல்வங்களும் உமக்கு எப்படிக் கிடைத்தன? என்று வயோதிகப் பாதிரியார் வியப்புடன் கேட்டார்.
கழுதையின் சமாதி என்று சுருக்கமாகப் பதில் சொல்லி விட்டுச் சற்றுப் பெருமையோடு நிமிர்ந்து வயோதிகப் பாதிரியார் முகத்தை வாலிபப் பாதிரியார் பார்த்தார். பிறகு, தான் செய்த சூழ்ச்சி முழுவதையும் விளக்கமாகக் கூறி, என்ன இருந்தாலும், வாலிபர்! வாலிபர்தான்!! வயோதிகர்களுக்குச் சமய சந்தர்ப்பம் போல் மூளை வேலை செய்யாது என்று கூறினார்.
வயோதிகப் பாதிரியார் அதைக் கேட்டுச் சிரித்துக்-கொண்டே வாலிபப் பாதிரியாரிடம் ஓ! வாலிபரே! வயோதிகர் மூளை இம்மாதிரிக் காரியங்களில், வாலிபர் மூளையை விட மிகவும் சிறப்பாக வேலை செய்யும் என்பதை நீர் இன்னும் தெரிந்து கொள்ளாதிருக்கிறீர்! நான் இது வரையில் உம்மைப் போல் யாரிடமாவது நமது பழைய மாதாகோவிலின் உண்மை வரலாற்றைக் கூறியதுண்டா? என்றார்.
வாலிபப் பாதிரியார் ஆச்சரியத்தோடு பழைய மாதாகோவிலின் உண்மை வரலாறு என்ன? என்று கேட்டார்.
நீர் ஓட்டிக்கொண்டு வந்த கழுதையின் தாயைத்-தான் அங்கே புதைத்து அத்தனைகாலமும் வாழ்ந்து வந்தோம்? என்றார் வயோதிகப் பாதிரியார்.
சிறுவர்களே! மக்கள் மனதில் கொண்டுள்ள மூடநம்பிக்கைகளுக்கும், கோவில் சமாதி முதலான வைகளுக்கும் இடையே உண்மை இல்லை என்பதை இம்மாதிரி மேல் நாட்டுக் கதைகளி-லிருந்து நீங்கள் தெளிவாக உணரலாம்!
- குடிஅரசு ( 9.10.1948 )
|