படித்தால் மட்டும் போதுமா?

இன்றைய குழந்தைகள் நாளைய கண்ணின் மணிகள் என்று பாரட்டப்படுவதைக் கேட்டிருக்கிறோம். நாட்டின் எதிர்காலம் இளைஞர்களிடம்தான் உள்ளது என்றும் பேசக் கேட்டிருக்கிறோம். நாளைய இளைய தலைமுறையான இன்றைய குழந்தைகளின் நிலை எப்படி இருக்கிறது என இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஓர் ஆய்வு 2009 நவம்பரில் எடுக்கப்பட்டது. பெரும் பகுதி நகர்ப்புறங்களிலும், சில கிராமப்-புறங்களிலும் பள்ளிக்குச் செல்லும் 40 ஆயிரம் குழந்தைகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போலோ மருத்துவமனை நிறுவனம் நடத்திய பள்ளிக் குழந்தைகள் உடல் நலன் குறித்த ஆய்வில் கிடைத்த முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன.

நகரமயமாகிய நிலை, மாறிவரும் வாழ்க்கை முறைகள், புதிய உணவுப் பழக்கங்கள், தொழில் நுட்ப வளர்ச்சியின் தாக்கம், இயந்திர மயமாகிப்போன வேலை முறை போன்ற காரணங்களால் இந்தியாவில் குழந்தைகள் ஆரோக்கியம் இல்லாமல் வளருகிறார்கள் என்கிறது அந்த ஆய்வு. சரி, அப்படி என்னதான் சொல்கிறது அந்த ஆய்வு.

நகர்ப்புறக் குழந்தைகளில் 34 சதவீதம்பேர் மோசமான உடல் நலத்துடன் உள்ளனர்.

62 சதவீத குழந்தைகள் உரிய நேரத்தில் உடலுக்குத் தேவையான சத்துணைவை சாப்பிடுவதில்லை.

நாள் முழுதும் பெரும்பாலும் நொறுக்குத் தீனிகளையே உண்ணுகிறார்கள்.

உடல் பருமனாக இருக்கிறார்கள்; உடல் பலமாக இல்லை. மாடிப்படி ஏறினால் மூச்சி றைக்கிறார்கள்.

65 சதவீத குழந்தைகளுக்கு தீர்வுகாண இயலாத தினசரி சிக்கல்களால் மனரீதியாக பாதிப்படைகிறார்கள்.

31 சதவீத குழந்தைகள் தினமும் மருந்து எடுத்துக்கொள்கிறார்கள். இதில் உடல் ஆரோக்கிய லேகியம், கால்சியம் மாத்திரைகள், ரத்த சுத்திகரிப்பு திரவ மருந்துகள், வைட்டமின் மாத்திரைகள், ஒவ்வாமைத் தடுப்பு மருந்துகளும் அடக்கம்.

மருத்துவமனைகளில் குழந்தைகளை அனுமதிப்பது அதிகரித்துள்ளது. 12 சதவீத குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக் கப்படுகிறார்கள். (பெரியவர்கள் 3 சதவீதம்தான் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்).

33 சதவீத குழந்தைகள் கண் கண்ணாடி அணிந்துள்ளனர்.

30 சதவீதம் குழந்தைகளுக்கு பற்களில் பிரச்சினை உள்ளது.

இதயநோய், புற்றுநோய், உயர்ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அறிகுறிகள் 67 சதவீத குழந்தைகளுக்கு உள்ளது.

31 சதவீத குழந்தைகள் தினமும் 400 மில்லி பால் கூட அருந்துவதில்லை.

37 சதவீத குழந்தைகள் தினமும் உணவுக்குப்பின் இனிப்பு சாப்பிடுகின்றனர்.

43 சதவீத குழந்தைகள் பழங்கள், காய்கறிகள் உண்ணுவதில்லை.

32 சதவீத குழந்தைகள் பிட்சா, பர்கர் போன்ற உணவை வாரம் மூன்று முறை முக்கிய உணவாக எடுத்துக் கொள்கின்றனர்.

35 சதவீத குழந்தைகள் வாரம் இருமுறையாவது ஃபாஸ்ட்புட் உணவுக் கடைகளில் உண்ணுகிறார்கள்.

30 சதவீத குழந்தைகள் தினமும் 4 முதல் 6 மணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பதில் நேரத்தைத் தொலைக்கின்றனர். இதனால் உடல் எடை அதிகரித்து உடற்பயிற்சிக்கு நேரமில்லாமல் போகிறது.

37 சதவீத குழந்தைகள் உடல் ரீதியாக தகுதிபெற்றவர்களாக இல்லை.

30 சதவீதக் குழந்தைகளுக்கு விளையாட நேரமில்லை.

30 சதவீத குழந்தைகளுக்கு தசை வலுவாக இல்லை _ 43 சதவீத குழந்தைகளுக்கு மூட்டு அசைவுகள் சரியாக இல்லை.

54 சதவீத குழந்தைகள் பள்ளிக்குப் பின் தனிப்பயிற்சிக்கு (டியூசன்) போக வேண்டும் என நினைக்கிறார்கள்.

54 சதவீத குழந்தைகளுக்கு தினமும் பள்ளி சென்று வர 2 மணி நேரம் ஆகிறது.

36 சதவீத குழந்தைகளுக்கு வீட்டுச் சூழல் பிடிக்கவில்லை.

40 சதவீத குழந்தைகள் பெற்றோரிடம் மனம் விட்டுப் பேசுவதில்லை.

16 சதவீத குழந்தைகள் நெருங்கிய உறவினர்களின் அன்புக்கு ஏங்குகிறார்கள்.

78 சதவீத குழந்தைகளின் பெற்றோர் பிரிந்து வாழுகின்றனர்.

17 சதவீத குழந்தைகளுக்கு குடும்பத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், சண்டைகள் பிடிப்பதில்லை.

40 சதவீத குழந்தைகள் அதிகப்படியான உடல்பருமன் கொண்டிருக்கின்றனர்.

19 சதவீத குழந்தைகள் படிப்பை சமாளிக்க முடியாமல் அவதிப்படுவதாகக் கூறுகின்றனர்.

நகர்ப்புரக் குழந்தைகளுக்கும், கிராமப்புறக் குழந்தைகளுக்கும் உடல் நலத்தில் பெரிய இடைவெளி இருந்தாலும் அனைவரும் மோசமான உடல் நலத்துடனேயே இருப்பதாக இன்னொரு ஆய்வு கூறுகிறது.

குழந்தை ஒரு நாள் பள்ளிக்கு செல்ல-வில்லை யென்றாலும் பெற்றோர்கள் வருத்தப்-படுகிறார்கள். ஆனால் குழந்தைக்குத் தேவையான விளை-யாட்டை ஊக்குவிக்க விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வு.

15 ஆண்டுகளுக்கு முன்புவரை (1990க்கு முன்பு) அதாவது தொலைக்காட்சிகளின் வரவுக்கு முன்னதாக அன்றைய குழந்தைகள் ஓரளவுக்கு வீட்டுக்கு வெளியேயும், தெருக்களிலும், அக்கம் பக்கத்திலும் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். கல்வியில் கூட இப்போது உள்ளதுபோல பெரும் போட்டி அப்போது இல்லை. ஆனால் இன்றைய நிலை என்ன என்பதை மேலே படித்த ஆய்வு முடிவு அபாய அறிவிப்பாகக் கூறிவிட்டது.

உலக சுகாதார அமைப்பு (கீபிளி) குழந்தைகளின் உடல் நலம் பற்றிக் கூறும்போது, குழந்தைகள் தினந்தோறும் 60 நிமிடங்கள், அதாவது ஒரு மணி நேரம் உடற்பயிற்சியில் ஈடுபடவேண்டும் என்கிறது. மேலும் எலும்பு வளர்ச்சி மேம்படவும், தசைகள் வலுப்பெறவும், உடல் வளைந்துகொடுக்கும் தன்மை வளரவும் வாரத்திற்கு இரண்டு முறையாவது உடல் ரீதியான பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்றும் கூறுகிறது.

ஆனால் யதார்த்தம் அப்படி இல்லை. நோயற்ற வாழ்வுதான் குறைவற்ற செல்வம் என்பது நமது முன்னோர் மொழி. உடல் வலு இல்லாத ஒரு தலைமுறை உருவாவது ஒரு நாட்டின் மக்கள் சமூகத்துக்கு உகந்ததுதானா என்பதை பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும் என்பதையே இந்த ஆய்வு உணர்த்துகிறது. பிள்ளைகள் படித்து விட்டால் போதும் என்று கருதுவது சரியா? கல்வி அறிவும், உலக அறிவும் வேண்டும்தான். ஆனால், உடல் நலம் இல்லையென்றால் அவற்றால் பலன் உண்டா? சிந்திப்போம்.

-_ பிஞ்சு மாமா

Archives

பெரியார் பிஞ்சு

2009

?பெரியார் பிஞ்சு

2008